திருக்கண்ணன் அமுது- 4
தேரோட்டம்
மதுவனம் என்ற புண்ணிய பூமியில் தான், ஐந்து வயதுச் சிறுவனான துருவன் ஐந்தே மாதங்கள் தவம் செய்து இறைவனைக் கண்டான், அதுவே பின்னாளில் மதுரா நகரமாயிற்று. மதுராவைத் தலைநகராகக் கொண்டு உக்ரசேனர் அரசாட்சி செய்துவந்தார். அவர் ஸாதுக்களைப் பூஜித்தும், மக்களை நல்வழியில் செலுத்தியும் நல்லாட்சி புரிந்துவந்தார்.
அவரது மகனான கம்சன் தந்தை வழிச் செல்லவில்லை. இளவரசனான அவன் பல அட்டூழியங்களுக்குக் காரணமானான், மகனின் நடத்தை குறித்து மிகவும் கவலை கொண்டிருந்தார் உக்ரசேனர்.
இந்நிலையில், அவரது சகோதரரான தேவகனின் மகள் தேவகியை அஷ்ட மந்திரிகளுள் ஒருவரான வசுதேவருக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் நடந்தன. வசுதேவர் சிறந்த மதியூகி, அத்தனை சாஸ்திரங்களும் படித்தவர், அதே சமயம், உயர்ந்த ஸாது லக்ஷணங்கள் பொருந்தியவர்.
துஷ்டர்கள் எது செய்தாலும் அதன் உச்சநிலைக்குச் சென்றுவிடுவர், ஹிரண்யகசிபுவைப் போல் கடுமையான தவம் செய்தவர்களும் இல்லை. அவனைப் போல் இறைவனை எதிர்த்தவர்களும் இல்லை.
அதுபோல, கம்சன் தன் சகோதரிக்குத் திருமணம் என்றதும் அளவற்ற மகிழ்ச்சி கொண்டான். எல்லா வேலைகளையும் தானே முன்னின்று செய்தான்.
இந்தக் கல்யாணத்தின் மூலம் மக்களிடம் வெகுவான நன்மதிப்பை அடைந்துவிட வேண்டும் என்பது அவனது உள்நோக்கமாக இருந்தது.
கிடுகிடுவென்று திருமண ஏற்பாடுகள் நடந்தன. வெகு விமரிசையாகத் திருமணமும் நடந்தேறியது.
திருமணத்தைக் காண நாட்டு மக்கள் அனைவரையும் திருமணம் நடக்கும் மண்டபத்தினுள் அனுமதிக்க இயலாதே. எனவே, மாலை புதிய தம்பதிகளை ரதத்தில் அமர வைத்து, பட்டணப்பிரவேசம் செய்வது வழக்கம். நாட்டு மக்கள் அனைவரின் வாழ்த்தும் அவர்களுக்குக் கிடைக்கும்.
இளவரசனான கம்சனின் கட்டளைப்படி ஊரே திருவிழாக்கோலம் பூண்டது. அனைவரது இல்லங்களிலும், வாசலில் மாவிலைத் தோரணங்கள் அலங்கரித்தன. பெரிய பெரிய கோலங்கள் வீதிகளை நிறைத்தன. தீபங்களின் ஒளியில் மதுரா நகரமே வைகுண்டம்போல் பிரகாசித்தது.
வசுதேவரையும், தேவகியையும் தேரில் ஏற்றியாயிற்று. சாரதியான தாருகன் ரத்ததைச் செலுத்த ஆயத்தமானார். அப்போது முன்னால், குதிரையில் இருந்த கம்சன், சட்டென்று இறங்கி வந்தான்.
தாருகா, நீ இறங்கு, என் தங்கையின் விவாஹ ஊர்வலத்திற்கு நானே சாரத்யம்செய்வேன்.
இளவரசனின் கட்டளைக்கிணங்க, தாருகன் இறங்கிவிட்டார், கம்சன் தேரைச் செலுத்தத் துவங்கினான்.
மெதுவாக ரதம் செல்லத் துவங்கியது.
ஆஹா, இளவரசர் முன்ன மாதிரி இல்லப்பா..
தங்கச்சி மேல எவ்ளோ அன்பா இருக்கார் பாரு
சித்தப்பா மகள் மேலயே இவ்ளோ அன்புன்னா, அவர் மனசு மாறிட்டார் போல..
இவ்ளோ அமைதியா தேர் ஒட்டிட்டு, இப்படியெல்லாம் இவரைப் பாத்ததே இல்லை.
தம்பதியரைப் பார்க்கும் ஆர்வத்தை விட, கம்சன் அடங்கி தேர்த்தட்டில் உட்கார்ந்து அனைவரையும் உற்சாகப்படுத்திக்கொண்டும், தங்கையோடும் அவரது கணவரோடும் கேலி பேசிச் சிரித்துக்கொண்டும் தேரை அழகாகச் செலுத்தி வருவதுதான் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது.
கம்சனைச் சுமந்துகொண்டு வெறிகொண்டு பறக்கும் குதிரைகளையும் வண்டிகளையும் தான் மக்கள் இதுவரை கண்டிருந்தனர். இப்போது அவனது இந்தப் புதிய நடத்தை அனைவருக்கும் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்ததோடு நெஞ்சில் கொஞ்சம் பயத்தையும் சேர்த்து விதைத்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment