திருக்கண்ணன் அமுது -11
அற்புதக் குழந்தை
ராமாவதாரத்தில் பன்னிரண்டு மாதங்கள் கௌசல்யையின் கர்பத்தில் வாஸம்செய்தான் இறைவன். அப்போது அதிகமான இரண்டு மாதங்களை இந்த அவதாரத்தில் நேர் செய்கிறான்.
எட்டுமாதங்கள் கர்ப வாஸம் செய்த இறைவன் தேவகியின் யோனி வழியாக ஜனிக்கவில்லை.
வயிற்றினுள் மறைந்து வெளியே தோன்றினான்.
அத்புத பாலகன் என்கிறார் ஸ்ரீ சுகர். அற்புதக்குழந்தையாம்,அது எங்ஙனம்?
பிறக்கும்போதே பீதாம்பரம், எல்லா விதமான ஆபரணங்கள், கிரீடம் எல்லாவற்றோடும் தோன்றினான். அதனால் அற்புதக் குழந்தையாம்.
சின்னஞ்சிறு பகவானாகத் தோன்றும்போதே, அவனது அளவிற்கேற்றபடி, ஆயுதங்களோடு பிறந்தானாம். தயிர் கடையும் மத்தைப் போல் ஒரு கதை, தீபாவளி சக்கரத்தைப் போன்ற ஒரு குட்டி சக்கரம், சின்னஞ்சிறு வெண்சங்கு, அவனைப்போல் அழகான ஒரு சிறிய தாமரை ஆகியவைகளை வைத்திருந்தான். எனவே, அற்புதக் குழந்தையாம்.
பொதுவாக பிறக்கின்ற குழந்தை அழும்,பெற்றோர் குழந்தையை அமைதிப்படுத்துவார்கள். ஆனால், இங்கு, எட்டாவதாகப் பிறந்த அற்புதக் குழந்தைக்கு கம்சனால் ஆபத்து வருமே என நினைத்து தேவகி அழுகிறாள். குழந்தை சமாதானப்படுத்துகிறது. எனவே, அற்புதக் குழந்தையாம்.
பிறந்த குழந்தை பேசுகிறதாம். எனவே, அற்புதக் குழந்தையாம்.
மற்ற குழந்தைகளை ப்ரும்மா படைத்து பூமிக்கு அனுப்புகிறார். ஆனால், இந்த அற்புதக் குழந்தையோ, ப்ரும்மாவையே படைத்த குழந்தையாம்.
அற்புதக் குழந்தை என்ற பதத்திற்கு இன்னும் ஓராயிரம் விளக்கங்களைப் பெரியோர் சொல்வர்.
சின்னஞ்சிறு உருவில் நீலமேகம் திரண்டதுபோல் அழகிய உருக்கொண்ட இறைவனைக் கண்டதும் வசுதேவர் மானஸீகமாகப் பல தானங்களைச் செய்தார். பின்னர், இறைவனை ஸ்துதி செய்ய ஆரம்பித்தார்.
நீரே இந்த ப்ரும்மாண்டத்தின் ஆதி காரணமாய் இருக்கிறீர்.
புலன்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறீர். உம்மிடமிருந்தே இந்த ப்ரபஞ்சம் தோன்றி, ப்ரதிபலித்து பின் உம்மிடமே அடங்குகிறது. ஆனால், நீர் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கிறீர். இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு லீலையாய் என் வீட்டில் பிறந்திருக்கிறீர். உம்மால் இந்த பூமியின் பாரம் நீங்கப்போகிறது. நீங்கள் அவதாரம் செய்யப் போவதைக் கேட்டு, கம்சன் உமக்கு முன்னால் பிறந்த குழந்தைகளைக் கொன்றுவிட்டான். நீங்கள் இப்போது தோன்றியிருப்பதைக் கேள்விப் பட்டால், இப்போதே ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடிவருவான் என்றார்.
தேவகி அந்தக் குட்டி பகவானைப் பார்த்து வேதாந்தபரமாக ஸ்துதி செய்கிறாள்.
நீங்களே காலத்திற்கு அப்பற்பட்ட ஸத்யமாய் விளங்குகிறீர். ப்ரளய காலத்தில் மிஞ்சியிருப்பவர் நீர் ஒருவரே. உங்களை ஆச்ரயிப்பவர்களை மரணம் தீண்டுவதில்லை. அந்த ஜீவன் எப்போதும் உங்களது தாமரைப் பதங்களிலேயே நிரந்தரமாய் வசிக்கிறான்.
தாயும் தந்தையும் பெற்ற குழந்தையைப் பார்த்துப் பேசும் பேச்சா இது?
அதுவும் அழகே உருவாக, மனதைக் கொள்ளைகொள்ளும் விதமாக, இதுநாள் வரை பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடியலாகப் பிறந்திருக்கும் குழந்தையைக் கண்ணே மணியே என்று கொஞ்ச வேண்டாமோ?
ஏன் அப்படிச் செய்யவில்லை?
அந்தக் குழந்தை இன்னும் சற்று நேரத்தில் பிரிந்து செல்லப்போகிறது. அதன் மீது அன்பை வைத்துவிட்டால் பின் வரும் நாள்கள் இருவருக்கும் நரகாமாகிவிடாதா?
மேலும் கண்ணெதிரே ஆறுகுழந்தைகளைப் பறி கொடுத்தவர்கள் வேறெப்படிப் பேசுவர்?
தாய் தந்தையர் வேதாந்தம் பேச, அற்புதக் குழந்தை என்ன பேசிற்று?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment