திருக்கண்ணன் அமுது - 13

பிறந்ததுமே புறப்பாடு

வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் கொள்ளை கொண்டுபோகும் அழகுடைய குழந்தையைத் தலைமேல்‌ சுமந்துகொண்டு புறப்பட்டார் வசுதேவர். மாயையினால், உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் உறக்கத்தில் ஆழ்ந்தன.

ஆனால், ஜடப் பொருள்களுக்கெல்லாம்‌ ஜீவன் வந்துவிட்டது. பூட்டப்பட்ட சங்கிலிகள் தானே கழன்றன, பூட்டு தானே திறந்தது. சிறைச்சாலையின் அத்தனை  கதவுகளும் கடகடவென்று சத்தமின்றித் திறந்தன. எதையும் யோசிக்காமல் வசுதேவர் விடுவிடுவென்று நடந்தார்.

அடை‌மழை பெய்து கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அவர் நடக்கத் துவங்கினார். தனது தலைவர் மழையில் நனைவதைக் காண இயலுமா? ஆதிசேஷன் ஓடிவந்து குடை பிடித்துக்கொண்டு பின்னாலேயே தொடர்ந்தார். இறைவன் எந்த நிலையிலிருந்தாலும் கைங்கர்யம்‌ செய்வதற்குத் தயார் நிலையிலிருப்பவராயிற்றே? 

பாதிதூரம் சென்றதும் யமுனை வந்தது.

வசுதேவர் எதையும்‌ பொருட்படுத்தினாரில்லை. நீரில் இறங்கி வேகமாய் நடக்கத் துவங்க இடுப்பளவு ஆழம்‌ வந்ததும் நடை‌யின் வேகம்‌ குறைந்தது. தன்னைக்‌ கடந்து செல்லும் இறைவனை தரிசிக்க விரும்பினாள் யமுனாதேவி. ஒரு அலையாய்  வசுதேவரின் தலைக்கு மேல்‌எழும்பி கூடையினுள்‌ எட்டிப் பார்த்தாள். குமிழ்ச் சிரிபோடு மயக்கும் குழந்தை நீரைக் கண்டதும் கையைக் காலை ஆட்டி‌ மகிழ்ச்சியினால் துள்ளியது. 

பாதத்தைத் தொட்ட யமுனையின் உற்சாகத்திற்கு அளவே இல்லை.

இப்போதைக்கு இது போதும். சிறிது வளர்ந்ததும் தன்னோடு விளையாட வந்துவிடுவான். அதுவரை இந்த ஸ்பர்சத்தின் பூரிப்போடு காத்திருக்கலாம் என்று நினைத்தாளோ‌ என்னவோ, சட்டென இரண்டாகப் பிரிந்து வசுதேவருக்கு வழிவிட்டாள். 

பின்னாளில் அவளது ஏக்கம்‌ தீர யமுனை நீரில் லூட்டி அடிக்கப்போகிறான் இந்தக் குழந்தை. 

நந்தனின் அரண்மனையை அடைந்தார் வசுதேவர். ஊரே உறங்கிக்கொண்டிருக்க, அரண்மனைக் கதவுகள் தானே திறந்தன. நேராக, அந்தப்புறம்‌ சென்றார். அங்கே மயக்கத்திலிருந்த யசோதையின் அருகில் அப்போதுதான் பிறந்த பச்சிளம் குழந்தை இருந்தது. பிரசவம் பார்த்த கிழவியும் கட்டிலின் அருகே மயங்கிக் கிடந்தாள்.

கனத்த மனத்தோடு, தன் குழந்தையைக் கிடத்தினார். அவனது விரலில் வசுதேவரின் பூணூல் சிக்கிக்கொள்ள, மெதுவாய் அவனது பிஞ்சு விரல்களைப் பிரித்து விடுவித்துக் கொண்டார். தன் மார்பில் உதைக்கும் பட்டுப் பாதங்களை‌ முத்தமிட்டுவிட்டு, அங்கே இருந்த பெண் குழந்தையைப் பார்த்தார்.

அவளும் இவனுக்கு அழகில் குறைந்தவளல்லவே. மீன் போன்ற கண்கள் அங்குமிங்கும் அலைய, தன்னைத் தூக்கும் வசுதேவரைப் பார்த்து மோகனச் சிரிப்பொன்று உதிர்த்தாள் தேவி. பின்னர் தலையை எட்டி, யசோதையின் அருகிலிருக்கும் தன் சகோதரனைப் பார்த்துக் கண்களால் விடை பெற்றாள். கையிலெடுத்த குழந்தையை அணைத்து நெற்றியில் முத்தமிட்ட வசுதேவர், கூடையில் வைத்துக்கொண்டு நடக்கலானார். 

அவர் நடக்க, நடக்க நந்தனின் அரண்மனைக் கதவுகள் மீண்டும் தாழிட்டுக் கொண்டன. 
யமுனை மீண்டும் வழிவிட்டாள். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல், நேராக சிறைச்சாலையை அடைந்தார் வசுதேவர்.

அத்தனை கதவுகளும்‌  மூடிக்கொண்டன. பூட்டுக்கள்‌ பூட்டிக்கொண்டன. குழந்தையை தேவகியின் அருகில் விட்டார் வசுதேவர். 

கீழே இறக்கி விடப்பட்டதும், சுற்றுமுற்றும் பார்த்தாள் தேவி. எல்லாம் சரியாக இருக்கிறதென உறுதிப்படுத்திக்கொண்டபின் விஷ்ணுமாயையான அவள் தன் வேலையை ஆரம்பித்தாள்.

வீல் என்று பத்ரகாளியான அவளது அலறல் சத்தம் கேட்டு‌ ஜகமே விழித்துக் கொண்டது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37