திருக்கண்ணன் அமுது- 3
யதுகுலத்தோரின் பாக்யம்
முப்பத்துமுக்கோடி தேவர்களையும், ஆவுருக்கொண்டிருந்த நிலமகளையும் உடனழைத்துக்கொண்டு பாற்கடலின் கரைக்குச் சென்றார் ப்ரம்மதேவர்.
புருஷஸூக்தத்தினால் இறைவனை ஸ்துதி செய்தார். அப்போது ப்ரும்மதேவருக்கு மட்டும் கேட்கும்படியாக சில செய்திகளை பகவான் சொல்ல, அதை அவர் மற்ற தேவர்களுக்கு எடுத்துச் சொன்னார்.
பூமிதேவியின் துயரமானது ஏற்கனவே ஸர்வவியாபியான பகவானுக்குத் தெரியும். எனவே, அவர் திருஅவதாரம் செய்தருள முடிவு செதுவிட்டார், முன்பு சூரிய வம்சத்தில் ராமனாக அவதாரம்செய்தார், இப்போது சந்திர வம்சத்தில், அவதரிக்கப்போகும் அவர் யாதவகுலத்தோரால் வளர்க்கப்படப்போகிறார்.
வஸுதேவரின் மகனாக நேரடியாக பதினாறு கலைகளுடனும் பிறக்கப்போகிறார். அவருக்கு ஸேவை செய்ய விரும்புவோர் அனைவரும் தயாராகுங்கள். மதுராவிலும், யாதவகுலத்திலுமாகச் சென்று நீங்களும் பிறக்கலாம்.
பெண்களுக்கு ஏற்றமளிக்கப்போகும் அவதாரம் என்பதால், நீங்களும் பெண்களாகப் பிறப்பது இன்னும் சிறப்பு! ஆதிசேஷன் அவரது தமையனாக அவதரிப்பார். விஷ்ணுமாயையான தேவியும் பகவானின் கைங்கர்யத்திற்காக அவதாரம் செய்யப் போகிறார்.
இவ்வாறு தேவர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு, பூமிதேவியையும் சமாதானம் செய்து அனுப்பிய ப்ரம்மதேவர் தமது ஸத்யலோகம் திரும்பினார்.
அத்தனை பேருக்கும் உத்தரவிட்ட ப்ரம்மதேவர் தான் பிறக்க எண்ணவில்லை போலும்.
ஆனால், பகவானோ பின்னாளில் ப்ரும்மாவுக்காகச் செய்யப்போகும் லீலைக்கு இப்போதே அச்சாரமிட்டுவிட்டார்.
இறைவன் யாதவ குலத்தில் வளரப்போகிறார் என்று அனைவருக்கும் சொன்ன ப்ரும்மாவே,
இந்த இடைப்பையனா இறைவன்
என்று சந்தேகம்கொண்டு சோதனை செய்து பார்க்கப் போகிறார்.
இதையெல்லாம் அறியாதவரா அந்த லீலாவிநோதர்?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment