திருக்கண்ணன் அமுது - 8
கரு மாறும் படலம்
அப்பொழுதான் பிறந்த தங்கையின் குழந்தையை சீர் செய்து சீராட்ட வேண்டிய தாய் மாமனான கம்சன், கல்லில் அடித்துக் கொன்றுவிட்டான்.
நாரதர் ஏன் அவனைக் குழப்பிவிட்டார்?
பல காலமாக கொடுங்கோலை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஸாதுக்களுக்கு சீக்கிரமே நல்ல காலம் பிறக்கவேண்டும்.
பாவங்களின் கணக்கு எல்லையை மீறும்போது, இறைவனின் அவதாரம் உடனே நிகழும்.
இவற்றைத்தாண்டி, இன்னும் ஒரு காரணம் உண்டு.
அஷ்டவசுக்களில் அறுவர்தான் தேவகியின் குழந்தைகளாகப் பிறக்கிறார்கள். ஏதோ சாபத்தினால் அவர்கள் ஜனிப்பதற்கு விதி இருந்ததே ஒழிய, வாழ்வதற்கு பாவ புண்யங்கள் இல்லை.
அதனாலேயே சில குழந்தைகள் ஒரு சாப விமோசனத்திற்காக, பிறந்து உடனே இறந்துவிடுகின்றன.
இந்த விஷயத்தைப் பின்னாளில் கண்ணனே தேவகியிடம் தெரிவித்து, அந்த வஸுக்களை வரவழைத்து தேவகியிடம் காட்டவும் செய்கிறான்.
சிலர் பட்ட கடனைச் செலுத்தாமல் ஏமாற்றினால், ஏமாற்றப்பட்டவர், அவருக்குக் குழந்தையாகப் பிறப்பாராம். குழந்தைக்கான செலவுகள், அதற்கான பணிவிடைகள் இவற்றின் மூலம் கடன் வசூலானதும், குழந்தை மழலையின்பம் எதையும் கொடாமல் இறந்துவிடும்.
இன்னும் சிலர் ஏமாந்த கடனை வசூலிக்க, ஏமாற்றியவர் வீட்டில் மனநிலை சரியில்லாத குழந்தையாகப் பிறந்து கணக்கை நேர் செய்துகொள்வர் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
ஆயிரம்தான் சாஸ்திரங்கள் அறிவுறுத்தினாலும், புத்திரசோகத்தைப்போல் கொடியது ஏதுமில்லை.
நாரதர் முக்காலமும் உணர்ந்த ஞானியாகையால், இறைவனின் அவதார காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, நிகழ்வுகளை துரிதப்படுத்துகிறார்.
தேவகிக்கு வரிசையாக ஆறு குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொன்றையும் கம்சன் கல்லில் அடித்துக் கொன்றான். மரண பயம் அவனின் மதியை முற்றிலுமாய் மழுங்கடித்துவிட்டிருந்தது.
பிறந்தவர் அனைவரும் ஒருநாள் இறக்க வேண்டியவர்களே என்ற உண்மையை அவன் மனம் ஏற்காமல், பலரின் இறப்புக்கு அவன் காரணமாகிக் கொண்டிருந்தான்.
அவனது பாவங்கள் அனைத்தும் பழுத்து அவன் உதிரும் நேரம் நெருங்கியது.
தேவகி ஏழாவது குழந்தையைக் கருவுற்றாள்.
ஆதிசேஷனே வந்து அவளின் வயிற்றில் அமர்ந்திருந்தார்.
உண்மையில் அவர் ராமாவதாரம் போலவே இளவலாய்ப் பிறந்து இறைவனுக்குச் சேவை செய்யவே விரும்பினார். ஆனால், பகவானின் விருப்பம் வேறாய் இருந்ததாலும், ஆதிசேஷன் மிகவும் வேகமாய் செயலாற்றக் கூடிய தன்மையாலும் அவசர அவசரமாக வந்து தேவகியின் கருவில் அமர்ந்து விட்டார். எனவே, பகவானுக்கு அண்ணனாகப் பிறக்கும் பேறு பெற்றார்.
பகவான் விஷ்ணுமாயையான சக்தியை அழைத்தார்.
தேவீ,
தேவகியின் வயிற்றில் கருவாய் ஆதிசேஷன் இருக்கிறான். அந்தக் கருவை எடுத்து, வசுதேவரின் மனைவியான ரோஹிணியின் வயிற்றில் மாற்றிவிட்டு,
நீ சென்று யசோதையின் வயிற்றில் உருக்கொள். நானும் தேவகியின் வயிற்றில் குடிகொள்ளும் நேரம் வந்துவிட்டது. எனது இந்த
அவதாரத்திற்கு நீ செய்யப்போவது பேருதவியாகும்.
எனவே, வரப்போகும் கலியுகத்தில் உன்னை அனைவரும், துர்கா, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகை,க்ருஷ்ணா, மாதவி,கன்யா, மாயா, நாராயணி, ஈசானி, சாரதா, அம்பிகை என்றெல்லாம் பெயர் சூட்டி உன்னை வழிபடுவார்கள்.
உன்னை வணங்குபவர்கள் துயரமெல்லாம் தூர விலகிப்போகும்
பகவான் சொன்னதை அப்படியே நிறைவேற்றினாள் அம்பிகை.
யசோதா அம்மாவின் கர்பத்தில் பிறப்பதனால், பகவானின் சகோதரியாகிறாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment