திருக்கண்ணன் அமுது - 15

வாராது வந்த மாமணி

உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறிடத்தில் வளர்கிறான் என்று சொல்லிவிட்டு மறைந்தாள் தேவி.  

கம்சனுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. குழப்பத்தின் மொத்த உருவமாக இருந்தவனை பயமும் பிடித்துக் கொண்டது. எங்கோ வளர்கிறானாமே, வளர்வதற்குள் கண்டுபிடித்துக் கொன்று விடவேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது?

மந்திரிகள் எல்லோரும் வந்தார்கள். எல்லோரும்‌பேசி அற்புதமான முடிவெடுத்தனர்.
ஊரிலுள்ள அத்தனை குழந்தைகளையும் கொன்றுவிடலாம் என்பதே அது.

பிறகு இன்னும் ராஜ்ஜியத்தினுள் ஆலோசித்து பத்து நாள்களுக்குள் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொல்வதென தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தக் காரியத்தைச் செவ்வனே செய்ய கம்சனின் மந்திரிகளுள் ஒருத்தியான பூதனை முன்வந்தாள்.

வெளியூர்களுக்குச் செல்லக்கூடாதென்ற நிபந்தனையுடன் வசுதேவரையும், தேவகியையும்‌ சிறையிலிருந்து விடுவித்தான் கம்சன். இருந்தபோதிலும், எந்த நேரமும் மீண்டும் சிறைவாசத்தை எதிர் பார்த்திருந்தார் வசுதேவர். அவரைக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்திருந்தான் கம்சன்.

சத்தம்‌போடாமல் நந்தகிராமம்‌ சென்ற நம் இறைவன் எப்படி இருக்கிறான்?

வாருங்கள்‌ கோகுலம்‌ செல்வோம்.

பொழுது புலரும் நேரம், ப்ரசவம் பார்த்த கிழவிதான்‌ முதலில் விழித்துக்கொண்டாள். மயங்கியிருந்த யசோதையை எழுப்பினாள்.

யசோதே யசோதே, உன் பெண்ணைப் பாரு.. உன் பெண்ணைப் பாரு..
என்று அவளை உலுக்கினாள்.
யசோதை மெல்லக் கண் விழித்துப் பார்த்தாள். 

பாட்டீ, உனக்கு வயசாயிடுச்சு. கண்ணு தெரியலையா? இது பையன் பாட்டீ.. குழந்தையை வாரியணைத்து உச்சி‌மோந்தாள். எவ்வளவு காலமாய் ஒரு குழந்தைக்கு தவம்‌ செய்திருக்கிறாள். மலடியென்ற பட்டம் இன்று இவனால் தொலைந்தது. எவ்வளவு அழகு என் மகன்.. பார்த்துப் பார்த்து ஆறுமா?

கிழவி‌ தலையைப் பிய்த்துக்கொண்டாள்.
நன்றாய் நியாபகம்‌ இருக்கிறது. பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி விளக்கில் பார்த்தாள். பெண் குழந்தைதான்,எப்படி பையனாயிற்று. 

அவள் பேச்சை யார் கேட்பார்?

இன்னொரு தாதி ஓடினாள்.
மஹாராஜா மஹாராஜா
உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்.

வயதான காலத்தில் தனக்கு இப்படி ஒரு பாக்யமா? இனி குழந்தைப் பேறில்லை போலும் என்று ஆசைப்படுவதையே நிறுத்தி விட்டேன். ஆனால், இறைவன் அருளால் மகன் பிறந்திருக்கிறானே. நந்தனின் மனம் எங்கோ பறந்தது. 

ஓடி வந்து குழந்தையைப் பார்த்தார் நந்தன். 
அழகோ அழகு என்‌ மகன். இப்படி ஒரு கொடுப்பனையா? ஸர்வ லக்ஷணங்களுடன் பார்த்தவுடன் உள்ளம் துள்ளுகிறதே..

தண்டோரா போடுவதற்கு உத்தர விட்டு விட்டு மேலே ஆகவேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றார் நந்தன். இருந்தாலும் உள்ளம் நிலையில் இல்லை.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37