ப்ருந்தாவனமே உன் மனமே - 37

மலையேந்தும் விரல்

குடையைப் பிடிக்கவே நமக்கு ஐந்து விரல்கள் தேவையாயிருக்க, மலை பிடிக்க பகவானுக்கு ஒரு விரலே போதுமாயிருந்தது.

நந்தனுக்குப் பெருமை பிடிபடவில்லை. 
பார், என் பையனாக்கும் மலைய தூக்கறான் 
என்று பெருமையடித்துக் கொண்டிருந்தான்.

யசோதைக்கு மிகுந்த கோபம். நந்தனை இடித்துப் பேசினாள். ஊரைக் காப்பாத்தும் பொறுப்பு உமதாயிருக்க, என் பிள்ளை இளிச்சவாயனா? அவன்தான் மலைய தூக்கணுமா? அதான் தடி தடியா இத்தனை பேர் வேலைக்கு வெச்சிருக்கீங்களே. அவங்கள யாரையாவது தூக்கச் சொல்லுங்க. என் பிள்ளை சின்னக் குழந்தை.. பாவம். 

என்றாள்.

கோபச்சிறுவர்கள் எல்லாருக்கும் குஷி. 
கண்ணா, நாங்க நல்லா ‌கெட்டியா மரம் குச்சியெல்லாம் கொண்டு வரோம். அங்கங்க முட்டுக் குடுத்து இந்த மலையை‌ நிக்க வெச்சுட்டு‌ வா, கொஞ்ச நேரம் கோலியடிச்சு விளையாடலாம்

என்று கூப்பிட்டனர்.

வயதான பாட்டிகள் அங்கேயே ஓரமாய் அமர்ந்து பாக்கு இடிக்கத் துவங்கினர்.

கோபிகளின் ஆனந்தத்தை சொல்ல இயலுமா?
இரண்டு வருடங்களாக தினமும் காலை மாடு மேய்க்கச் செல்லுமுன் ஒரு தரிசனம், திரும்பி வரும்போது ஒரு தரிசனம், இவர்கள் காட்டு வழி சென்றால், எப்போதாவது ஒரு தரிசனம் அவ்வளவுதான்.

மழை வந்தாலும் வந்தது, கண்ணன் மலையைத் தூக்கினாலும் தூக்கினான், இப்போது இரவு பகலாக அவனைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாமே.

குட்டி கோபிகள் கண்ணனிடம் சென்றனர்.

கண்ணா உனக்கு கை வலிக்குதா? எங்களுக்காக கஷ்டப்படாதே கண்ணா, நாங்கள் சட்டினியானாலும் பரவால்ல. நீ மலையைத் தூக்கறியே. 
என்று அவன் கையைத் தடவித் தடவி முத்தமிட,

சிரித்த கண்ணன்..

நீங்க இப்படி முத்தம் கொடுக்கறதா இருந்தா இன்னும் எத்தனை மலையை வேணாலும் தூக்குவேனே என்றான்.

வெட்கம் மேலிட ஓடிவிட்டனர் குட்டிப் பெண்கள்.

ஆக, ஒருவருக்கும் 
மலையை ஒருவரால் தூகமுடியுமா, இது அற்புதமாயிற்றே என்ற சிந்தனைகூட வரவில்லை.

கண்ணன் 
தான் சிரமப்படவில்லை, லீலையாகத்தான் மலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதாக, ஒரு காலை மாற்றி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால், குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

அவனது வேணுகானத்தில் மயங்கி மாடுகள் உள்பட அனைவரும் பசி, தாகம், உறக்கம் அனைத்தையும் மறந்து காதுகளால்‌ குழலமுதத்தையும் விழிகளால் ரூபாம்ருதத்தையும் பருகிக்கொண்டு சிலைகளாகிப் போயினர்.

கோவர்தன மலையோ, தன் பக்தியினால் கண்ணனுக்கு சேவை செய்து கொண்டிருந்தது. அதன்‌மீது விளையும் செடிகொடி‌மரங்களே ரோமாஞ்சனமாக, 
சுனைகளிலிருந்து பெருகும் நீர்‌ ஆனந்த பாஷ்பமாக, ஹ்ருதயகுகையில் பகவானை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தது. 

அதன் பக்தியை மெச்சித்தான் கண்ணன் தன் தலைக்கு மேல் அதைத் தூக்கிக் கொண்டாடினான் போலும்.

வருணன் அத்தனை ப்ரளய கால‌ மேகங்களையும் கூட்டி, விடாமல்‌ மழையைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1