திருக்கண்ணன் அமுது - 9
தாயைக் குடல்விளக்கம் செய்த எம்பெருமான்
கருவுற்ற ஏழாவது குழந்தையை ஐந்தாவது மாதத்தில் திடீரென்று வயிற்றுக்குள் காணவில்லை. கர்பம் கரைந்துவிட்டதோ என்று எண்ணி அழும் தேவகியை சமாதானப் படுத்த எவராலும் இயலவில்லை.
கம்சன் அளவுக்கதிகமாகக் குழம்பிப் போனான். ஏழாவது குழந்தையைக் காணோமா? வயிற்றில் கரைந்துவிட்டதா? ஏதாவது மாயையா? அப்படியானால், இனி அடுத்துப் பிறக்கப்போகும் குழந்தை ஏழாவது குழந்தையா? அல்லது எட்டாவதா?
அசரீரி எட்டாவது கர்பம் என்று சொல்லிற்று. பிறந்த குழந்தைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டுமா? இறந்து விட்டவையும் கணக்கில் வருமா? இதுபோதாதென்று கர்பத்தில் கரைந்த குழந்தையைச் சேர்த்து எண்ணுவதா?
பைத்தியமே பிடிக்கும்போலாகிவிட்டது.
ஆறு குழந்தைகளைப் பிறந்ததுமே கண்ணெதிரே பறிகொடுத்துவிட்டாள். ஏழாவதாக வந்ததும் கரைந்துவிட்டது. புண்ணாகிப் போன அவளது கர்பப்பையை ஆற்றுவதற்காக இறைவனே வந்து அமர்ந்தான்.
இவ்வளவு நாள்களாக தேவகி, வசுதேவர், ஸாதுக்கள், தேவர்கள், இன்னும் ஈரேழு பதினான்கு உலகங்களில் வசிப்பவர்களும் எதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனரோ, அது நிகழ்ந்தது.
பிறப்பே இல்லாதவன் எவனோ, யோகிகளுக்கும் துர்லபன் எவனோ, அனைத்து உலகங்களையும் வயிற்றினுள் அடக்கியவன் எவனோ, அந்த இறைவன் தேவகியின் வயிற்றில் அடங்கினான்.
தெய்வத்தைக் கருவில் சுமந்த தேவகி தேவதைபோல் இருந்தாள். ப்ரம்மா, இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் அவளைப் ப்ரதக்ஷிணம் செய்வதை உணர்ந்தாள். ஒவொருவரும் கருவில் இருக்கும் பகவானைக் குறித்து பலவிதமான ஸ்துதிகளைச் செய்தனர்.
இதே அனுபவம் ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் அன்னையான சந்திராமணி தேவிக்கும் ஏற்பட்டது. அப்போது, பரமஹம்ஸரின் தந்தையான க்ஷுதிராம், புத்த கயாவில் குடிகொண்டிருக்கும் கதாதர மூர்த்தி தானே வந்து பிறக்கப்போவதாய் வாக்களித்திருக்கிறார் எனவும், கண்ணனின் தாயான தேவகிக்கும் பகவானைக் கருவுற்றிருக்கும் சமயம் தேவகிக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவளுக்குச் சொல்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்தாலும் காண இயலாத இறைவன் இப்போது அனைவர்க்கும் சுலபனாய், ப்ரதக்ஷிணம் செய்வதற்கு வசதியாய் கர்பத்தில் வந்தமர்ந்திருக்கிறான்.
இறைவன் நமக்கு அனுக்ரஹம் செய்வதற்காக காராக்ருஹத்திலுள்ள தேவகியின் வயிற்றை கர்பக்ருஹமாக்கிக் கொண்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment