திருக்கண்ணன் அமுது - 6

தெய்வ ஸங்கல்பம்

தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனுக்கு எமன் என அசரீரி சொல்லிற்று. அதைக் கேட்ட கம்சன் சினம் கொண்டு தேவகியைக் கொல்லத் துணிந்தான். வசுதேவர் கம்சனிடம் பலவாறு பேசி, தேவகியின் உயிரைக் காப்பாற்றிவிட்டார். ஆனால், கம்சன் இருவரையும் சிறையில் அடைத்துவிட்டான்.

இவற்றில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் உண்டு.
பிறந்ததிலிருந்து  கூடவே இருந்து சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தவன் தமையனான கம்சன். அவனோ, தனக்கு ஆபத்து என்றதும் சகோதரியையே கொல்வதற்காகக் கத்தியை உருவிக்கொண்டு வந்துவிட்டான்.

வசுதேவருக்கும் தேவகிக்குமான உறவு ஏற்பட்டு இன்னும் ஒரு நாள்கூட முழுதாக முடியவில்லை. ஆனால், அன்று காலையில் கைப்பிடித்த பெண்ணுக்காக, வசுதேவர் கத்தியை உருவிக்கொண்டு நிற்கும் கம்சனோடு தைரியமாக விவாதம் செய்கிறார். உருவிய கத்தியை கணநேரத்தில் இருவர் கழுத்திலுமே பாய்ச்சக்கூடியவன்  என்பதை நன்கு உணர்ந்திருந்தபோதும், மனைவியுடனான பந்தம் ஏற்பட்டுவிட்டதால், அவளைக் காக்கத் துணிந்தார். 

மந்திர பூர்வமாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு, பஞ்ச பூதங்களையும், பெரியோர்களையும் சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற திருமணம் தம்பதிகளின் வாழ்வில் அப்படி ஒரு பிணைப்பை ஏற்படுத்திவிடுகிறது.  இன்னொரு விஷயம் என்னவென்றால், தம்பதிகள் இருவரையும் ஒரே சிறையில் அடைக்கச்செய்தது.

வசுதேவரையும் தேவகியையும் தனித்தனிச் சிறையில் அடைத்துவிட்டால், எட்டாவதென்ன, முதற்பிள்ளைக்கே‌ வழியிருக்காது. இந்த விஷயத்தை சாதாரண மாந்தர்கூட எளிதாகப் புரிந்துகொள்வார்கள். கம்சன் அப்படிச் செய்திருந்தானானால், கோபப்படவும் வேண்டாம், பயப்படவும் வேண்டாம், தேவகியையும் கொல்லவேண்டாம். பல விஷயங்களைச் சட்டென்று யோசிக்கும் கம்சனுக்கு இந்த விஷயம் தோன்றவில்லை. தெய்வ ஸங்கல்பம் கண்ணை மறைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவனது நண்பர்களுக்கும் மந்திரிகளுக்கும்கூட இருவரையும் வெவேறு சிறையில் அடைக்கலாம் என்ற எண்ணம் தோன்றவேயில்லை.

இப்படித்தான் நமது வாழ்விலும், பல சின்ன சின்ன விஷயங்களும், அவற்றினால் ஏற்படும் பெரிய விளைவுகளும் கண்ணில் படாமல் போய்விடுகின்றன.

அரண்மனைக்குத் திரும்பிய கம்சனை உக்ரசேனர் கண்டித்தார்.
கம்சா, சொந்த சகோதரியைக் கொல்லத் துணிந்துவிட்டாயா? 
என்று அவர் கேட்டதுதான் தாமதம், கம்சனின் வாள் அவரது கழுத்தில் இருந்தது. அவர் நேர்மறையாளர், எதையாவது செய்து வசுதேவரையும் தேவகியையும் விடுவித்துவிடுவார். மேலும் அவர் அரசர் என்பதால், தான் அவர் சொல்லைக்‌ கேட்காவிட்டாலும் மற்றவர்கள் அரச கட்டளைக்குக் கீழ்ப்படிவார்கள். எனவே, அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தான்.

தனக்குத்தானே பட்டாபிஷேகம் செய்துகொண்டு, அரசுகட்டில் ஏறினான். தனக்கேற்றவாறு ஒரு மந்திரிசபையை அமைத்துக் கொண்டான். 

ப்ரலம்பன், பகன், சாணூரன்,  பூதனை, த்ருணாவர்த்தன், முஷ்டிகன், அரிஷ்டன், த்விவிதன், கேசி, தேனுகாசுரன், போன்ற மந்திரிகளைக்  கொண்ட அற்புதமான சபை. 

வசுதேவருக்கு தேவகியைத் தவிர இன்னும் சில  மனைவிகள் இருந்தனர்.  அவர்கள்  எல்லோரும் கம்சனுக்கு பயந்து, தத்தம் பிறந்தகம்‌ சென்று விட்டனர். ரோஹிணியை‌ மட்டும், வசுதேவர் தமது நண்பரான நந்தனின் பாதுகாப்பில் சென்று வசிக்கும்படி வசுதேவர் அவளுக்குச் செய்தி அனுப்பினார். அவளும் நந்தகோகுலம் சென்று வசிக்கலானாள். 

சில காலம் சென்றதும் தேவகி தன் முதல் குழந்தையை ஈன்றெடுத்தாள்,
அவனுக்கு கீர்த்திமந்தன் என்று பெயரிட்டார் வசுதேவர். பின்னர் அவர் தான் சொன்ன சொல்லைக் காக்கும் பொருட்டு பிறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு கம்சனிடம்‌ சென்றார். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37