திருக்கண்ணன் அமுது - 16

நந்தோத்ஸவம்

கோகுலத்தில் பொழுது புலர்ந்தது.

அங்குள்ள கோபிகளுக்கு மண்டை காய்ந்தது. 
நேத்திக்கே யசோதாம்மாவுக்கு இடுப்பு வலி வந்துட்டது. ஆனா, குழந்தை பிறந்த சேதி இன்னும் வரலியே..

நான் போய்ப் பாத்துட்டு வரேன்..

உள்ளே போய் கணவரிடம் சொன்னாள் ஒருத்தி, 
நான் போய் யசோதாம்மா வீட்டில் வெல்லம் வாங்கிண்டு வரேன்.

போனாள்.

அடுத்தவளும் வீட்டில் ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

இப்படியாக ஒவ்வொருவராகக் கிளம்பி யசோதை வீட்டிற்கு வந்துகொண்டே இருந்தார்கள்.

ஒருவரும் திரும்பிப் போகவில்லை.
போகவிட்டால்தானே நம் கள்ளன். அவனது, கண்ணும், மூக்கும், கன்னங்களும், சுழிந்த காதுகளும், அலையலையாய்க் கேசமும், திருவடிவழகும் காணக் காண பரவசமாயிற்று,அனைவரும் வீட்டை‌மறந்தனர்.

போனவர்களை வெகு நேரமாய்க் காணவில்லையென அவர்களது வீட்டிலுள்ளோரும் ஒவ்வொருவராய்க் கிளம்பி வர, நந்தன் வீடு நிரம்பியது. தண்டோரா போட அவசியமில்லாது போயிற்று.

நந்த ராஜாவுக்குப் பையனாம்

அவ்ளோ அழகாமே

பாக்கப் போனவங்க யாரும் திரும்பி வரவே இல்லையாமே

பொறந்த குழந்தை பாத்து பாத்து சிரிக்கறதாமே

அதிசயம்தான்

மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் குதித்தனர். ஆடினர், பாடினர்.

என்ன பாடினார்கள்
வேறென்ன?

ஜெய் ஜெய் கோவிந்த ஜெய ஹரி கோவிந்த..


நாமாவளிதான். எதை நிலைநாட்டப் பிறந்தானோ அது அவன் பிறந்ததுமே நடந்துவிட்டது.

அவர்களிடம் நிறைந்திருந்த தயிர், பால், வெண்ணெய், இவற்றை ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டனர். தன்னை மறந்த நிலையில் ஒவ்வொருவரும் துள்ள, நந்தோத்ஸவம் அரங்கேறியது.

தன்னைப் பார்க்க உள்ளே வந்த அனைவரையும் கண்களைச் சுழற்றி சுழற்றிப் பார்த்தான் கோபாலன்.

தன்னோடு விளையாடவும், சேர்ந்து மகிழவும் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள், தேவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்களா, யாரெல்லாம் வரவில்லை என்று கணக்கெடுப்பு நடத்தினான்.

கோபிகள் அனைவரும் தங்க நிறத்தில் அழகே உருவாய் இருக்க, அவர்களது கரங்கள் செம்மை படர்ந்து தாமரைகள் போலிருந்தன. ஒவ்வொரு கோபியும் போட்டி போட்டுக்கொண்டு குழந்தையை வாங்கி வாங்கிக் கொஞ்சினர். கருவண்டு போலிருந்த கண்ணன் ஒவ்வொரு தாமரைக்கும் தாவுவதுபோல் இருந்தது.

யசோதைக்கு கண்ணனைப் பார்த்துக்கொள்ளும் கவலையே இல்லை. ஊரே வந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டது. ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு வந்து கண்ணனைக் கொஞ்சுவதே கோபியரின் வேலையாகிப் போனது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37