திருக்கண்ணன் அமுது - 12
வசுதேவரின் நம்பிக்கை
சங்கு, சக்கரம், கதை, தாமரை இவைகளைத் தாங்கி சதுர்புஜனாக தேவகி மற்றும் வசுதேவர் முன் தோன்றினான் பகவான். இருவரும் கண்ணெதிரே தோன்றிய பரம்பொருளை பரப்ரும்மமாகக் கண்டு பாடிப் பரவினர். இருந்தாலும் கம்சன் வந்தால் இந்தக் குழந்தைக்கு என்னாகுமோ என்ற அச்சமும் இருந்தது.
எனவே, நீ சாதாரணக் குழந்தையாக மாறு. பகவானாகக் காட்சி கொடுத்தது போதும் என்கிறாள் அந்த தெய்வத்தாய். உலகிலுள்ளோர் அனைவரும் தெய்வீகக் காட்சிக்கு ஏங்கிக் கொண்டிருக்க, அன்னையின் உள்ளம் மாறாய் நினைத்தது.
அற்புதக் குழந்தை தன் பவளவாய் திறந்து பேசிற்று.
நீங்கள் இருவரும் முற்பிறவியில் ப்ருஷ்னி, ஸுதபஸ் என்ற ப்ஜாபதியாய் இருந்தீர்கள். அப்போது என்னை நோக்கிக் கடும் தவம் இயற்றினீர்கள். உங்கள் தவத்திற்கு மகிழ்ந்து நான் காட்சியளித்தேன். அப்போது நீங்கள் முக்தியை வேண்டவில்லை. மாறாக என்னைப் போல் ஒரு குழந்தை வேண்டும் என வரம் கேட்டீர்கள். என்னைப் போல் இன்னொரு பொருள் இல்லாததனால், நானே வந்து பிறக்கலானேன். மூன்று முறை ஸத்யம் என்று வாக்களித்தபடியால், நானே உங்களுக்கு மூன்று முறை குழந்தையாகப் பிறந்தேன்.
நீங்கள் ப்ருஷ்னி ஸுதபஸ் ஆக இருந்தபோது, ப்ருச்னிகர்பன் என்ற பெயரிலும், கச்யபர், அதிதியாக இருந்தபோது வாமனனாகவும், பிறந்தேன்.
இப்போது நீங்கள் வசுதேவர், தேவகியாக பிறந்திருக்கும்போது நான் மூன்றாவது முறையாக உங்களுக்கே மகனாகப் பிறந்திருக்கிறேன். இப்பிறவியின் முடிவில் நீங்கள் இருவரும் சாஸ்வத பதத்தை அடைவீர். வரத்தை ஸத்யம் செய்ததை நினைவுபடுத்தவே பகவானாகக் காட்சி கொடுத்தேன்.
நான் ப்ராக்ருத சிசுவாக மாறியதும் என் தந்தையான நீங்கள், என்னைக் கொண்டுபோய், நந்த கிராமத்திலிருக்கும் கோகுலத்தில் விட்டுவிடுங்கள். அங்கு நந்தனுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்.
வசுதேவரும் தேவகியும் பரம்பொருளை வணங்கி நிற்க, கணத்தில் மனிதக் குழந்தையாய் மாறினான் தேவாதிதேவன்.
சற்றுமுன் பார்த்த ரூபம் அழகா, இந்தக் குழந்தை அழகா என்னும் அளவிற்கு, உலகிலுள்ள அத்தனை சௌந்தர்யங்களையும் கொண்டிருந்தான் அந்தக் குழந்தை.
பளபளக்கும் கரிய நிறம், பருபருவென்று அலையும் கண்கள், குண்டுக் கன்னங்கள், தலை நிறைய அலைபாயும் கேசம், பட்டுப்போன்ற கைகால்கள், வைரத் துணுக்கு போல் விரல் நகங்கள், குழிந்த வயிறு, சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழி, எதைச் சொல்வது?
இத்தனை அழகான குழந்தையைப் பிரிவதென்றால் யாருக்குத்தான் மனம் வரும்? தேவகியின் நிலைமையைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை. அதனால்தானோ என்னவோ, குழந்தையின் மீது பற்று வராத வண்ணம், அது எங்கும் நிறைந்த பொருள் என்பதாய் ஸ்துதி செய்தாள் போலும்.
இறைவன் சொன்னதைக் கேட்டு இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி வருகிறது. சிறைச்சாலை பூட்டியிருக்கிறது, பலத்த காவல், இதை மீறி எப்படி செல்வது? நந்த கிராமம் பத்து மைல் தொலைவிலிருக்கிறது. நடுவில் யமுனையாறு வேறு. நந்தனோ சிற்றரசன். அங்கும் காவல் இருக்கும். அந்தக் காவலைத்தாண்டி, அவரது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும்.
வசுதேவர் ஒரே ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை. அவருக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இறைவன் இறைவனாகவே காட்சி கொடுத்து விட்டுச் சொல்லும் வார்த்தைகள். தானாகவே எல்லாம் சாதகாமாகும் என்று திடமான நம்பிக்கை அவருக்கு.
அதனால்தானோ என்னவோ, இறைவனுக்கு மூன்று பிறவிகளாகத் தந்தையாகும் பாக்யத்தைப் பெற்றார் போலும்.
அப்போது அங்கு ஒரு கூடை தோன்றியது.
தேவகியின் புடைவையை அதில் விரித்து, குழந்தையை எடுத்துக் கூடையில் வைத்து, அதைத் தலையில் வைத்துக்கொண்டு கிளம்பினார் வசுதேவர்.
சிறைக்காவலர்கள் அனைவரும் மாயையினால் உறங்கிக்கொண்டிருக்க, உயிரற்ற பொருள்களான சங்கிலிகள் தானே அறுபட்டு, பூட்டு தானே திறந்து, கதவும் திறந்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment