திருக்கண்ணன்‌ அமுது - 17

பொய்யழுகை

பிறந்ததென்னவோ சின்னஞ்சிறு குழந்தை, ஆனால், வீடு கொள்ளாத வேலை. 

வருவோரெல்லாம் வந்த வண்ணமே. ஒருவருக்கும் திரும்பிப் போகும் எண்ணமே இல்லை, யசோதை போகச் சொல்லிவிடப் போகிறாளே என்று கோபிகள் மாற்றி மாற்றி அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். கண்ணனைப் பார்த்துக்கொள்ள எப்போதும் ஒரு கோபியர் கூட்டம்.

ஒரு மணி‌நேரத்திற்கு ஒரு முறை அவனது அலங்காரமும் மாறும்.

எல்லோரும் அவன்‌ முகம் வாடாமல் பார்த்து பார்த்துக் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.

கண்ணனுக்கோ, தான் அழுதால் இவர்கள் என்ன செய்வார்கள் என்பதைக் காண ஆவல் போலும்.

திடீரென்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழ முயற்சி செய்தான். என்னதான் செய்வான் பாவம்? இதுவரை அழுது பழக்கமில்லை. இப்போது யார் யாரோ அழுததையெல்லாம்‌ நினைவுபடுத்திக்கொண்டு அதுபோல் நடித்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

அவன் முகம் மாறியதோ இல்லையோ, அத்தனை கோபிகளுக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஏன்டி குழந்தை அழறான்?

தெரியலையே..

பசியா இருக்குமோ

இப்பத்தான் பால் குடிச்சான்

ஏதானும் எறும்பு கடிச்சுதா பாரு

அவன் உடைகளைக் கழற்றி உதறி, வேறு மாற்றியாயிற்று. அவனுக்குக் கொஞ்சம் வெட்கமாய் இருந்தது. முகம் சிவந்து அழ ஆரம்பித்தான்.

கண்ணீர் வரவில்லையே தவிர, அழுகை நிற்கவில்லை.

வயத்தை வலிக்கறதா?

ப்ரும்மா தோன்றிய நாபியைத் தொட்டுப் பார்த்தாள் ஒரு கிழவி.

இல்லியே.. அஜீரணமெல்லாம் இல்ல.

ஏய் நான் கண்டு பிடிச்சுட்டேன்.
இவ முகத்தைப் பாத்து பயப்படறான் போல

அருகிலிருந்த கோபியை கேலி செய்தாள் ஒருத்தி.

போடி உன்னைப் பாத்துத்தான் பயப்படுவான்.
இவ்வளவு நேரம் என்னைப் பார்த்து சிரிச்சுண்டு தான் இருந்தான்..

நான் பாடறேன்டி.. இப்ப அழுகையை நிறுத்துவான் பார்.

கோபாலா
கோபாலா
கோகுல நந்தன கோபாலா..
சிறிதுநேரம் அழுகையை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்த 
குழந்தை மறுபடி அழத் துவங்கினான். 

நீ அழறன்னு நினைச்சுட்டான்டி. உன் பாட்டைக் கேட்டு அழுகை அழுகையா வருது அவனுக்கு. 

நான் ஆடறேன்டி, உடனே அழுகை நிக்கும் பாரு.

இன்னொரு கோபி ஆட ஆரம்பித்தாள்.

அவ்வளவுதான், இன்னும்‌ பெரிதாக அழுதான்.

அழுகை பலமாகக்‌கேட்கவும்‌ யசோதை உள்ளேயிருந்து வந்தாள்.

என்னடி பண்ணினீங்க குழந்தையை?

அம்மாவைப் பார்த்ததும் அழுகை நின்றது. குழந்தைக்குத் தூக்கம் வருது, சத்தம் போடாதீங்கடி தோளில் போட்டுப் பாடிக்கொண்டே தட்டிக் கொடுத்தாள்.

ஆய்ச்சியர் போற்றும் ஆனைக்குட்டியே
கட்டிக் கரும்பே கண்வளராய்..
ஆராரோ.. ஆரிரரோ..

கண்ணன் கொட்டாவி விட, அவன் வாய்க்குள் வெள்ளையாகத் தெரிந்தது. அதைக் கண்டு யசோதை, குழந்தை குடித்த பால் ஜீரணமாகவில்லையோ என்று நினைத்துவிட்டாள். முதுகில் ஏப்பம் விடும்வரை  தட்டிகொடுத்து ஒருவாறு தூங்கப் பண்ணினாள்.

உண்மையில் யசோதை பார்த்ததென்ன தெரியுமா? 
ப்ரபஞ்சமும் வெண்பனிபடர்ந்த இமய மலையும். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37