Posts

Showing posts from August, 2018

க்ருஷ்ணமாதுரி - 41

Image
பௌர்ணமி அலையின் பேரிசை  வெளியில்.. உள்ளே  அதற்கேற்ப நிசப்தமாய்  உன் குழலிசை.. நானோ.. ஒலிக்கும் அமைதிக்கும்  நடுவில்... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 40

Image
கருநீல வர்ணத்தில்.. குண்டாய்.. குள்ளமாய்.. ம்ருதுவாக.. உருண்டு திரண்டு.. அதீத சுவையுடன்.. ஏனோ.. கத்தரிக்காயைப்  பார்த்தால்  உன் நினைவு வருகிறது.. தவறு என் மேல் இல்லை.. கோபிக்காதே கண்ணா... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 39

Image
வானத்தை எதிரொளிக்கும் நீர்நிலையாய்.. உன்னை எதிரொளிப்பதாக எண்ணி நான்  தினம் தினம் அணிவதெல்லாமே நீல ஆடைகள்தாம்... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 38

Image
என் மனக்கதவு திறக்க இசைக்கருவிகளைத் திறக்கவேண்டியதில்லை. மூங்கிலின் துளைகளை மூட இயலுமா என்ன? என் முகாரியை நிறுத்த ஓடிவரட்டும்  உன்  அதராம்ருதவர்ஷிணி... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி- 37

Image
ஒரு கட்டையில் ஒரே மாதிரி  ரீங்கரிக்கிறது இந்த வண்டு... ஓ.. உன் குழலிசைக்கு ஸ்ருதி சேர்க்கிறதோ.. சலசலவென்ற யமுனையின்  பக்க வாத்யமும்  தயார்.. சேர்ந்திசைக்கு குயிலும் தயார்.. மயங்குவதற்கு மூவுலக ஜீவராசிகளும் வந்தாயிற்று. உன் இடுப்பெனும்  பஞ்சு மெத்தையில் உறங்கியது போதும்.. அந்தக் குழலை எழுப்பிக்  கச்சேரியைத் துவங்கு... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 36

Image
எவரெனைக் காணினும் உனை நினைவூட்டும் காகமாவேனோ.. புரியாவிட்டாலும் விடாமல்  உன் பெயரைச் சொல்லும் கிளிப்பிள்ளையாவேனோ.. பஞ்சமஸ்வரத்தில் இனிக்கும் குரலில் உன் புகழ் பாடும் குயிலாவேனோ.. குப்பையிலும்  தானியம் தேடிக் கொறிக்கும் கோழியாக விஷய விஷங்களுக்கிடையில் விஷ்ணுவைத் தேடுவேனோ... தொலைவு அதிகமானாலும் கூர்ந்துனை நோக்கும்  கழுகாவேனோ.. உன் முக சந்த்ரனை  எதிர் நோக்கி  உயிர் வாழும்  சகோரமாய் ஆவேனோ.. பாலெது நீரெதுவெனத் தெரிந்து உன் அன்புப்பாலைப் பருகும்  அன்னமாவேனோ.. எப்போதும் உனை நோக்கி விழித்திருக்கும் ஆந்தையாவேனோ..  எப்பறவையானாலும் எனக்கேற்பு கண்ணா.. பறந்து வந்து  உன் தோளில் அமரும்  வரம் தா... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 35

Image
ஆறு பேசுகிறது காற்று பேசுகிறது வானம்  மரம் மலர் பறவை  எல்லாம் பேசுகிறது என்று  ஒவ்வொன்றின் பின்னாலும் சென்று  உற்று உற்றுக் கேட்டு பக்கம் பக்கமாய்  உளறிக்கொட்டி கிளறி மூடிக்கொண்டிருந்தேன். மடப்பெண்ணே.. வெளியில் என்ன தேடுகிறாய்? நான் இங்கிருக்கிறேன் என்பதாய்.. களுக்கென்று  நீ சிரிக்கும் சத்தம்  உள்ளிருந்து  துல்லியமாய்க் கேட்கிறது... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 34

Image
தேடி தேடி சொற்களைக் கோத்து உனக்கான ஒரு மடல்  எழுதிவிட்டேன்.. எப்படி அனுப்புவது? முகவரி? பாற்கடல்?  தபால்துறையின் எல்லைக்குள் இல்லை.. த்வாரகை?  அது கடலுக்குள்.. ப்ருந்தாவனம்?  முழுவதுமாய் நிரம்பி இருக்கிறாய்.. கண்டுபிடிப்பது கடினம் இதோ சரியான முகவரி.. கண்ணன், என் மனம் என் பெயர்... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 33

Image
குடையாய் நின்று அண்டியவரைக் காக்கும் பொருட்டு வளைந்த  உன் பாதத்தின்  நடுப்பகுதி தரையில் படாதாம்.. அவ்விடத்து மண்துகள்கள் ஏங்கிப்போகின்றனவாம்.. நீ தேய்த்து நடப்பதன் காரணம்  இன்றுதான் புரிந்தது... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 32

Image
யாருமில்லையென்று  கத்திச் சொன்னாலும்,  நீ  அருகில் இருப்பதை உணரும் தருணத்தில் நெஞ்சோடு சொன்னாலும்,  உனக்குப் புரிகிறதா  என்பது சந்தேகமே.. நந்தன் செருப்பைத்  தள்ளாடி தள்ளாடிச் சுமந்த அதே கரத்தின் ஒற்றை விரலால்தான் மலை தூக்கினாய்.. எல்லாம் அறிந்தவனாயினும்  நீ என்னை மட்டும்  உன்  அறியாமையால்  ஆட்கொள்கிறாய்... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 31

Image
இடுப்புத் தழும்பை மறைத்து லாவகமாய் அமர்ந்திருக்கும் குழலை இரு விரல்களால் உருவி முழுவதும் தடவிக் கொடுத்து பட்டும் படாமலும்  பூவிதழில் வைத்து  நீ  ஸ்ருதி சேர்க்கும்போது, உன் பட்டு விரல்கள் பட்டுச் சிலிர்த்து செல்லமாய்ச் சிணுங்கும்  ஒரு மாத்திரை ஒலி,  என் நாளை நிறுத்திவிடுகிறது... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 30

Image
  கருநீலவானில் மின்னலாய் அவ்வப்போது உன் எண்ணம் பளீரிடுகிறது.. உன்  கருணை மழை  எனை ஆட்கொள்ள சிறு மின்னலே போதுமானது... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 29

Image
உன்  காலக் கணக்கு  சுலபமானது.. என்  பாவபுண்ணியக் கணக்குகளை நோக்குகையில்..  நீயோ  பள்ளிக்குச் சரியாகப் போகாமல்  ஏய்த்தவன்.. அதனால்தானோ என்னவோ உன் பெயரைச் சொன்னதுமே, என் கணக்குகள் அனைத்தையும்  அழித்து   சூன்யமாக்கி என்னைப்  பூஜ்யமாக்கினாய்... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 28

Image
என் காலைத் தழுவும் ஒவ்வொரு அலையும் உன்னைப்பற்றிய  ஒரு செய்தியை  விட்டுச் செல்கிறது.. சில புரிந்தும் புரியாதன பலவும்.. உலகளந்த உன்னைக் கையளவு சொற்களால் அளக்கும்  என் முயற்சியும்  இவ்வலைகளைப் போன்றதே... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 27

Image
புயற்காற்றில் பறக்கும்  தென்னை ஓலைகளைப்போல்  திசைக்கொன்றாய்ப் பறக்கும் புலன்கள்.. ஆனால்.. அடிமரமான நீ என்னை  உன்னோடு பிணைத்திருப்பதால் நிம்மதிக்குக் குறைவில்லை... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 26

Image
நீ  ஒளிந்திருக்கும் இடத்தினின்று பெருகும்   நீலகாந்தியைத்  தொடர்ந்து வந்து  உன்னைப் பிடிப்பது  அவ்வளவு சுலபமாய் இல்லை எனக்கு.. ஓடிவந்து.. மேலேறி.. கீழே விழுந்து...  எழுந்து.. மேல்மூச்சு வாங்க.. வியர்வை சொட்ட.. அப்பப்பா.. ஒருவாறாய்ப்  பிடித்துவிட்டேன்.. ஆனால், மாட்டிக்கொண்டது நான்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 25

Image
உன் மாய வலை  மிகவும் கோரமாயிருக்கிறது.. என்  இதயம் கிழிக்கும்  பார்வைக் கத்தியால் அதை அறுத்தெறி.. காதுவரை நீண்ட உன்  மீன்விழியின் வலையே எனக்குச் சுகம்.. அதற்குள்  எனைச் சிறைப்பிடி.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 24

Image
அன்போ.. நட்போ.. உறவோ.. குருவோ..  இறையோ.. எல்லாம்  நீதான் எனக்கு.. யுகங்கள் தாண்டினாலும் கைவிடுவதும்  காப்பாற்றுவதும்  உன் முடிவு.. அதுவரை.... உன் பெயரோடு வாழும்  மனோபலம் கொடு... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 23

Image
நேற்றிரவு  வீடு முழுவதும் நீ  போட்டுவிட்டுப்போன வெண்ணெய்க்கோலத்தில் மனம் வழுக்கி  விழுந்து விட்டேன்.. தூக்கிவிட  இன்றிரவு வந்துவிடு... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 22

Image
நான்  ஒளிந்திருக்கும்  இடத்தை அறியாதவனா நீ.. தேடுவதுபோல் நடித்துக்கொண்டிருப்பது  உனக்கழகா? சீக்கிரம் கண்டுபிடி நீயாகவேண்டும் நான்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 21

Image
இம்மண்ணில்  உன் பாதங்கள்  மேவாத இடமில்லை.. எனவே.. வெறுங்காலுடன் நடக்கும்போது நீ  கூட வருவதாய்  உணர்கிறேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 20

Image
உன் அன்பு என்ன செய்யும்? குழந்தை முதல்  கிழவி வரை  அனைவரையும்  அழகாய்க் காட்டும்.. வறியவர் முதல்  இறைவன் வரை  அனைவர்க்கும் வழங்கச்  செய்யும்.. கானா முதல்  கர்நாடக இசை வரை அனைத்தும் நாவில் விளையாடும்.. காதில் விழும்  அத்தனை சொற்களையும் உன் பெயராய்  ஒலிக்க வைக்கும்.. நீ வருவதற்கு வாய்ப்பில்லை என்று நன்கறிந்த பின்னும், நப்பாசையால் நொடிக்கொருமுறை தேடும்.. வேம்பைச் சமைத்தாலும் தேனாய் இனிக்கும்.. என்னை  எனக்கே கண்டுபிடித்துத் தரும்.. நீ நான்  என்ற வித்யாசத்தை அறவே ஒழிக்கும்... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 19

Image
அன்பின் ஆதவனான உன் வெளிச்சத்தில்தான் அகிலமே இயங்குகிறது.. அதன் ஒளி  கண்ணைக் கூசுவதால் விழிகளை மூடிக்கொண்டு இருள் இருள்  என்று கதறிக்கொண்டிருக்கிறேன்.. என் விழிவாசல் திறக்க நிலவாய்  வரவேண்டும் நீ.. அதுவரை உன் மயில்பீலிக்குள் முகம் புதைத்திருப்பேன்... Previous    Home    Next

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (22)

Image
चिंतामणिर्लॊकसुकं  सुरद्रुः स्वर्गसंपदम् । प्रयच्छित गुरुः प्रीतॊ  वैकुण्ठं यॊगिदुर्लभम् ।। சிந்தாமணிர் லோகஸுகம்‌ ஸுரத்ரு: ஸ்வர்க ஸம்பதம்| ப்ரயச்சதி குரு: ப்ரீதோ வைகுண்டம்‌ யோகி துர்லபம் || (ஸ்ரீமத் பாகவத மாஹாத்ம்யம் 1:8) தேவர்கள் உலகில் விளங்குவது  சிந்தாமணி. இம்மணியை வைத்திருப்பவர்கள் இம்மண்ணுலகில் எல்லைக்குள் இருக்கும் எப்பொருளை விரும்பினாலும் உடனே  பெற்றுத்தரும். கற்பகத் தரு என்னும் மரமும் தேவர்களின் உலகில்‌ இருப்பதேயாகும். இம்மரத்தின் அடியில் நின்றுகொண்டு தேவர்கள் உலகம் வரை உள்ள எப்பொருளை விரும்பினாலும் உடனே பெற்றுத்தரும்.  இவ்விரண்டும் செயல்படுவதற்கு எல்லை உண்டு.  ஆனால்,  சிறிய சேவையே ஆனாலும், அதனால்  குரு மகிழ்வாரேயானால், யோகிகளும் அடைவதற்கு மிகுந்த சிரமப்படுவதானால் அந்த வைகுண்டத்தையே பெற்றுத் தந்து விடுவார்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (21)

Image
यत्र निर्विष्टमरणं कृतान्ते नाभिमन्यते । विश्वं विध्वंसयन्वीर्य शौर्यविस्फूर्जितभ्रुवा ।। யத்ர நிர்விஷ்டம் அரணம் க்ருதாந்தோ நாபிமன்யதே | விஶ்வம் வித்வம்ஸயன் வீர்ய ஶௌர்யவிஸ்பூர்ஜிதப்ருவா || (ஸ்ரீமத் பாகவதம் 4:24:56) தன் சக்தியாலும், பராக்ரமத்தாலும் புருவத்தை நெறித்து இந்த ப்ரபஞ்சத்தை அழித்தொழிக்கும் மரணதேவன் கூட  பகவானுடைய திருவடியில் அடைக்கலம் புகுந்தவரிடம் தன் அதிகாரத்தைச் செலுத்த இயலாது. அதாவது,பகவானின் அடியார்களுக்கு யமபயம் இல்லை.. Audio link: https://drive.google.com/file/d/1fN0wrvem2OJ2hH6br1FFTii0Y9lu1bPt/view?usp=drivesdk Picture:  Smt. Madhuri Saki with Takurji Keerthanavali Mandapam Kanchipuram

க்ருஷ்ணமாதுரி - 18

Image
நான் புறப்படுவது உனக்கெப்படித் தெரிகிறது? தொட்டுவிடும் தூரத்தில்  தொடர்ந்து வருகிறாய். நிழலைப் பிடித்து நீ எனை நிறுத்தும் சமயத்தில் மீண்டும் ஒரு புதிய பயணம்  துவங்கி விடுகிறேன். ஓய்வதேயில்லை நீயும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 17

Image
ஒரே ஒரு குழலிசையில் நம் சந்திப்பிற்கான அறிவிப்பைச் சொல்லி இந்த ப்ரபஞ்சத்தையே தயார் செய்துவிடுகிறாய் நீ.. ஆனால் நம் பிரிவைப் பற்றி  எனக்குக்கூடச் சொல்வதில்லை.. உன்னால் பட்ட  காயங்கள் அனைத்தும் உன்  அடுத்த இசையறிவிப்பில் காணாமல் போகின்றன.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 16

Image
பெரிய கள்வனாமே நீ.. முடிந்தால் என் மனக் கோட்டைக்குள்  நுழைந்து எனதைக்  கவர்ந்து செல்  பார்க்கலாம்.. ஒப்புக்கொள்கிறேன்  நானும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 15

Image
எங்கு நோக்கினும் உன் கால் தடங்கள் இந்த பூமியில்.. உன் பக்தர்களோ  விழுந்து புரள்கிறார்கள்.. நானோ உலகளந்த   உன் பாதச்சுவடுகளின் மேல் என் பாதம் வைத்து உனக்கும் எனக்குமான பொருத்தம் பார்க்கிறேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 14

Image
பொய்யிலே பிறந்து பொய்மைக் குளத்தில்  மூழ்கியிருக்கும் என்  விருப்புகள் முயற்சிகள்  அனைத்தும்  பொய்யே.. அவை எப்படி மெய்க்கும்? நீயோ  முக்காலத்தும் மெய்தானே.. உன் முயற்சி பொய்க்குமா.. உடனே வந்து மெய் தீண்டி எனையும் மெய்யாக்கிவிடு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 13

Image
பத்தடிக் குடிலில் புதுவெள்ளம் புகுந்தாற்போலாயிற்று.. தலை சுற்றுகிறது சுவாசிக்க இடமில்லை. பசியுமில்லை.. நாளங்கள ஒட்டிப்போனதால் உதிரம் ஓடுவதில்லை.. நிற்பது அமர்வது நடப்பது ஏன் படுப்பதுகூட இயலவில்லை.. அண்டம் தாங்கும் உன்னை அகத்தில் சுமப்பது அவ்வளவு சுலபமில்லை.. என்னையும் நீயே தாங்கிக்கொள்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 12

Image
நகரும் மேடையின் கவர்ச்சியில் மயங்கி அறியாமையால் ஏறிக்கொண்டேன்.. யுகம் யுகமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன் ஒரே இடத்தில்.. ஓட்டத்தை நிறுத்தினால் வீழ்வேன் என்று அச்சமாயிருக்கிறது.. இறங்கும் வழியோ  மறந்துவிட்டது.. அச்சம் நீக்கி  எனை அள்ளிக்கொண்டு போவாயா? Previous    Home    Next