திருக்கண்ணன் அமுது - 10
சிறையில் பிறந்த நிறைபொருள்
எதையும் உத்தேசித்து எழுதுவதில்லை. ஆனால், கண்ணன் அருளால், பத்தாவது பதிவில் கண்ணனின் பிறப்பு வருகிறது. ஸ்ரீமத் பாகவதத்திலும் தசமஸ்கந்தத்தில்தான் கண்ணனின் சரித்ரம் சொல்லப்படுகிறது.
இறைவன் வந்து தேவகியின் வயிற்றில் அமர்ந்ததும், தேவகி ஒரு திவ்ய ஒளியோடு ஜொலித்தாள்.
அத்தனை தேவர்களும் அவளை வழிபட்டுக் கொண்டிருக்க, கம்சனின் நிலைமை தலைகீழாய் இருந்தது.
மற்ற குழந்தைகளை தேவகி கருவுற்றிருந்தபோது அவ்வப்போது சிறை மேற்பார்வைக்கு வந்து தேவகியையும் வசுதேவரையும் மிரட்டிவிட்டுச் செல்வான்.
ஆனால், இறைவன் வந்து கர்பத்தில் அமர்ந்ததிலிருந்து, கம்சனுக்கு சிறைச்சாலையின் அருகில் வரும்போதே, பயம் நெஞ்சை அடைத்தது. எப்படியோ சிறையின் வாசல் வரை வந்துவிட்டு, சிறை அதிகாரியிடம் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அப்படியே திரும்பிவிடுவான். எட்டு மாதங்களில் ஒரு முறை கூட கம்சன் சிறைச்சாலை வாயிலைக்கூட மிதிக்கவில்லை.
பயத்தினால் கலங்கி, வெளிறிப்போயிருந்தான் கம்சன்.
இதற்குள் இறைவன் பூமியைத் தொடும் பொன்னான காலம் வந்துவிட்டது. ஆவணி மாதம், தேய்பிறையில், ரோஹிணி நக்ஷத்ரம் கூடிய தினத்தில் நள்ளிரவு பன்னிரண்டு மணியும் வந்தது. இந்தக் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் காணப்படவில்லை. கண்ணனின் பிறந்த நாள், நேரம் இவைகளை மற்ற புராணங்களின் வாயிலாகத்தான் அறிந்துகொள்ள முடிகிறது.
ஏனெனில், கண்ணனின் சரித்ரம் ஆரம்பித்ததும் அவ்னோடு வாழ ஆரம்பித்து விட்டனர் ஸ்ரீ சுகரும், பரீக்ஷித்தும். எனவே, பிறந்த நாள், நேரத்தைச் சொன்னால், கம்சன் ஏதாவது ஜாதகதைக் கணித்து அவனுக்கு ஆபத்து ஏற்படுத்திவிடுவானோ என்று தான் சொல்லவில்லையாம். அக்காலத்தில் அரசர்களும் வெவ்வேறு நேரங்களைப் பிறந்த நேரமாகக் குறித்து பல ஜாதகங்களை வெளியில் விடுவார்களாம். வேறு யாரும் அரசனது கிரஹ ஸஞ்சாரங்களை அறிந்துகொண்டால், அவனுக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்பதனால் அந்த ஏற்பாடு. எது சரியானது என்று குலகுரு ஒருவருக்கே தெரியுமாம்.
நதிகளில் நீர் சுழித்துச் சென்றது. யாக சாலைகளில் அக்னி வலமாகச் சுழன்றது. மான்களும், மீன்களும் துள்ளிக் குதித்தன. யோகிகள், மற்றும் ஞானிகளின் ஹ்ருதயத்தில் ஒரு கணம் பகவத் தரிசனம் ஏற்பட்டது. மெல்லிய தென்றல் வீசியது. புஷ்பிக்க வேண்டிய காலங்களைத்தாண்டி அனைத்துச் செடிகளும், மரங்களும் பூத்துக் குலுங்கின. உலகிலுள்ள அத்தனை ஜீவன்கள் மனத்திலும் திடீரென்று ஒரு ஆனந்தம் ஏற்பட்டது. நட்சத்திரங்கள் ஒளி வீசின.
கம்சன் போன்ற துஷ்டர்களுக்குக் கூட, ஒரு கணம் நாம் திருந்தி வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் தோன்றியது.
இறைவன் தேவகியின் வயிற்றில் மறைந்து, எதிரே தோன்றினான்.
சங்கு, சக்ரம், கதை, தாமரை முதலியவைகளை ஏந்திக்கொண்டு, நான்கு கரங்களோடு சின்னஞ்சிறிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment