திருக்கண்ணன் அமுது - 7
எது முதல்?
கம்சனுக்குக் கொடுத்த வாக்கிற்காக அன்று பிறந்த பச்சிளம் குழந்தையை, தனது முதல் மகனை, எடுத்துக்கொண்டு வசுதேவர் கம்சனைக் காணச் சென்றார்.
பிறந்து சில நிமிடங்களே ஆன தனது சின்னஞ்சிறு குழந்தையைத் தானே கொண்டுவந்து கொடுக்கும் வசுதேவரைப் பார்த்ததும் கம்சனுக்கே என்னவோ போலாகி விட்டது. அவனது கல்நெஞ்சில் கூட சிறிது ஈரம் துளிர்த்தது. வசுதேவரின் நேர்மையைக் கண்டு வியந்துபோனான் அவன்.
வசுதேவரே, இது உமது முதல் குழந்தைதானே. இவனால் எனக்கு ஆபத்தில்லையே. திருப்பி எடுத்துக்கொண்டு போம்.
இப்போதும் வசுதேவர் மகிழ்ந்தாரில்லை. எந்தச் சலனமும் இன்றி குழந்தையைத் திருப்பிச் சிறைக்கே கொண்டு வந்து விட்டார்.
கம்சனது துர்மதியைப் பற்றி நன்கறிவார் அவர். இப்போது திருப்பிக் கொண்டுபோகச் சொல்கிறானே என்று மகிழ்ந்து விட முடியாது. திடீர் திடீரென்று மாறுபடும் மனப்போக்கை உடையவன் கம்சன்.
எனவே, இன்றைக்கு இந்தக் குழந்தை தப்பித்தது, அவ்வளவே என்ற எண்ணத்தோடு சலனமின்றித் திரும்பினார்.
சில நாட்களாயிற்று.
நாரத மஹரிஷி கம்சனது சபைக்கு வந்தார்.
மூவுலகங்களிலும் தடையின்றி
ஸஞ்சாரம் செய்யும் வரம் பெற்றவர் அவர். இந்திர சபைக்கும் போவார், வைகுண்டம், கைலாயம், ஸத்யலோகம் இப்படி எல்லா இடங்களுக்கும் போவார். ராவணன், ஹிரண்யகசிபு, கம்சன் போன்ற அசுரர்களின் சபையிலும் அவருக்கு வரவேற்பு உண்டு , அவரது முகராசி அப்படி.
மேலும், எப்போதும் நாமகீர்த்தனம் செய்பவர்கள் அனைவராலும் விரும்பப்படுவர் என்பதற்கு அவரே சாட்சி.
வாருங்கள் நாரதரே...
அவருக்கு ஆசனம் கொடுத்து மரியாதை செலுத்தி அமரச் செய்தான் கம்சன்.
அப்போது சபையில் சில பெண் குழந்தைகள் வட்டமாக நின்று கும்மி அடித்து ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர்.
நாரதர் கேட்டார்,
கம்சா, இங்கே எத்தனை பெண் குழந்தைகள் ஆடுகிறார்கள்?
அவருக்கு கணக்கு தெரியாதோ, சந்தேகத்துடன் சொன்னான் கம்சன்.
எட்டு குழந்தைகள் ஸ்வாமி..ஏன்? மறுபடி ஆடச் சொல்லட்டுமா?
இவர்கள் வட்டமாக நின்று ஆடுகிறார்கள். இவர்களுள் யார் முதல் குழந்தை?
என்றார்.
வட்டத்தில் முதலேது? கடைசியேது ஸ்வாமி ? என்றான்.
சரி, கம்சா, நான் கிளம்புகிறேன். வேறொரு முக்கியமான வேலை இருக்கிறது. போகும் வழியில், அப்படியே உன்னைப் பார்க்கலாம் என்று வந்தேன். விஷயம் எதுவுமில்லை.
மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அவர் கிளம்பியதும் மொத்தமாய்க் குழம்பினான் கம்சன்.
இந்த முனிவர் எதற்கு இப்படிக் கேட்டார்? வட்டத்தில் முதலும் கடைசியுமில்லை என்று அவருக்குத் தெரியாதா என்ன?
ஏதோ புரிந்ததுபோல் இருந்தது.
ஒருவேளை கடைசியிலிருந்து எண்ணினால், முதல் குழந்தை எட்டாவதாகிவிடுமே. எதிலிருந்து வேண்டுமானாலும் ஆரம்பித்து எண்ணிக்கொண்டு வரலாம். அப்படிச் செய்தால், யார் முதல் குழந்தை என்று எப்படிச் சொல்லமுடியும்?
எட்டாவது குழந்தையால் மரணம் என்றால், கடைசியிலிருந்து எண்ணினால் முதல் குழந்தைதான் எட்டாவது. அதைக் கொன்றுவிட்டால், உயிரோடு இருக்கும் குழந்தைகளில் எட்டாவதா, இறந்தவற்றையும் சேர்த்து எண்ணவேண்டுமா?
கம்சனது குழப்பத்திற்குப் பஞ்சமே இல்லை. நினைத்து நினைத்துப் பலவாறு குழம்பிக் கொண்டிருந்தான்.
பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவனாக, விடுவிடுவென்று சிறைக்குச் சென்றான். அவன் வந்த வேகத்தைப் பார்த்து அனைவரும் நடுநடுங்கினர்.
வசுதேவா, அலறினான் கம்சன்.
அவன் என்ன செய்யப்போகிறான் என்று வசுதேவருக்குத் தெரிந்துவிட்டது.
கதறி அழும் தேவகியிடமிருந்து குழந்தையைப் பறித்துக் கம்சனிடம் நீட்டினார்.
அங்கு அம்மிக்கல்லைப் போன்ற ஒரு கல் இருந்தது. பட்டென்று குழந்தையின் இரு கால்களையும் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி அந்தக் கல்லில் தேங்காய் உடைப்பதுபோல் குழந்தையை அடித்தான். குழந்தைக்குக் கபால மோக்ஷம் கிட்டியது.
தேவகியின் கதறல் வைகுண்டத்திற்கே கேட்டிருக்கும். சிறைக்காவலர்களே அவளது நிலைமையைக் கண்டு அழுதனர். ஆனால், எவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
வசுதேவரோ,
இது நாம் எதிர்பார்த்தது தானேம்மா,
எட்டாவது குழந்தையை எதொர்பார்த்திருப்பதுதான் நம் தலைவிதி. அவன் வந்து இந்த துஷ்டனை அழிக்கும் வரை நடப்பதை எதிர்கொள்வோம் என்று அவளைத் தேற்றிக்கொண்டிருந்தார்.
நாரத மஹரிஷி ஏன் இப்படி கம்சனைக் குழப்பிவிட்டார்?
அடுத்த பதிவில்..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment