குருவருள் ஒன்றே கதி - 35
அவதார புருஷர்கள் - 3
ஸ்ரீ ராமக்ருஷ்ண பரஹம்ஸரின் வேண்டுகோளுக்கிணங்க காளி நரேந்திரருக்கு இரண்டு முறை தரிசனம் தந்தாள். இரண்டு முறைகளும் நரேந்திரர் பரவச அனுபவத்தினால் தன்னை மறந்த நிலைக்கு ஆளானார். தன் குடும்ப கஷ்டங்களுக்குத் தீர்வு கேட்க மறந்து பக்தி, ஞானம் மற்றும் வைராக்யத்தை அருளும்படி காளியிடம் வேண்டினார். கடைசியாக இன்னும் ஒரு முறை பவதாரிணியை நரேந்திரருக்கு தரிசனம் தரச் சொல்லி வேண்டினார் குருநாதர்.
இம்முறையும் இரவு பன்னிரண்டு மணிக்கு அன்னையின் கோவிலை நோக்கி நடந்த நரேந்திரர் மிகத் தெளிவாகத் தன் வேண்டுதல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு மீண்டும் மீண்டும் தனக்குள் ஒராயிரம் முறை சொல்லிப் பார்த்துக்கொண்டு சென்றார்.
இரவு சரியாக பன்னிரண்டு மணி ஆகும்போது கண்ணனின் சோதரியான பவதாரிணி தோன்றினாள். அன்பே உருவான
அன்னையின் முன் நிற்கும் நரேந்திரர் தன் பாக்யத்தை எண்ணி எண்ணி அழ ஆரம்பித்தார்.
சொல் நரேந்திரா? இன்று மறுபடி வந்திருக்கிறாயே. என்ன வேண்டும் உனக்கு?
அன்பின் கீதமாய் இசைக்கும் அவளது குரலினிமையில் மயங்காதார் எவர்?
நரேந்திரர் தெளிவாகக் கேட்டார்
அம்மா, எனக்கு பக்தியை கொடு, உலக விஷயங்களில் எனக்கு வைராக்யம் சித்திக்கட்டும். உன் அன்பெனும் ஞானத்தைக் கொடு தாயே..
கலகலவென்று அன்னை சிரிக்கும் ஒலியை ப்ரபஞ்சமே எதிரொலித்தது.
மன நிறைவுடன் குருநாதரைக் காணத் திரும்பி வந்தார் நரேந்திரர்.
பரமஹம்ஸர் விஷமச் சிரிப்போடு கேட்டார்.
என்ன நரேன்? அம்மா வந்தாங்களா? உன் கஷ்டங்களுக்கு விமோசனம் கேட்டியா?
அம்மா வந்தாங்க டாகுர்
அப்றம்..
நான் பக்தி, ஞானம், வைராக்யம் மூணும் வேணும்னு கேட்டேன் டாகுர்.
ஏம்பா, இன்னிக்கும் மறந்துட்டியா? நான்தான் அடிமனத்தில் ப்ரார்த்தனைகளை நல்லா நினைச்சுக்கோன்னு சொன்னேனே.. நீ அப்படிப் பண்ணலியா?
நான் மறக்கல டாகுர். எனக்கு என் வேண்டுதல் எல்லாம் நல்லா நியாபகம் இருந்தது.
பின்ன ஏன் கேட்கல?
எதைக் கேட்டாலும் கொடுக்கும் ஒரு பெரிய ராஜாவிடம் தங்கம், வைரம் னு பெரிசா கேக்காம கால் கிலோ கத்தரிக்கா கொடுன்னு கேட்டா எப்படி இருக்கும்?
ம்ம்
அதுமாதிரி, எதைக் கேட்டாலும் கொடுக்கத் தயாரா இருக்கற ஜகன்மாதா கிட்டபோய் என் குடும்பக் கஷ்டங்களை எப்படி சொல்றது? உலகம் முழுசும் அவளோட குடும்பம். இதில் நான் என் குடும்பத்தைப் பத்தி தனியா என்ன கேக்கறது? அதனால, ரொம்பவும் துர்லபமான பக்தி, ஞான வைராக்யத்தைக் கேட்டேன்.
கலகலவென்று சிரித்தார் குருநாதர். அவரது சிரிப்பு அன்னையின் சிரிப்பை ஒத்திருந்தது.
நான்தான் அப்பவே சொன்னேனே. உனக்கு உலக விஷயம் எல்லாம் சரிப்பட்டு வராது. நீ எனக்காகத்தான் பிறந்திருக்கன்னு. உலகமே உன் குடும்பமா இருக்கும்போது, உனக்குன்னு தனியா ஏது குடும்பம்? அதன் கஷ்ட நஷ்டங்களை அம்மாவின் பொறுப்பில் விட்டுடு. அவங்க நல்லா பாத்துப்பாங்க. உன் குடும்பம் ஒருபோதும் உணவுக்கோ, துணிக்கோ கஷ்டப்படமாட்டாங்க.
என்று சொல்லி நரேந்திரரை வாரி அணைத்துக்கொண்டார் பரமஹம்ஸர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment