குருவருள் ஒன்றே கதி - 34

அவதார புருஷர்கள் - 2

ஸ்ரீ ராமருஷ்ண பரமஹம்ஸரின் வேண்டுதலுக்கிணங்க தனக்கு தரிசனம் கொடுத்த பவதாரிணியிடம் தன் குடும்ப கஷ்டங்களுக்கு விமோசனம் கேட்காமல், பக்தியும் ஞானமும் வேண்டுமென்று கேட்டார் நரேந்திரன்.

மீண்டும் இன்று தரிசனம் தரச் சொல்கிறேன், இன்று உன் ப்ரச்சினைகளைப் பற்றி காளியிடம் கேட்டுக்கொள் என்றார் பரமஹம்ஸர்.

இன்றும் அன்னையின் தரிசனத்திற்காக இரவு பன்னிரண்டு மணிக்குக் கோவிலுக்குச் சென்றார் நரேந்திரன்.

திரும்ப திரும்ப, தன்னுடைய வேண்டுதல்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டு போனார். நியாபத்திற்காக சிறு குறிப்பு கூட எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார் .

இரவு பன்னிரண்டு மணிக்கு பரமஹம்ஸரின் வாக்கை சத்தியமாக்க அன்னை தோன்றினாள். அவளது தோற்றம் மயக்குவதாக இருந்தது. ஸாக்ஷாத் பகவத் ஸாந்நித்யம். குப்பென்று அடிவயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி வந்து அடைத்தது. 
காற்றில் அலையும் குழலும், அவளது ஆடையும், தாமரைக் கண்களும், நீண்டு தொங்கும் நாக்கும், அழகிய முகமும், பயத்தை ஏற்படுத்துவதாக இல்லை. சிங்கத்தைப் பார்த்து மற்றவர்கள்‌பயப்படலாம். தாய்ச் சிங்கத்திடம் குட்டிச்‌சிங்கம்‌பயப்படுமா? மாறாக ரசித்தது. பரவச நிலை வந்துவிட்டது. ஆனந்தக் கண்ணீர் வந்தது. குரல் தழுதழுத்தது. நேற்றை விட இன்று அனுபவம்‌ இன்னும் அதிகமாயிற்று.

என்ன வேண்டும் சொல் ‌நரேந்திரா?

வீணையின் நாதமாய் ஒலித்தது அன்னையின் குரல்.
பதில் சொல்லப்
பேச்செழும்பினால்தானே..

அன்னை அழகாக முறுவலிக்க, 
அம்..மா...
அம்ம்ம்.மா....
அம்ம்ம்ம்ம்...மா...

அதைத் தவிர வேறொன்றும் நாவில் வரவில்லை. 
முத்துச் சிதறியதுபோல்
சிரித்தாள் தேவி. அது ப்ரபஞ்சத்தின் ஆதார ஸ்ருதி.

சொல் நரேந்திரா, என்ன வேண்டும்? 

மீண்டும் வீணை நாதம்.

அம்மா,

அவளே பேசச் சொன்னதால் கொஞ்சம் குரல் வந்தது.

அம்மா, எனக்கு தைல தாரை போன்று பக்தி வேண்டும். உலக விஷயங்களில் வைராக்யம் வேண்டும். 

போதுமா?

ஞானத்தைக் கொடுங்கள்‌ அம்மா..

நீயே ஞானக் குழந்தை தானடா. அனைவருக்கும் ஞானம் ஊட்டவே நீ பிறந்திருக்கிறாய்.

மறைந்துவிட்டாள்.

அன்னையின் உருவம், சிரிப்பொலி, அவளது தேஜஸ் இதைத் தவிர மனதில் ஒன்றும் இல்லை. என்ன பேசினாள், இவர் என்ன பேசினார் எல்லாம் மறந்துவிட்டது.

தாயை தரிசித்துவிட்டு வரும் சேயைக் காண ஆவலுடன் காத்திருந்தார் குருநாதர்.

வா வா வா நரேன்! அம்மவைப் பார்த்தாயா?
உன் ப்ரச்சினையெல்லாம் சொன்னாயா? என்ன சொன்னாள் தேவி?

திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைபோல், குருதேவரைப் பார்த்ததும் மலங்க மலங்க விழித்தார் நரேந்திரன். ஒன்றுமே நினைவில் இல்லை. 

சொல்லு நரேன்..

உலுக்கினார் பரமஹம்சர்.

டாகுர் அம்மவைப் பார்த்தேன்.

பாத்தியா? பாத்தியா? என்ன சொன்னாள்? உன் கஷ்டம் தீரும்னு சொன்னாளா? 

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் நன்றாக ஆட்டினார் குரு தேவர்.

இல்லை‌ டாகுர்.

சொல்லலியா? பின்ன என்னதான் பேசின?

அது வந்து...

சொல்லு‌ நரேந்திரா, அம்மாவிடம் என்ன கேட்டாய்?

 பக்தி, வைராக்யம், ஞானம் இதெல்லாம்‌ வேணும்னு கேட்டேன்.

பரமஹம்ஸரின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சொன்னார்.

இதோ பார் நரேன். நான் திரும்ப திரும்ப அம்மாவிடம் ஒரே விஷயத்தை வேண்ட முடியாது. கடைசியா ஒருமுறை நாளை இரவு உனக்கு தரிசனம்‌ தரச் சொல்றேன். நீ‌ உன் வேண்டுதல்களை நல்லா உருப்போட்டுக் கொண்டு வா. அப்போதான் பரவசம் வந்தாலும் மறக்காது. 
சரியா?

சரியென்று தலையாட்டிவிட்டு சென்றாரே தவிர,  நரேந்திரரின்  நினைவில் அன்னையின் குரலையும், உருவத்தையும் தவிர வேறெதுவும் நிற்கவில்லை.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37