திருக்கண்ணன் அமுது - 5
முட்டாள்
தேவகி வசுதேவரின் திருமணம் முடிந்து மாலை ரதத்தில் புதுமணத்தம்பதியரை அமர்த்தி தேரோட்டம் நடந்தது. ஊராரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கம்சனே தேரை ஓட்டினான்.
அப்போது, திடீரென்று...
முட்டாளே!
என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது.
ஊர்வலத்தில் யானை குதிரை, பொய்க்கால்குதிரை, நாதஸ்வரம், ஊர் மக்கள் எழுப்பும் சத்தம் அத்தனையையும் மீறி அந்தக் குரல் தெளிவாக கணீரென்று கேட்டது. ஆயிரக்கணக்கான மக்களும் வீரர்களும் அங்கிருந்தனர். அத்தனை பேரின் காதிலும் சத்தமாக அந்தக்குரல் விழுந்தது.
ஆனால், ஒருவராவது திரும்பிப் பார்க்க வேண்டுமே. ஒருவரும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
நிமிர்ந்து பார்த்தவன் கம்சன் ஒருவனே.
ஆயிரம்பேர் ஆயிரம் புகழாரம் சூட்டினாலும், ஒவ்வொருக்கும் தான் யாரென்பது தெரியுமல்லவா?
எனவே, முட்டாளே என்ற அழைப்பிற்கு கம்சனைத் தவிர வேறெவரும் குரல் வந்த திசையை நோக்கியதாகத் தெரியவில்லை.
கம்சன் நிமிர்ந்து பார்த்தான். குரல் வந்த திக்கில் ஒருவரும் இல்லை. மாறாக, ஆகாயத்திலிருந்து இடிபோல் வந்த
அந்தக் குரல் தொடர்ந்தது.
முட்டாளே! நீ யாருடைய திருமணத்தில் மகிழ்ந்திருக்கிறாயோ அவளது எட்டாவது குழந்தை உனக்கு எமனாவான்!
தெளிவாக அனைவர் காதிலும் விழுந்தது.
அடுத்து நடக்கப்போவதென்ன என்பதை ஊர் மக்கள் நன்கறிவர். ஆளுக்கொரு திக்கில் ஓடி ஒளிந்துகொண்டனர். சில நிமிடங்களில் வீதியில் ஒருவருமே இல்லை, ஆங்காங்கே வீரர்கள் மட்டும் இருந்தனர்.
ஒரு நிமிடத்தில் தேரோட்டம் நடந்த வீதி கலவரம் நடந்ததுபோல் மாறிவிட்டது.
அந்த அசரீரி சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு புரிந்துகொள்வதற்கு கம்சனுக்கு சில கணங்கள் ஆயிற்று.
எனக்கே மரணக்கெடுவா? கொதித்தெழுந்தான், தேர் நடுங்கியது. ரதத்தில் பூட்டிய குதிரைகள் பயத்தில் எழும்பிக் குதித்தன.
ஹோ வென்று கத்திக்கொண்டு அரையிலிருந்த வாளைக் கம்சன் உருவியதைத்தான் வசுதேவர் கண்டார். அடுத்த கணம் அது தேவகியின் கழுத்தில் இருந்தது.
இவ்வளவு நேரமாக தேவகியைத் தங்கை தங்கையென்று கொண்டாடிய கம்சன்,
அவர்களிருவரையும் கேலிபேசி மகிழ்ந்து கொண்டிருந்த கம்சன்,
தேவகிக்கு ஆசையாக நிறைய பட்டுப்புடைவைகளையும் , நகைகளையும் தானே தேர்வு செய்து பரிசளித்த கம்சன்,
அவர்களுக்குத் தானே தேரோட்டிய கம்சன்,
அவளது குழந்தையால் தனக்கு மரணம் என்று கேட்டதும் மூர்க்கத்தனத்தோடு உடன் பிறந்தவளைக் கொல்லத் துணிந்தான்.
அழகுற அலங்கரிக்கப் பட்டிருந்த தேவகியின் கூந்தலைக் கொத்தாகப் பிடித்திழுத்துக் கீழே தள்ளி வெட்டுவதற்காக வாளை ஓங்கினான்.
உடனே, வசுதேவர் ஓடிவந்து தடுத்தார்.
இளவரசே!
நீங்கள் இப்படி செய்யலாமா?
இவள் உங்களது தங்கை.
இவ்வளவு நேரம் கொண்டாடிவிட்டு இப்போது கொல்வார்களா?
இவளைக் கொன்றால் எனக்கு மரணமில்லை. விடு வசுதேவா!
இவ்வளவு நேரம் மக்களிடம் நீங்கள் நல்ல பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற அறிவாளிகள் செய்யும் காரியமா இது?
துஷ்டனைப் புகழ்ந்து பேசினால்தான் அவனது துஷ்டத்தனம் கொஞ்சமாவது குறையுமாம்.
கம்சன் சற்று மனம் இரங்கினாலும் கத்தியை எடுக்கவில்லை. அவனது முகபாவத்தைப் பார்த்து சற்று தைரியம் வந்தது வசுதேவருக்கு.
தயவு செய்து விட்டுவிடுங்கள். நல்ல நாளில், அதுவும் திருமணத்தன்றே, ஒரு பெண்ணை, அதுவும் சொந்த தங்கையையே கொன்றான் என்ற பழி உமக்கு வேண்டாம்.
கம்சன் அதற்கும் மசியவில்லை.
இளவரசே! அசரீரி என்ன சொல்லிற்று? சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவகியா உம்மைக் கொல்லப்போகிறாள்? இல்லையே.. இவளது குழந்தை அதுவும் எட்டாவது குழந்தைதானே. இவளைக் கொல்வதால் என்ன லாபம்?
முதலில் கல்யாணமானால் குழந்தை பிறக்கும் என்பதே நிச்சயமில்லை. எட்டாவது குழந்தை பிறக்க எத்தனை காலம் இருக்கிறது? அதற்குள் அவளோ நானோ கூட இல்லாமல் போகலாம். எனவே, அசரீரி சொல்வதெல்லாம் நடக்கும் என்பதில்லை. நம்பாதீர்கள்.
கம்சன் அசையவில்லை.
வேறு வழியே இல்லை.
துஷ்டனிடம், தண்டனை எடுபடாது. பேதத்திற்கும் சமாதானத்திற்கும் கம்சன் மசியவில்லை. இனி தானம்தான்.
இப்போது வசுதேவர் சொன்னார்.
சரி, இவளை விட்டுவிடுங்கள். மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் எங்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தைகளை உங்களிடம் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். திருமண நாளன்றே தங்கையைக் கொல்லவேண்டாம்.
வசுதேவர் ஸத்யசந்தர். சொன்ன சொல் மீறமாட்டார் என்பதை நன்கறிவான் கம்சன்.
கத்தியை திரும்ப உறையில் வைத்தான்.
வீரர்களே! இவர்கள் இருவரையும் சிறையிலிடுங்கள்!
உத்தரவிட்டுவிட்டுப் புறப்பட்டான்.
தேரோட்டம் பாதியிலேயே நின்றது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment