திருக்கண்ணன் அமுது - 1

அன்னையின் பாரம்

துவாபர யுகத்தின் கடைசி  நூற்றாண்டு, கலியின் சாயல் வந்துவிட்டிருந்தது. 
பூமாதேவிக்கு பாரம் தாங்கவில்லை.

 ஏன்? திடீரென்று மலைகள் வளர்ந்து விட்டனவா? ஆழிநீர் அதிகரித்து விட்டதா?
உயிர்த்துளிகள் பலகோடியென்றாலும் அவை  பூமியிலுள்ள ஒரு மலைக்கீடாகுமா?
இல்லையாம்.

பூமியில் அசுரர்கள் மலிந்துவிட்டிருந்தனர். ஸாதுக்களை ஹிம்சை செய்வதும், அந்தணர்களை அவமானப்படுத்துவதும், துன்புறுத்துவதும், சக மனிதர்களிடம் கருணையின்றி நடந்து கொள்வதுமாக ஏராளமான அட்டூழியங்கள் தலைவிரித்தாடின.

ஆயிரமாயிரம் ஸாதுக்கள் இருந்தாலும் பூமிமாதா மகிழ்ச்சியோடு தாங்குகிறாள் . தன் கணவனைப் பழிப்பவர்களையும், அதற்குத் துணை‌ செல்பவர்களையும், தன் மற்ற குழந்தைகளான ஜீவர்களைத் துன்புறுத்துபவர்களையும் அவளால் தாங்க‌முடிவதில்லை.

தன்னை அகழ்வாரையும், இகழ்வாரையும், தன்மீது உமிழ்வாரையும் கூடத் தாங்கத்தான் செய்கிறாள். தன் கணவனான திருமாலை இகழ்பவர்களும், அவரது அடியாரைத் துன்புறுத்துபவர்களுமே அவளுக்கு பாரம்.

என்னதான் கணவன் என்றபோதிலும், நெறிமுறைப்படி  (protocol) எதையும் செய்யவேண்டுமென்று நினைத்தளோ அல்லது 
அனைத்து ஜீவன்களையும் படைப்பது ப்ரும்மா என்பதால் அவரது படைப்பில் வந்தவர்களின் ஒழுங்கீனங்களை அவரிடமே சொல்வோம் என்று நினைத்தாளோ அல்லது
இதற்காகக் கணவனைத் தொந்தரவு செய்யவேண்டாம், ப்ரும்மாவின் வரம்பிற்குள்ளேயே முடித்துவிடலாம் என்று நினைத்தாளோ தெரியாது.

பசுவின் உருவெடுத்துக் கொண்டு  ப்ரும்மாவிடம் முறையிடச் சென்றாள்  பூமிதேவி.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37