திருக்கண்ணன் அமுது - 18
நீராட்டம் குழந்தை பிறந்ததும் நந்தன் அளவற்ற மகிழ்ச்சியுடன் பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்தார். குழந்தைப் பேறுக்காக, குலதெய்வத்திற்கும், மற்ற தெய்வங்களுக்கும், யசோதையும், நந்தனும் என்னென்ன நேர்ந்துகொண்டிருந்தார்களோ, அத்தனையும் நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. அந்தணர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏராளமான பசுக்களையும், வஸ்திரங்களையும், இன்னும் அவர்கள் விரும்பியவற்றையும் தானங்களாக வழங்கினார். கோகுலத்திலுள்ள அத்தனை வீடுகளிலும் அவரவர் வீட்டில் குழந்தை பிறந்ததைப் போல் மகிழ்ந்து தோரணம் கட்டி, வாசலில் தீபமேற்றி, பெரிய கோலங்கள் இட்டிருந்தனர். மகிழ்ச்சி மிகுதியால், ஆங்காங்கே கும்மியிட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தனர். ஆண்கள் பரவசத்தில் கைகளில் என்னென்ன சாமான்கள் கிடைக்கிறதோ எல்லாவற்றையும் கொண்டுவந்து தாளம் போட்டுப் பாடி ஆடினர். இரவும் பகலும் ஒரே மாதிரி இருந்தது, எப்போதும் ஜே ஜே என்றிருந்தது நந்தன் வீடு. குழந்தையைப் பார்க்க வரும் பலரும், பலவிதமான பரிசுப்பொருட்களால் நந்தன் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். கோபிகள் என்ன பரிசு கொடுப்பார்கள்? ராஜா வீட்டு அழகுக் குழந்தைக்கு...