திருக்கண்ணன்‌ அமுது - 18

நீராட்டம்

குழந்தை பிறந்ததும் நந்தன் அளவற்ற மகிழ்ச்சியுடன் பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்தார். குழந்தைப் பேறுக்காக,  குலதெய்வத்திற்கும், மற்ற தெய்வங்களுக்கும்,  யசோதையும், நந்தனும் என்னென்ன நேர்ந்துகொண்டிருந்தார்களோ, அத்தனையும் நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன.

அந்தணர்களுக்கும், மற்றவர்களுக்கும் 
ஏராளமான பசுக்களையும், வஸ்திரங்களையும், இன்னும் அவர்கள் விரும்பியவற்றையும்  தானங்களாக  வழங்கினார்.

கோகுலத்திலுள்ள அத்தனை வீடுகளிலும் அவரவர் வீட்டில் குழந்தை பிறந்ததைப் போல் மகிழ்ந்து தோரணம் கட்டி, வாசலில் தீபமேற்றி, பெரிய கோலங்கள் இட்டிருந்தனர்.

மகிழ்ச்சி‌ மிகுதியால், ஆங்காங்கே கும்மியிட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தனர்.
ஆண்கள் பரவசத்தில் கைகளில் என்னென்ன சாமான்கள் கிடைக்கிறதோ எல்லாவற்றையும் கொண்டுவந்து தாளம் போட்டுப் பாடி ஆடினர்.

இரவும் பகலும் ஒரே மாதிரி இருந்தது, எப்போதும் ஜே ஜே என்றிருந்தது நந்தன் வீடு. 

குழந்தையைப் பார்க்க வரும் பலரும், பலவிதமான பரிசுப்பொருட்களால் நந்தன் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். 
கோபிகள் என்ன பரிசு கொடுப்பார்கள்?
ராஜா வீட்டு அழகுக் குழந்தைக்கு எளியவர்களான அவர்களால் எந்தப் பரிசைக் கொடுக்கமுடியும்?

அத்தனை கோபிகளும் அன்போடு தாய்ப்பால் கொடுத்தனர். உலகம் உண்ட வாயனாயிற்றே. உள்ளன்போடு யார் எவ்வளவு கொடுத்தாலும் குடித்துவிடுவான்  அவன். 

அத்தனை பேர் மாற்றி மாற்றிக் கொடுக்கும் பாலையெல்லாம் குடித்தாலும், யசோதை வந்து பார்க்கும்போது வயிற்றைக் குழைய வைத்துக்கொண்டு அழுவான்.

ஓரொருநாள் விட்டுக் குளிமுறையில்  அவனைக் குளிப்பாட்டுவது பெரிய வைபவம்.

காலையிலிருந்தே ஒரு கோபிக்கும் வேலை ஆகாது. 

இன்னிக்கு கண்ணன் குளிமுறை 
இன்னிக்கு கண்ணன் குளிமுறை 
என்று சொல்லிக்கொண்டு காலையிலேயே வந்துவிடுவர்.

யசோதை மிகவும் குண்டாக இருப்பாள்.
ஒரு முக்காலியைப் போட்டுக்கொண்டு காலை நீட்டி, அதில் தலை இன்னும் சரியாக நிற்காத கண்ணனை, குப்புறப்போட்டுக்கொண்டு, உடல் முழுதும் வழித்து வழித்து, எண்ணெயைத் தடவி, காது மடல்களெல்லாம் நீவி, கைகால்களை உருவி விட்டு, விரல்களில் சொடக்கெடுப்பாள். 

கருப்பு உளுந்திற்கு எண்ணெய் தடவி உருட்டிவிட்டாற்போல்  விழித்துக் கொண்டிருக்கும் கண்ணனுக்கோ, கோபிகள் அவனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது மிகவும்‌ வெட்கமாக இருந்தது.

தலையை மெதுவாய் நிமிர்த்தினால், யசோதை அந்த ஈரேழு புவனங்கள் படைத்தவனின் தலையைப் பிடித்து தன் கால்களின் நடுவே அழுத்தி எண்ணெய் தேய்ப்பாள்.

முப்பத்து முக்கோடி தேவரும் வந்து வானத்தில் நின்று கொண்டு ஆவென்று வாயைப் பிளந்துகொண்டு வேடிக்கை பார்த்தனர். யசோதையின் புண்ணியக் கணக்குகளை எவ்வளவு அலசினாலும், அவளது பாக்யம் என்னவென்பது ஒருவருக்கும் பிடிபடவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37