திருக்கண்ணன் அமுது - 14
துர்காதேவியின் உதவி
இறைவனின் உத்தரவின்படி தன் கலி தீர்க்கப் பிறந்த ஆண்மகவைக் கொண்டுபோய் நந்தன் வீட்டில் விட்டுவிட்டு அவருக்குப் பிறந்த பெண்குழந்தையைக் கொண்டுவந்தார் வசுதேவர்.
விஷ்ணுமாயையின் ப்ரபாவத்தால் உறங்கிக்கொண்டிருந்த அனைவரும்
விழித்துக் கொண்டனர். அவருக்கும்
தேவகிக்கும் கூட நடந்தவற்றை சிலகாலம் மறக்கச் செய்துவிட்டான் போலும். ஏனெனில், ஸத்ய சந்தரான வசுதேவர் கம்சனே கேட்டாலும் உண்மையைத்தான் சொல்வார். எனவே, அதுவும் இறைவனின் திருவிளையாடல் என்றே கொள்ளவேண்டும்.
குழந்தை உருவிலிருந்த தேவியின் அலறல் சத்தம் கேட்டு காவலர்கள் அனைவரும் விழித்துக் கொண்டனர்.
டேய், குழந்தை பொறந்துடுச்சுடா..
பொறந்ததும் ஓடிவந்து சொல்லச்சொன்னார். தூங்கிட்டோமேடா..
மகாராசா கோபிப்பாரே..
காலையில சொல்லிக்கலாமேடா..
இல்லடா. மத்த குழந்தைகளுக்கெல்லாம் காலைலதான் சொல்லச் சொன்னார். இது அவரைக் கொல்லவந்த குழந்தையாமே. எப்ப பொறந்தாலும் உடனே ஓடிவந்து சொல்லணும். இல்லாட்டா தலையை வாங்கிடுவேன்னு சொன்னதா, அதிகாரி சொன்னார்.
மகாராசா கிட்ட ஓடுவோம்டா..
மூச்சிரைக்க இரு காவலர்கள் ஓடிவருவதைக் கண்டதும் கம்சனுக்கு பதட்டம் வந்துவிட்டது.
மகாராஜா வாழ்க!
என்ன விஷயம்?
ஏன் இப்படி நள்ளிரவில் ஓடிவருகிறீர்கள்? தேவகிக்குக் குழந்தை பிறந்துவிட்டதா?
ஆமா மகாராஜா, இப்பத்தான் பொறந்தது. உடனே ஓடிவந்து சொல்லச் சொன்னதால வந்தோம்.
ஹூம். என்னைக் கொல்வதற்கு ஒருவன் பிறந்துவிட்டானா?
வேகமாய் பூமியை உதைத்தான்.
வாளை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு தலைவிரிகோலமாக, வேகவேகமாக சிறைச்சாலை நோக்கி நடந்தான்.
அவன் வரும் ஆரவாரம் கேட்டு அத்தனை பேரும் நடுநடுங்கினர்.
அவ்வப்போது ஒரு பச்சிளம் குழந்தையை ஈவு இரக்கமின்றி கொல்வதைக் கண்டிருக்கின்றனரே. இன்றைக்கு என்ன நடக்குமோ என்ற அச்சம்தான் அனைவருக்கும்.
நேராக சிறையினுள் வந்தவன் கர்ஜித்தான்.
எங்கே குழந்தை?
என்னைக் கொல்வானா? நான் இப்போதே இவனை அழித்துவிட்டால் எனக்கு மரணமே இல்லை.. ஹா ஹா ஹா..
அட்டஹாஸம் செய்தான்.
வசுதேவர் மெதுவாகக் குழந்தையைக் கையிலெடுத்து அவனிடம் நீட்டினார்.
மஹாராஜா, இது பெண் குழந்தை.
பெண் குழந்தையால்தானா உமக்கு ஆபத்து வந்துவிடும்? இவள் உங்கள் மருமகள். இவளால் உமக்கு எந்தத் தீங்கும் நேராது. இவளை ஆசீர்வாதம் செய்து விட்டுவிடுங்கள். கொல்லவேண்டாம்.
பெண்குழந்தையா?
என்னைக் கொல்ல சிங்கக் குட்டி போல் ஒரு ஆண்மகவை எதிர்பார்த்திருந்தேனே. போயும் போயும் என்னைக் கொல்லப் பிறந்தது பெண் குழந்தையா?
ம்ம்..
சற்று யோசித்தான் கம்சன். அவனுக்கு சப்பென்று ஆகிவிட்டது..
ஆனால், அசரீரி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு நினைவிருக்கிறது. எட்டாவது கர்பம் என்றுதான் சொன்னது. ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை.
எனவே, பெண் குழந்தையானாலும் இவளை உயிரோடு விடுவது முட்டாள்தனம். கொண்டு வா..
குழந்தையின் கால்களைப் பிடித்துத் தலைகீழாய்த் தூக்கினான்.
வழக்கமாய்க் கல்லில் அடித்துக் கொல்பவனுக்கு இன்று வித்தியாசமாய் ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது.
குழந்தையை மேலே எறிந்து வாளால் ஏந்திக் கொல்லலாம் என்று நினைத்தான்.
சிறிது நேரத்திற்கு முன்னால் பிறந்த பெண் குருத்தை அவள் யாரென்று அறியாதவனாய் வானில் வீசிவிட்டு, கீழே விழப்போகும் குழந்தையை ஏந்துவதற்காக வாளை ஏந்திக்கொண்டு நின்றான் கம்சன். ஆனால், நடந்ததோ வேறு.
மேலே போனால் திரும்பி தலைகீழாய் விழுவதற்கு அதென்ன ப்ராக்ருத சிசுவா?
ஜகத் ஜனனி, அம்பிகை, ஷ்யாமசுந்தரனின் சோதரியாயிற்றே..
அஷ்டாதச புஜங்களுடன், கபாலமாலை தரித்து, சிம்மவாஹினி வானில் பரவி நின்றாள். பதினெட்டு கரங்களிலும் பதினெட்டு ஆயுதங்கள்.
அட்டஹாசமாய்ச் சிரித்தவள்,
அடே கம்சா, உன்னை நானே கொன்றுவிடுவேன். பெரிய பெரிய அசுரர்களின் தலைகளையெல்லாம் கொய்து மாலையாக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறேன் பார். இருந்தாலும் இப்போதைக்கு உன்னை நான் கொல்லப் போவதில்லை. உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறிடத்தில் வளர்கிறான். நீ என் காலைப் பிடித்ததால் இப்போதைக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன்.
என்று சொல்லி கம்சன் வயிற்றில் பயத்தை விதைத்துவிட்டு மறைந்துபோனாள்.
நடப்பது கனவா? நினைவா என்று ஒன்றுமே புரியவில்லை கம்சனுக்கு.
அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு நடைபாதையிலேயே அமர்ந்து விட்டான்.
தெய்வம் கூடப் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டதே..
என்னவாயிற்று மஹாராஜா? தெய்வம் எப்படிப் பொய் சொல்லும்?
கம்சனது விசேஷமான மந்திரிகளுள் ஒருவனான சாணூரன் கேட்டான்.
அன்று அசரீரி தேவகியின் எட்டாவது கர்பம் என்னைக் கொல்லும் என்று சொல்லிற்று. அதைக் கேட்டாயா நீ?
ஆம் மஹராஜ்
ஆனால் இன்று நடந்தது என்ன? எட்டாவதாகப் பிறந்த குழந்தை என்ன சொல்லிற்று கேட்டாயா? என்னைக் கொல்ல வந்தவன் வேறிடத்தில் இருக்கிறான் என்று சொன்னதே...அப்படியானால்
அன்று அசரீரி சொன்னது பொய்யா? அசரீரி வாக்கு தெய்வ வாக்குதானே?
ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.
மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment