உறங்கும் முன்... - 1

திருட்டுப்பையனின் வெகுளித்தனம்..


கோடி வீட்டு கோபி வைத்துவிட்டுப்போன பானைகள் அனைத்தும் கபளீகரம்செய்தாயிற்று. எப்படியோ யசோதா கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பட்டு மஞ்சத்தில் வந்து உறங்குவதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும் கண்ணனைப் பார்த்து யசோதைக்கு ஒருபுறம் பாவமாக இருந்தாலும், இன்னொரு புறம் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. தன்னை மீறி கலகலவென்று சிரிக்க, அம்மா சிரிப்பதைப் பார்த்து அதற்கு மேல் நடிக்க முடியாமல் கள்ளக் கண்ணனும் சிரித்துவிட்டான். அவ்வளவுதான், சிரிப்பை மறந்துவிட்டுப் பாலை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள் யசோதை.



தொப்பை நிறைய வெண்ணையும் பாலும் விழுங்கிப் போதாக்குறைக்கு குரங்குக்கும் ஊட்டி விட்டாயிற்று. மதியம் பருப்புசாதத்தை ஏமாற்றி ஊட்டி விட்டாள். இப்பொழுது பால். எப்படிக் குடிப்பது?


ஆரம்பித்தான்,
அம்மா அதான் சமத்தா பருப்பு சாதம் சாப்பிட்டேனே. பால் வேறு குடிக்கணுமா?


ஆமாண்டா கண்ணா. நம்ம வீட்டு மாடெல்லாம் உனக்காகத்தான் கறக்கறது. நீ குடிக்க வேண்டாமா?


கன்னுக்குட்டிக்கு வேண்டாமா?


கன்னுகுட்டியெல்லாம் குடிச்சாச்சுடா. என் சமத்துக் கன்னுக்குட்டி நீதான் இன்னும் பால் குடிக்கல.


அம்மா பால் குடிச்சா என்னாகும்?


ம்ம்ம்.
ராதாவுக்கு இருக்கற மாதிரி நீளமா முடி வேணும்னு கேட்டியே... பால் குடிச்சா நீளமா முடி வளரும்...


நிஜமாவாம்மா?


ஆமாண்டா


அப்டின்னா சரி, குடு

ஒரு வாய் குடித்துவிட்டு தலையைதொட்டுப் பார்க்கிறான்.


அம்மா முடி வளரவேல்லியே.


ஒரு வாய் குடிச்சா வளருமாடா
இதை முழுசும் குடி. அப்பதான் வளரும்.


அப்டியா?

முழுதும் குடித்துவிட்டுத் தொட்டுப் பார்க்கிறான்.
அம்மா இப்பவும் வளரலியே.


இது மாதிரி தினமும் அம்மாவை படுத்தாம பசும்பால் குடிக்கணும்டா. அப்பத்தான் வளரும்.

கண்ணன் திருதிருவென்று விழிக்கிறான்.


கோகுலத்திலுள்ள அத்தனை கோபிகளிடமும் செல்லுபடியாகும் அவனது திருட்டுத்தனம் யசோதையின் அன்பின் முன் வெகுளித்தனமாயிற்று..


மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..


ராகம் ஹிந்தோளம்

க்ஷீரம் ஸ்வீகுரு க்ஷீராப்திசயன
மந்தஹஸனமுக மதன விலாஸ
மணிநூபுரதர மங்களதாயக (க்ஷீ)

ரத்னகசிதமிதம் ஸ்வர்ணமய பாத்ரே
சர்க்கர மிச்ரிதம் ப்ரேம்ணா தத்தம் (க்ஷீ)

Comments

Popular posts from this blog

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37