கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 4
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
ருக்மிணி நாரத மஹரிஷி மூலமாகவும், மற்ற பௌராணிகர்கள் மூலமாகவும், கண்ணனைப் பற்றிக் கேட்டு கேட்டு அவன் மீது காதல் கொண்டாள். தன் விருப்பத்தை தந்தையான பீஷ்மக மஹாராஜாவிடம் தெரிவித்தாள். அவர் மிகவும் ஸாது. க்ருஷ்ணனைப் பற்றி அவரும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். அவன் இறைவன்தான் எனவும் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருப்பதை அறிவார். எனவே, மிகுந்த சந்தோஷமடைந்தார்.
எதுவாயினும் அரச சபையில் தெரிவித்து அனைவரின் ஒப்புதல்களையும்பெறவேண்டும் என்பது நியதி. ஏனெனில் ஒரு அரச குமாரியின் விவாகம் தன்னிச்சையாக நடைபெற இயலாது. ஒரு திருமணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கிடையே ஆன உறவு தீர்மானிக்கப்படும்.
எனவே, சபையில் ருக்மிணியின் திருமணத்தைப் பற்றிய பேச்செடுத்தார்.
ஆத்மாவை ஐந்து புலன்களும் இறைவனை அடையவிடாமல் காப்பதுபோல், ருக்மிணியின் ஐந்து சகோதரர்களும் க்ருஷ்ணனுக்கு ருக்மிணியைக் கொடுப்பதை எதிர்த்தனர்.
மூத்தவனான ருக்மி சொன்னான்
போயும் போயும் உமக்கு அந்த இடையன்தானா கிடைத்தான்? திருடன், மாடு பேய்ப்பவன், படிப்பறிவற்றவன்.
பீஷ்மகன் இடை மறித்துச் சொன்னார்
அப்படிச் சொல்லிவிட முடியாது ருக்மி. அவர் மதுராவிற்கு வந்தபின்பு சாந்தீபனி ரிஷியிடம் 64 நாள்களில் 64 கலைகளையும் கற்றாராமே.
சரிதான். ஒழுங்காக பாடசாலைக்குச் செல்பவர்களே படிக்க முடியாமல் திணறுகிறார்கள். இவன் 64 நாள்களில் அனைத்தையும்படித்துவிட்டானாம்.
என் நண்பன், சேதி நாட்டரசன் சிசுபாலனுக்கு ருக்மிணியைத் திருமணம் செய்து கொடுக்கப்போகிறேன். அவன் அந்தக் கருப்பனைப் போல் அரைகுறையாக அனைத்தையும் ஒரே நாளில் படித்தவனல்ல. ஒவ்வொரு வகுப்பிலும் பல வருடங்கள் இருந்து படித்தவன். ஒவ்வொரு கலையையும் பல வருடங்கள் செலவழித்துக் கற்றவன். அப்படியும் அவன் இன்னும் அனைத்தையும் கற்று முடித்தபாடில்லை என்றால் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறான் பாருங்கள். அப்படிப்பட்ட அறிவாளிக்குத்தான் என் தங்கையைக் கொடுப்பேன்
என்றானாம்.
சபையிலிருந்த அனைவரும் தம்மை மறந்து ஒரு கணம் கொல்லென்று சிரித்து விட்டனர்.
பிறகு ருக்மியின் துஷ்டத்தனத்தை நினைத்து வாயைமூடிக்கொண்டனர்.
இப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்களாலும், துஷ்டர்கள் கையில் அதிகாரம் இருப்பதாலும், நல்ல விஷயங்களை எடுத்துச்சொல்ல அனைவரும் தயங்குகின்றனர்.
நாம்தான் அவற்றை நுண்ணறிவு கொண்டு ஆராய்ந்து தெளிவுற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
Comments
Post a Comment