திருக்கண்ணன் அமுது - 2

ஆயிரம்

ப்ரும்மாவிடம் பாரம் தாங்கவில்லையென்று  முறையிடச் சென்றாள் பூமித்தாய். 
ப்ரும்மா அவளது முறையீட்டைக் கேட்டுவிட்டுச் சொன்னார்,
ஜீவர்களின் பாவ புண்யங்களை, அந்தந்தப் பிறவிகளின் தாங்கும் சக்திக்கேற்ப சிறிது சிறிதாகப் பிரித்து (ப்ராரப்தம்) அவர்களுக்கு விதித்து அவர்களைத் தகுந்த நேரத்தில்  பிறக்கச் செய்வதே என் பணி. 

அவர்களது குணம், நடத்தை, மற்றும்  வாழ்க்கை முறை எல்லாம் ஜீவன்களின் வாசனையைப் பொறுத்தே அமைகிறது. இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை, நம் தலைவரான நாராயணனிடமே முறையிடலாம்.  சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பூமியில் நடக்கும் அக்கிரமங்களால் மிகவும் அதிருப்தி அடைந்திருந்த தேவர்களும் ஸத்யலோகம் வந்துவிட்டனர்.

ப்ரும்மா, பூமிதேவி, தேவேந்திரன் மற்றும் அத்தனை தேவர்களையும் அழைத்துக்கொண்டு வைகுண்டம் சென்றார். 

பாற்கடலின் கரையிலேயே நின்றுகொண்டு பகவானை புருஷஸூக்தத்தினால் ஸ்துதி செய்யத் துவங்கினார்.

ப்ரும்மாவிற்கு நான்கு தலைகள். நான்கு தலைகளாலும் நான்கு வேதங்களையும் ஓதிக்கொண்டிருப்பவர்.

புருஷஸூக்தம் என்பது வேதம் பயில்பவர்களுக்கு பாலபாடம் போன்றது. அத்தனை வேதங்களிலும் கரை கண்ட ப்ரும்மாவிற்குத் தெரியாத ஸ்துதிகளா? அவர் ஏன் பாலபாடம் போன்ற புருஷஸூக்தம் சொன்னார்? வேதம் படிக்கத் துவங்கிய சிறார்கள் கூடச்  சொல்லும் புருஷஸூக்தத்தை ப்ரும்மா சொல்வது அவரது பாண்டித்யத்திற்கு குறைவாகாதா? ஏதாவது கடினமான ஸ்துதி கொண்டு பகவானை பிராரத்தனை செய்திருக்கலாமே.

புருஷ ஸுக்தம் எப்படி ஆரம்பிக்கிறது? 

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: என்று.
பல இடங்களில் ஸஹஸ்ரம் ஸஹஸ்ரம் என்று வரும்.

ஒரு பெரிய மனிதரிடம் உதவியாளராக இருப்பது மதில்போல் பூனை போன்றது. அவருக்கு மாலை 5 மணிக்கு ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டும் என்றால் அதை நினைவு படுத்துவது
உதவியாளரின் கடைமை. நேரடியாக மேலதிகாரியிடம் சென்று 5 மணிக்கு நிகழ்ச்சிக்குப் போகவேண்டும் என்று சொன்னால், அவர் 
எனக்குத் தெரியாதா? என்பார். 
அவருக்குத் தெரியும் என்று நினைத்துப் பேசாமல் இருந்தால், 
ஏன் நினைவு படுத்தவில்லை?
என்று கோபித்துக் கொள்வார். 

அதுபோல, ப்ரும்மாவும் இறைவனிடம் நேரடியாகப் பேசுவதற்குத் தயங்குகிறார்.
ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். எனவே, ஸஹஸ்ரம், ஸஹஸ்ரம் என்று வரும் ஸ்துதியைச் சொன்னால், அடுத்த அவதாரத்திற்குக் காலம் வந்துவிட்டது, ஆயிரம் பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது.
ஆயிரக் கணக்கான ஸாதுக்கள் துன்புறுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

ஆயிரக் கணக்கில் அட்டூழியம் செய்யும் அசுரர்கள் அதிகரித்து விட்டனர். இவ்வாறு பல செய்திகளைக் குறிப்பில் உணர்த்தும் பொருட்டு புருஷஸூக்தம் சொன்னார் போலும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37