கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 2
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில் சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே
சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும் பகிரப்படுகின்றன.
ஹிரண்யகசிபுவைப் பற்றி அனைவரும் அறிவோம். பக்த ஸாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தியான ப்ரஹலாத மஹராஜின் தந்தை. ஈரேழு பதினான்கு லோகங்களும் ஹிரண்யனுக்கு அடிமைப்பட்டிருக்க, அவனது உதிரத்திலேயே உதித்த ப்ரஹலாதன் மட்டும் ஹரிநாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனை ஹரிநாமத்தை மறக்கச் செய்து தனது பெயரை ஜபம் செய்யும்படி அறிவுறுத்துவதற்காக பாடசாலைக்கு அனுப்பினான் ஹிரண்ய கசிபு.
ஹரியைப் பகைத்துக்கொண்டு பன்னெடுங்காலம் வாழ்ந்த அவனால் ஒரு உத்தம ஹரிதாஸனைப் பகைத்துக்கொண்டு ஐந்துவருடம் கூட வாழமுடியவில்லை.
அசுரகுருவான சுக்ராசாரியார் ஹிரண்யகசிபுவின் நிலைமை தெரிந்து தீர்த்தயாத்திரை கிளம்பிச் சென்றுவிட்டார். அவரது மகன்களான சண்டனும் அமர்க்கனும் பாடசாலையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
சந்தனமரம் இருந்தால் போதும். தானாகவே அதனுடைய நறுமணம் காற்றில் பரவி வரும். அதுபோல், ப்ரஹலாதன் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் நாராயணநாமம், பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளிடமும் பரவ ஆரம்பித்தது.
ப்ரஹலாதன் ராஜா வீட்டுக் குழந்தையானதால், மிகவும் கண்டித்துச் சொல்லவும் சண்டாமர்க்கர்களுக்கு பயம். எனவே, இருவரும் தினமும் காலை ப்ரஹலாதனை எதிரே அமர வைத்துக்கொண்டு,
அவனைப் பார்த்து
நாராயணா சொல்லக்கூடாது
என,
ப்ரஹலாதனோ
நாராயணா
என்பான். மீண்டும் குருமார்கள் இருவரும்,
நாராயணா சொல்லக்கூடாது
நாராயணா
இவ்வாறு துண்டுக்குள் ஜபமாலையை வைத்துக்கொண்டு குருமார்களும், சிரித்த முகத்தோடு ப்ரஹலாதனும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். 1008 முறை ஆனதும்,
இன்றைய பாடம் முடிந்தது. ப்ரஹலாதா போய் விளையாடு
என்று அனுப்பி விடுவார்கள்.
இந்தப் பாடம் மற்ற குழந்தைகளுக்கு விசித்ரமாகத் தென்பட்டது. சாதாரணக் குழந்தைகளே, மற்றவர்களை கேலி செய்து விளையாடுகிறார்கள். பாடசாலையில் படிப்பவர்களோ அசுரக் குழந்தைகள். சும்மா இருப்பார்களா?
குருமார்கள் இருவரும் வெளியே சென்றதும் ஆரம்பித்து விடுவார்கள்.
டேய், நீதான் ப்ரஹலாதனாம்
நான் பெரிய வாத்தியார். இவன் சின்ன வாத்தியார்.
எல்லாரும் உக்காருங்கடே.
ஒருவன் ஆரம்பிப்பான்.
நாராயணா சொல்லாக்கூடாது
ப்ரஹலாதனாக நடிக்கும் குழந்தை
நாராயணா
என்று சொல்லும். போகப்போக மற்ற குழந்தைகளும் சேர்ந்து நாராயணா என்று கோஷமிடுவார்கள்.
இப்படியாக, ப்ரஹலாதன் ஒருவனது இருப்பினாலேயே, அந்தப் பாடசாலையில் படிக்கும் ஆயிரக் கணக்கான அசுரக் குழந்தைகளின் நாவிலும் நாராயண நாமம் நுழைந்துவிட்டது.
ஒரு உத்தம ஸாது நாட்டின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தாலும் போதும். அவரைச் சுற்றியுள்ள ப்ரதேசம் முழுவதுமே சுபிக்ஷமடைந்துவிடுகிறது.
Comments
Post a Comment