Posts

Showing posts from October, 2017

ப்ருந்தாவனமே உன் மனமே - 55

Image
ஸாதுக்களின் கவலை உலகில் மக்கள் இறைவனை மறந்து துன்பப்படுவதைக் கண்டு உண்மையில் வருந்துபவர்கள் ஸாதுக்களே. இறைவனைப் பொறுத்தவரை அவனுக்குப் போற்றுபவருக்கும் தூற்றுபவருக்கும் வித்தியாசமே இல்லை.  கண்ணாடி ப்ரதிபலிப்பதைப்போல் யார் யார் எந்த உணர்வைக் கொண்டு அவனை அணுகுகிறார்களோ அதே உணர்வை அவர்களிடம் வெளிப்படுத்திவிடுகிறான்.  ஒவ்வொரு முறையும் யாராவது மஹான்களின் வேண்டுதலின்படித்தான் இறைவனோ அல்லது அவனுக்குத் துல்லியமான ஒரு மஹானின் அவதாரமோ பூமியில் நிகழ்கிறது. இறைவன் பிறந்துவிட்டான். தினம் தினம் புதுப்புது லீலைகள் செய்கிறான். மூவுலகத்தாரும் கண்டு ரசிக்கின்றனர். எல்லாம் சரிதான். அவதார காரியங்கள் அப்படியே நிற்கின்றனவே.. அவ்வப்போது அசுரவதங்கள் நடைபெற்று வந்தபோதும், அசுரர் தலைவனான் கம்ஸன் இன்னும் ஸாதுக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறான். அவன் மனதில் கௌரி மரண பயத்தை விதைத்துவிட்டிருந்த போதும், அவனுக்குத் தன்னைக் கொல்ல வந்தவன் க்ருஷ்ணன்தானா என்பதில் சந்தேகம் இருந்தது போலும்.. எவ்வளவு நாள்களுக்கு ஸாதுக்கள் அவதிப்படுவார்கள்? எவ்வளவு வருடங்களுக்கு தேவகியும் வசுதேவரும் சிறையில் வாடுவார்கள்? இப்படி...

ப்ருந்தாவனமே உன் மனமே - 54

Image
அஸுரனால் வந்த இரட்டை லாபம் கருணையும் அன்பும் உருவானவள் ஸ்ரீராதா தேவி. அனுதினமும் கண்ணன் செய்யும் லீலைகள் அனைத்தும் அவள் காதுகளை உடனுக்குடன் எட்டிவிடும். கண்ணனின் லீலைகளே அவளுக்கு உண்ணும் சோறு, பருகும் நீர். ஒரு காளையைக் கொன்றுவிட்டான் கண்ணன் என்று கேட்டுத் துடித்துப்போனாள். அசுரனாய் இருந்தால் என்ன, காளை உருவில் வந்துவிட்டான். கொல்லத்தான் வேண்டுமா என்ன? கண்ணனின் பார்வை பட்டால் மாறாத மனமும் உண்டா? மறுநாள் கண்ணன் மாடுகளை மேய்க்க வனம் சென்றதும், அவனைத் தேடிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டாள். மேலும் ஒரு ரிஷபத்தைக் கொன்றால் கண்ணனுக்கு ப்ரும்மஹத்தி தோஷம் வந்துவிடுமோ என்ற பயம் வேறு. வா ராதா! என்ன இவ்வளவு தூரம்? பூப்பறிக்க வந்தியா? இல்லை. உன்னைப் பாக்கத்தான். ஒய்யாரமாய் சாய்ந்து அமர்ந்திருந்த கண்ணன், சட்டென்று எழுந்தான். என்னைப் பாக்கவா? இதென்ன அதிசயம்? ஏன்? உன்னைப் பாக்க நான் வரதில்லையோ? இல்ல. பகல்ல வந்திருக்கியே.. கள்ளமாய்ச் சிரித்தான். போதும் உன் கேலிப் பேச்சு. அங்குமிங்குமா யாரையாவது கொலை பண்ற. கேட்டா அசுரர்கள்னு சொல்ற. சரி, ஜனங்களைக்‌ காப்பாத்தணும்னா துஷ்டர்களை அழிச்சுத்தான் ஆகண...

ப்ருந்தாவனமே உன் மனமே - 53

Image
அரிஷ்டாஸுர வதம் நேரடியாக சங்கசூடன் வதத்தைக் கண்டதும் கோபிகள் சற்று பயந்துபோயிருந்தனர். இருப்பினும் கண்ணனின் விளையாட்டுப் பேச்சால் அவர்களது பயம் மறக்கடிக்கப் பட்டிருந்தது.  கண்ணனின் லீலைகளை விதம் விதமாக, மதுரமான குரலில் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பகல் பொழுதுகளைக் கழித்தனர். திடீரென்று ஒருநாள் கம்ஸனால் அனுப்பப்பட்ட அரிஷ்டன் என்ற அசுரன் காளையின் உருவம் கொண்டு கோகுலத்தில் நுழைந்தான். மலைபோன்ற திமில்களையும், கூரான உலக்கை போன்ற கொம்புகளையும் கொண்டு பயங்கரமான உருவத்துடன் கர்ஜித்தான். புயல் கண்ட பதராய் அனைவரும் சிதறியோட, அவன் வீடுகளின் தூண்களையும், மரங்களையும் கொம்புகளால் முட்டிக் கீழே சாய்த்தான்.. விஷயமறிந்த கண்ணன், பலராமனோடு அவனெதிரில் வந்தான். என்னைத்தானே தேடி வந்தாய் என்பதுபோல் கைதட்டி அவனை அழைத்து, இதோ இங்கிருக்கிறேன் என்பதுபோல் ஒரு தோழனின் மேல் கையைப் போட்டுக்கொண்டு காலை மாற்றி வைத்துக்கொண்டு ஒய்யாரமாய் நின்றான். தேவர்களும் கண்டு மயங்கும் கோலத்தைக் கருணையால் அசுரனுக்குக் காட்டினான்.  ஆனால், அசுரனுக்கோ இந்தக் கோலத்தைக் கண்டு கோபம் வந்தது. குளம்புகளால் பூமியைக் கிளறிக்கொண்டு, க...

ப்ருந்தாவனமே உன் மனமே - 52

Image
சங்கசூட வதம் ஒருநாள் கார்வண்ணனும், பலராமனும் வனத்தில் சிறுவர்களோடு சிரித்துப் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவ்வமயம், வனத்தில் பூக்கும் சில விசேஷப் பூக்களைப் பறிப்பதற்காக குட்டி கோபிகள் சிலர் அந்தப் பக்கமாய் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் கண்ணன் கண்ணைக் காட்ட, ஆளுக்கொரு பக்கம் ஒளிந்துகொண்டனர். சிறுமிகள் அருகே வந்ததும், சுற்றி வளைத்துக் கொண்டனர்.  என்ன கண்ணா? தனியா வரவங்ககிட்ட வம்பு செய்யலாமா? தனியா? நான் இருக்கும்போது எப்படித் தனியாகும்? சும்மா ஏதாவது சொல்லாம வாங்கடி விளையாடலாம் அதுசரி, விளையாட்டா? நாங்க கோபேஸ்வரர் பூஜைக்கு பூ கொண்டுபோக வந்தோம். நாம விளையாடறதைப் பாத்தா அவரே இங்க வந்துடுவார். பூவெல்லாம் நாங்க எல்லாரும் சேர்ந்து பறிச்சுத் தரோம். மரத்துமேல இருக்கற பூவெல்லாம்கூட பறிச்சுத் தரோம் கண்ணனோடு விளையாடுவதா? உள்ளூர அத்தனை பேருக்கும் ஆசைதான். இருந்தாலும் கேட்டவுடன் ஒத்துக்கொள்வதா? சரி, கண்ணா, என்ன விளையாடறது? கண்ணாமூச்சி,  த்வாதச நாமம் சொல்லி மாற்றி மாற்றிக் கையைக்காட்டி ஒரு பெண் மாட்டிக்கொள்ள, அவள் கண்களைக் கட்டிவிட்டு அனைவரும் ஓடினர். அப்போது சங்கசூடன் என்ற ஒரு பயங்கரமான...

ப்ருந்தாவனமே உன் மனமே - 51

Image
தேவர்க்கும் கிட்டாத பேறு தேவேந்திரனின் கர்வத்தை அழித்ததிலிருந்து, தேவர்கள் அனைவருக்குமே பகவான் மீது ஒரு பயம் கலந்த மரியாதை ஏற்பட்டிருந்தது. ஆனால், கண்ணன் வனத்தில் அவ்வப்போது செய்யும் வனபோஜன லீலையை மேலிருந்து பார்த்தால், நாம் பூமியில் பிறக்காமல் போய்விட்டோமே, பிறந்திருந்தால் பகவானோடு இணைந்து விளையாடுவது, எச்சில் சோறு உண்பது போன்ற பாக்யங்கள் கிடைத்திருக்குமே என்ற ஏக்கமும் அவர்களை வாட்டியது. இன்று கண்ணன் வனத்திற்கு வந்ததும் பச்சைக் குதிரை ஆட்டத்தைத் துவக்கினான். எல்லாச் சிறுவர்களும் வரிசையாக சீரான இடைவெளியில் குனிந்து நின்றனர்.   வரிசையின் கடைசியில் இருக்கும் சிறுவன் ஒவ்வொருவரின் முதுகிலும் கையை வைத்து எழும்பிக் குதித்துத் தாண்டிச் செல்லவேண்டும். கடைசிச் சிறுவனைத் தாண்டியதும் அவனும் அடுத்ததாகக் குனிந்து நிற்பான்.  ஒரு தேவன் பொறுத்து பொறுத்து பார்த்தான். இனி தாளாது. இன்றேனும் இறைவனோடு விளையாடியே தீருவது என்ற முடிவுடன் கீழிறங்கினான். தானும் ஒரு கோபச் சிறுவன் போல் உருமாறி குனிந்து நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள் வரிசையில் சென்று நின்றுகொண்டான். ஒவ்வொரு சிறுவராகத...

ப்ருந்தாவனமே உன் மனமே - 50

Image
கால் வண்ணம் பதினான்கு வருடங்களே கோபர்களோடு வசித்தான் கண்ணன். ராமாவதாரத்தின்போது பதினான்கு வருடங்கள் காட்டில் அலைந்து துன்புற்றதால், இப்போது அடுத்த அவதாரத்தில் காட்டில் இன்பம் காண்கின்றான் போலும்.  ஒருநாள் சற்று தொலைவிலிருந்த அம்பிகா வனம் என்ற இடத்திற்கு நந்தன் பரிவாரங்களோடு மாட்டு வண்டிகளில் சென்றான். அங்கு பரமேஸ்வரனுக்கும், அன்னைக்கும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. தானங்களும் சிறப்பாகக் கொடுக்கப்பட்டன. எல்லா வைபவங்களும் முடிந்து மிகுந்த நேரமாகிவிட்டபடியால், வீடு திரும்ப இயலவில்லை.  வனத்தில் இரவு தங்குவது பாதுகாப்பில்லை என்பதால், அனைவரையும் அழைத்துக்கொண்டு வழியிலிருந்த ஸரஸ்வதி நதி தீரத்திற்கு வந்தான் நந்தன். அன்று பூஜை முடிந்து விரதமாகையால், அனைவரும் அம்ருதம் போன்ற ஸரஸ்வதி நீரை உட்கொண்டு, ஆற்று மணலிலேயே படுத்துறங்கலாயினர். அப்போது திடீரென்று நந்தனை ஒரு மலைப்பாம்பு விழுங்க ஆரம்பித்தது. வலி தாங்காமல் நந்தன் அலறியதில், அனைவரும் விழித்துகொண்டனர். எல்லோரும் கொள்ளிக்கட்டைகளால் பாம்பை அடித்தும் அது நந்தனை‌ விடுவதாயில்லை. நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டு உறங்கிய கண்ணனைத் தேடி எழுப்ப...

ப்ருந்தாவனமே உன் மனமே - 49

Image
எங்கும் கண்ணன் பிரிந்தவர் கூடினால் பேச இயலுமா? கண்ணன் ஆவிர்பவித்ததும், கோபிகளுக்கு இறந்த உடலில் உயிர் மீண்டும் புகுந்தாற்போலாயிற்று.. சட்டென்று அனைவரும் எழுந்தனர். அப்படியே ஸ்தம்பித்துப்போய் எவ்வளவு நேரம் கண்ணனைப் பார்த்துக் கொண்டே நின்றார்களோ தெரியாது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு வந்ததும் ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டப்படி கண்ணனோடு விளையாட விரும்பினர். கண்ணன் அனைவரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய விரும்பி, எத்தனை கோபிகைகள் இருந்தார்களோ அத்தனை வடிவங்கள் எடுத்துக் கொண்டான். அவர்கள் பார்க்குமிடமெல்லாம் கண்ணனின் அழகுருவமே தெரியும்படியான லீலை செய்தான். கோபி இடது, வலது, முன், பின் என எந்தப் பக்கம் திரும்பினாலும் அவளுக்காக அங்கொரு கண்ணன் இருந்தான் என்றால், அக்காட்சியை சற்று நினைத்துப் பாருங்கள். கிட்டத்தட்ட மூவாயிரம் கோபிகளுக்கு மேல் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு கோபிகளுமே கோகுலத்தைச் சேர்ந்தவரா, அல்லது ராஸத்திற்கு ஆசைப்பட்டு கோபி உருவில் வந்த தேவரோ, ரிஷியோ, எவரோ தெரியாது. அந்த இரவுப் பொழுது கால வரையறையற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு இரவிலும் ராஸம் நடப்பதாக ப்ருந்தாவன மா...

ப்ருந்தாவனமே உன் மனமே - 48

Image
கோபிகா கீதம் கண்ணனின் தரிசனத்திற்காக ஏங்கி அழுவதே அவனைக் காணும் வழி. அந்த ஏக்கம் உண்மையானதாக இருக்கவேண்டும்.  அத்தகைய பக்தி உள்ளவர்கள் கோடியில் ஒருவரே. பலருக்கு நொடியில் மோட்சம் தந்துவிடுகின்ற கண்ணன், தன்மீது ப்ரேமபக்தியை அவ்வளவு எளிதாகத் தந்துவிடுவதில்லை.. கண்ணனுக்காக ஏங்கி அழுதுகொண்டே பாடத்துவங்கினர் கோபியர்.. ஜெயதி தேஅதிகம் என்று துவங்கும் இந்த கீதம் 18 ஸ்லோகங்களைக் கொண்டது. 18 என்ற எண் வெற்றியைக் குறிப்பது..   பகவானைக் காண்பதற்காகப் பாடப்படும் இந்தப் பாடல் முயற்சியில் வெற்றியைத்தரும். அதாவது இந்த கீதத்தை ஜபமாகச் செய்துவந்தால் வெகு விரைவில் க்ருஷ்ண தரிசனம் ஏற்படும்.. கண்ணா உனது திருவடி பட்ட இந்த ப்ருந்தாவனம் இந்திரலோகத்தை விட உயர்ந்து நிற்கிறது. விஷ ஜலம், ராக்ஷஸர்கள், காற்றுடன் கூடிய மழை, காட்டுத்தீ போன்ற துன்பங்களிலிருந்தும் மற்றும் இந்த ஸம்ஸார பயத்திலிருந்தும் எங்களை அடிக்கடி காப்பவன் நீயே.. உன்னை யசோதையின் பிள்ளையென்று மட்டும் நினைக்கவில்லை. எல்லா உயிர்களிலும் உள்ளுறையும் ஆத்மஸ்வரூபம் நீயே.. உனது தா‌மரைக் கரத்தை எடுத்து எங்கள் சிரசில் வைப்பாய் உன்னை வணங்க...

ப்ருந்தாவனமே உன் மனமே - 47

Image
கண்ணன் எங்கே? பிறவிக் குருடனுக்கு பார்வையைக் கொடுத்துவிட்டு ஒரே நாளில்‌ மீண்டும் பார்வை பறிபோனால் எப்படி இருக்கும்? பஞ்சத்தில் வாடுபவனை‌ இலை போட்டு அமரவைத்து, பெரிய விருந்தைப்‌ பரிமாறிவிட்டு, உண்ணும் நேரம் எழுப்பிவிட்டால் எப்படி இருக்கும்? கோபியரின் வேதனை இன்னும் கொடுமையானது. கடவுளே கையில் கிடைத்த பிறகு, சட்டென விட்டுச் சென்றால் எப்படிப் பொறுப்பார்கள்? கதறி அழுவதைத் தவிர வேறு வழி? தானே மறைந்து விட்டவனைத் தேடுவதெப்படி? கண்ணனோடு இருக்கும் வரையில் ரம்யமாக‌ இருந்த வனம், கண்ணன்‌ மறைந்ததும், பயங்கரமாய் இருந்தது.  கண்ணனைத் தேடும் எண்ணத்தால் அவர்களுக்கு‌ பயம் தெரியவில்லை. அங்குமிங்கும் தேடித் தேடி சலித்துப் போயினர். அங்கிருக்கும்‌ மரம் செடி கொடிகளைப் பார்த்துப் பார்த்து கண்ணனைக் கண்டாயா? என்று கேட்டனர். சிறிது தூரம் சென்றதும் துளசிச் செடி கண்ணில்‌பட்டது.  நீ‌ இருக்கும் இடத்தில் கண்ணன் இருப்பான் அன்றோ துளசி மாதாவே!  கண்ணன் சரணத்தில் விரும்பி வாசம் செய்யும் துளசிமாதாவே! கண்ணனைக்‌ கண்டாயா? என்று அரற்றினர். அவள் தாயல்லவா? சேயின் அழுகை கேட்டதும் கண்ணன் சென்ற வழித்தடத்தைக் காட்டினாள். ...

ப்ருந்தாவனமே உன் மனமே - 46

Image
தோன்றி மறைகின்றான் கண்ணனோடு இருக்கும் பொழுதுகள் எவ்வளவு இனிமையானவை! சரத்காலப் பௌர்ணமி நிலவு கண்ணனின் அழகைப் பருகிக்கொண்டு மேலும் ப்ரகாசித்தது. ஒவ்வொரு கோபியும் கண்ணனோடு தன் இஷ்டம்போல் விளையாடினாள். ஒருத்தி கண்ணனோடு தட்டாமாலை சுற்றினாள்.  ஒருத்தி கண்ணனைக் கட்டிக்கொண்டாள். ஒருத்தி அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஒருத்தி அவனது வனமாலையைத் தன் கழுத்தில் போட்டுக்கொண்டாள். இன்னொருத்தி ஒரு புதிய வனமாலையைக் கண்ணனுக்கு சூட்டினாள்.  மன்மத மன்மதனாய் விளங்கிய கண்ணன் அந்த கோபிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோதும், ஆத்மாராமனாக தன்னுளே திகழும் ஆனந்தத்திலேயே மகிழ்ந்திருந்தான். அவனுக்கு மற்றவர்களால் ஆகவேண்டியது எதுவுமே இல்லை. இப்படியாக எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியாது. காலதேவனும் மயங்கிப்போய் நின்று விட்டிருந்தான். ஒவ்வொரு கோபியும், பகவான் தன்மேலேயே அதிக அன்பு கொண்டிருப்பதாய் எண்ணினாள். பகவானே தங்களுடன் விரும்பி ரமிப்பதால், தங்களைப் போல் சிறந்த பாக்யவதிகள் இல்லை என்று எண்ணினார்கள். இதைச் சௌபகமதம் என்று கூறுவர். அந்தர்யாமியான கண்ணனுக்கு அவர்கள் எண்ணம் தெரியாதா? உண்மையில் கோபிகளுக்க...

ப்ருந்தாவனமே உன் மனமே - 45

Image
குழலும் ஊதி வந்தனனே கண்ணன் காற்றினிலே மிதந்து வரும் கீதம். கல்லும் கரையும் கீதம்.. உயிரை உருக்கும் கீதம்.. சுண்டியிழுக்கும் கீதம்.. முரளீதரனின் மோஹன கீதம் மாற்றி வைத்த பாதங்களோடு உயிரோவியமாய் நின்று கோவிந்தன் குழலூத, செவி‌மடுத்த அனைத்து ஜீவராசிகளும் எழுது சித்திரங்களாகின.. அசைந்தது கண்ணனின் கார்குழலும், உத்தரீயமும், அவனது பட்டு விரல்களும் மட்டுமே... பகவத் ஸந்நிதானத்திற்கோ, குருவின் ஸந்நிதானதிற்கோ செல்வது நமது எண்ணத்தினால் ஒருபோதும் நிகழ்வதல்ல.. நமக்கு தரிசனம் கொடுக்க அவர்கள் ஸங்கல்பம் செய்துவிட்டால், நம்மை நாமேகூடத் தடுக்க இயலாது.. இப்போது அழைப்பது கண்ணன்.. கோபியரின் பாவை நோன்பிற்குப் பலன் கிட்டும் நேரம் வந்துவிட்டது. பகவானே கூப்பிடும்போது போகாமல் நிற்கும் கால்கள் உண்டா என்ன? அத்தனை கோபிகளும்‌ செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு நிலை‌மறந்து சென்றனர். அவர்களது ஸ்தூல சரீரத்தை விட்டு விட்டு தெய்வீக உருவில் சென்றனர் என்றும் சொல்லப்படுகிறது.  ஒரு காதில் குழையணிந்தவள் அப்படியே சென்றாள். ஒருத்தி கழுத்தில் போடுவதை இடுப்பிலும், இடுப்பில் போடும் நகையை கழுத்திலுமாய் ...

ப்ருந்தாவனமே உன் மனமே - 44

Image
சல் சல் சல் ராஸத்திற்கு முதலில் தயாரானது யார்? கண்ணனா?, கோபியரா? இல்லையில்லை.  நமது ஸ்ரீவனம்தான்.. இலைகளே தெரியாத அளவிற்கு ஒவ்வொரு செடியும் மரமும் புஷ்பித்திருக்கின்றன. எத்தனை எத்தனை வண்ண மலர்கள்.. எத்தனை எத்தனை நறுமணங்கள்.. ஸ்ரீவனத்திலிருந்து வரும் சுகந்தம் வெகு தூரம்‌தாண்டி வீடுகள் இருக்கும் பகுதி வரை வருகிறது.  அந்த சுகந்தமே அனைவரையும் சுண்டியிழுக்கிறது.. சலசல வென்று அமைதியாடும் ஓடும் யமுனை.. ராஸத்தை எதிர்பார்த்து கண்ணன் வருகிறானா என்று துள்ளித் துள்ளி எட்டிப் பார்க்கும் கயலினம்.. கண்ணன் வரும் திசையை அடிக்கடி உற்று நோக்கும் புள்ளினம்.. பசுந்தோகை விரித்தாடி கண்ணனை வரவேற்கத் தயாராகக் காத்திருக்கும் மயிலினம்.. இரு விழிகளாலேயே பூஜை செய்யக் காத்திருக்கும் மானினம்.. ராஸகானத்திற்காக ரீ‌ரீ என்று ஸ்ருதி சேர்க்கும் வண்டினம்.. வாத்தியங்களுடன் வானில் காத்திருக்கும் தேவர்கள்.. எவ்வளவு உயிரினங்கள் ராஸத்தை எதிர்பார்க்கின்றன.. இடுப்பில் குழலுடன் கார்வண்ணன் ஒயிலாக நடை பயின்று வருகிறான்.. ஸ்ரீ ஸ்வாமிஜியின் மதுரகீதம்.. ராகம் வலஜி சல் சல் சல் கண்ணன் சலங்கை ஒலிக்குது ச...

ப்ருந்தாவனமே உன் மனமே - 43

Image
அழைக்கின்றான் கண்ணன் ஸ்ரீவனமே... கேட்பவர்களுக்கெல்லாம் ஒருவர் வாரி வழங்குகிறார் என்றால் அவரது சொந்த சொத்தைத்தானே கொடுக்கமுடியும்? அதுபோல் கண்ணன் தன் ஸ்வதாமமான வைகுண்டத்திற்கு விரும்பியவரையெல்லாம் தகுதி பாராது அழைத்துச் சென்று காட்டுகிறான், அல்லது நிரந்தரமாய் அனுப்பி வைக்கிறான்.  எனில் வைகுண்டத்தின் தலைவன் தான்தான் என்று நிரூபிக்கின்றான். எவ்வளவோ அற்புதங்களை கண்ணன் நிகழ்த்தியிருக்கிறான். தீயைக் குடித்ததென்ன?  அசுரர்களை மாய்த்ததென்ன? நச்சுப்பாம்பின் மீதில் நடனமாடியதென்ன? மலையைக் குடையாய்ப் பிடித்ததென்ன? அப்போதெல்லாமும் பகவான் என்று நிரூபித்தானே.. இவ்வளவு லீலைகளையும் வரிசையாகச் சொல்லிக்கொண்டு வந்த ஸ்ரீசுகர்,  இப்போது நந்தனுக்கும் கோபர்களுக்கும் வருண லோகத்தையும் வைகுண்டத்தையும் காட்டி மறுபடி அதெல்லாம் தனக்குக் கீழ்ப்பட்டதென்று நிரூபித்தான் என்கிறார். எதற்காக இவ்வளவு அழுத்திச் சொல்கிறார் என்று பார்த்தால்,  இப்போது ப்ருந்தாவனத்தில் வஸந்தகாலம் வந்துவிட்டது... மலையைத் தூக்கியபோது பகவான் என்று உணர்ந்தால் போதாது.. வைகுண்ட தரிசனம் செய்துவைத்தபோது அவன் பகவான் என்றுணர்ந்தால் போத...

ப்ருந்தாவனமே உன் மனமே - 42

Image
வைகுண்ட தரிசனம் பரசுராம க்ஷேத்ரமான கேரளத்தில்‌ பகவான் குட்டி க்ருஷ்ணாக குருவாயூரப்பனாக சேவை சாதிக்கிறான். கண்டதும் கரங்களில் அள்ளியெடுத்துக் கொஞ்சி மகிழத் துடிக்கவைக்கும் அழகுடையோன் அந்த உன்னி க்ருஷ்ணன். பதுமையாய் நிற்கும் உயிரோவியம். அவனது முதன்மையான பக்தர்களுள் சிலர் ஸ்ரீ நாராயண பட்டத்ரியும், பூந்தாணம் என்ற பக்தரும் ஆவார்கள்.  பட்டத்ரி பெரும் பண்டிதர். ஸ்ரீமந் நாராயணீயம் இயற்றியவர். பூந்தாணத்திற்கு அவ்வளவாகப் படிப்பறிவில்லையெனினும் தினமும் ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்வார். பூந்தாணத்தின் குடும்ப சூழ்நிலை அவரது க்ருஷ்ண பக்திக்கு அனுகூலமாக இல்லை. வீட்டினுள் அமர்ந்து பாகவதம் படித்தால், குடும்பத்தினர் திட்டுகிறார்கள் என்று வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் அமர்ந்து படிப்பார். ஸ்ரீமத் பாகவதம் வைகுண்டம், கைலாசம் இரண்டையும் மிக அழகாக வர்ணிக்கிறது. ஒரு நாள் பூந்தாணம் வைகுண்ட வர்ணனையைப் படித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று அவர் மனதில் ஓர் எண்ணம்.. குருவாயூரப்பா, நீ வசிக்கும் அந்த வைகுண்டம் இவ்வளவு அழகா? ரத்தினங்கள் பதித்த ஸ்வர்ணமயமான தூண்களில் உனது நீலநிறம் பட்டு ...

ப்ருந்தாவனமே உன் மனமே - 41

Image
வைகுண்ட தரிசனம்  வேண்டும்போதெல்லாம் மாயையை ஏவி, தன் நெருங்கிய வட்டத்திலுள்ளோரைத் தன்னை உணராமல் செய்வதால்தான் அவதார புருஷர்களுக்கு அவர்களது லீலை தடையின்றி நிறைவேறுகிறது. அவர்களை முழுதுமாய் உணர்ந்தவர் எவரேனும் இருப்பின், அவரும் அந்த அவதார புருஷருக்குத் துல்யமானவராகவே இருந்து விடுவதால், லீலா ரஹஸ்யம் வெளியில் வருவதே இல்லை. இப்போது நந்தனுக்கு வருணலோகம் போய்வந்தது கனவுபோல் இருந்தது. மற்ற கோபர்கள் நந்தனைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க ஆரம்பித்தார்கள்.. எங்க போயிருந்தீங்க? வருணலோகம்னு நினைக்கிறேன் என்றான் ப்ரமிப்பிலிருந்து விடுபடாதவனாய்.. அங்க என்ன பாத்தீங்க? விட்டு விட்டு நடந்தவற்றை ஒருவாறு சொல்லி முடித்தான் நந்தன். அப்ப கண்ணன் பகவானா? அப்படித்தான் போல.. நாமதான் ஸாதாரணமா பழகறோம்.. அப்படின்னா நமக்கும் வைகுண்டத்தை காட்டுவானா? அவன் கிட்ட கேட்டு பாக்கலாம். பகவானைத் தோழராக அடைந்தவர்க்கு வைகுண்டம் சுற்றுலாத்தலம் போலாகிவிட்டது.. கண்ணன் காதில் என்னதான் விழாது? கேட்டுக்கொண்டே வந்துவிட்டான்.. என்ன? கண்ணா இவங்களுக்கெல்லாம் வைகுண்டத்தைப் பாக்கணுமாம். கண்ணன் அழகாக முறுவலித்தான். அவனது முறுவலைக் கண்டு, யோ...

ப்ருந்தாவனமே உன் மனமே - 40

Image
நந்தன் எங்கே? அம்மாவோடு கதை பேசிக்கொண்டே‌ சாப்பிட்டு, ராமனின் பாலலீலைகளைக் கேட்டுக்கொண்டே ஊம்‌ கொட்டிக்கொண்டு உறங்கிப் போனான் கண்ணன். காலையில் எழுந்ததிலிருந்து யசோதா கவலையுடனுடனும் படபடப்புடனும் காணப்பட்டாள்.   கவனித்துக்கொண்டேயிருந்த கண்ணன், மெதுவாகத் தாயின் பின்னாலேயே சென்றான். வாசலுக்கும் உள்ளுக்குமாகப் பத்து முறை நடந்தாள்.  அம்மா என்னாச்சும்மா? திரும்பிக் கண்ணனைப் பார்த்தாள். ஒன்னுமில்ல கண்ணா, அப்பா எங்க போனார்னு தெரியல.. உங்ககிட்ட சொல்லிட்டு போகலியா? எங்க போனாலும் சொல்லிட்டுத்தான் போவார். இன்னிக்கு அதிகாலைலயே வெண்ணெய் கடையறப்பவே காணோம். இப்ப வந்துடுவார் வந்துடுவார்னு பாத்தா இன்னும் காணோம். வேலைக்காரங்ககூட யாருமே பாக்கலையாம். சற்று வித்தியாசமாகப் படவே, கோபாலன் தன் ஞான த்ருஷ்டியால் தேடினான். அதிகாலை இரண்டு மணிக்கே சேவல் போல் கூவி நந்தனை எழுப்பிவிட்டு, அவர் அன்றைக்குப் பார்த்து நதி ஸ்நானம் செய்யப்போக வருணன் அவரைப் பிடித்துக்கொண்டு போய் விட்டிருந்தான். கடும் கோபம் வந்தது கண்ணனுக்கு.. அம்மா அப்பா எங்க இருக்கார்னு எனக்குத் தெரியும். நான் போய் கூட்டிட்டு வரேன். நீங்க கவலைப்...

ப்ருந்தாவனமே உன் மனமே - 39

Image
கோவிந்த பட்டாபிஷேகம் துணிந்து தவறு செய்துவிட்டுப் பிறகு உணர்ந்தால், அவர்களது மனமே அவர்களைக் கொன்று விடும். ப்ரும்மா அப்படித்தான் துடித்துப்போனார். ஆனால் தேவேந்திரனுக்கோ இது பழக்கமான ஒன்று. இருந்தாலும் இப்போது நேரடியாக பகவானிடமே அபசாரப் பட்டுவிட்டதால், தனியாகச் செல்ல பயந்துகொண்டு காமதேனுவை அழைத்துச் சென்றான்.  தனியாக கோவர்தன மலைமீது ஒயிலாக அமர்ந்திருந்த கோபாலனை நோக்கி காமதேனு ஓடினாள். அவள் பின்னாலேயே தயங்கித் தயங்கிச் சென்ற இந்திரன் பகவானின் சரணங்களில் விழுந்தான். ஐராவதத்தை சற்று தொலைவில் நிறுத்திவைத்திருந்தான். கண்ணன் முறுவலோடு பேசாமல் இருக்க மன்னித்து விடும்படி ப்ரார்த்தனை செய்தான். கண்ணனோ, நீ செய்வது மகத்தான பணி. என் நியமனத்தில் இருந்துகொண்டு நீ சேவை செய்கிறாய் என்று எப்போதும் நினைவில் கொள் என்றான். காமதேனு அழ ஆரம்பித்தாள்.  கோலோக நாதனாக இனி இந்திரனை ஏற்க முடியாது. என் குழந்தைகளான பசுக்களையும் பச்சிளம் கன்றுகளை கொல்லத் துணிந்தான் இந்த இந்திரன். இனி நீரே எமது தலைவர். கோலோக நாதனாக உமக்கே பட்டாபிஷேகம் செய்கிறோம் என்றாள். பகவான் இந்திரனைப் பார்க்க, அவன் தலையைக் கவிழ்ந்துகொண்டு...

ப்ருந்தாவனமே உன் மனமே - 38

Image
கருணை மழை ஏழு நாட்களாக, இரவு பகலாகக் கண்ணனோடு... நினைத்துப் பார்க்கப் பார்க்க ஆனந்தம்.. இந்திரன் கொட்டும் மழையை விட அதிகமாய்க் கரை புரண்டோடுகிறது. என்ன நடக்கிறது? கோகுலம் முழுதுமாய் அழிந்துவிட்டதா? கண்ணன் தன்னிடம் மன்னிப்பு வேண்டத் தயாரா? என்பதையெல்லாம் அறிந்துவர ஒரு தேவனை அனுப்பினான் இந்திரன். போன வேகத்தில் தலை தெறிக்க ஓடிவந்தான் அந்த தேவன்.. அவன் பின்னாலேயே பஞ்சத்தில் அடிபட்டவன் போல் வந்த வருணனை இந்திரனுக்கு அடையாளம் கூடத்தெரியவில்லை. யார் இவன்? நீ ஏன் இப்படி ஓடி வருகிறாய்? கண்ணன் எப்போது மன்னிப்பு கேட்பான்? என்று அந்த தேவனைப் பார்த்துக் கேட்டான் இந்திரன். ப்ரபோ என்று ஓடிவந்து காலில் விழுந்த வருணனை யாரென்று உணர்ந்த இந்திரன் அதிர்ந்து போனான். என்னவாயிற்று? சொல்லுங்கள். என்னதான் நடந்தது? கண்ணனின் ஆணவம் அடங்கிற்றா இல்லையா? தேவன் தயங்கி தயங்கிச் சொன்னான். அவர் பகவானேதான் ப்ரபோ. கோவர்தன மலையைத் தூக்கிக் குடைபோல் பிடித்துக் கொண்டார். அதனடியில்‌ அனைவரும் சௌக்கியமாய் இருக்கின்றனர். ஏழு நாட்களாகவா? ஆம்‌ ப்ரபோ‌. ஏழென்ன‌? இன்னும் எத்தனை நாள்களுக்கு வேண்டுமானாலும் பகவான் மலையைப் பிடித்துக் கொண்...

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

Image
மலையேந்தும் விரல் குடையைப் பிடிக்கவே நமக்கு ஐந்து விரல்கள் தேவையாயிருக்க, மலை பிடிக்க பகவானுக்கு ஒரு விரலே போதுமாயிருந்தது. நந்தனுக்குப் பெருமை பிடிபடவில்லை.  பார், என் பையனாக்கும் மலைய தூக்கறான்  என்று பெருமையடித்துக் கொண்டிருந்தான். யசோதைக்கு மிகுந்த கோபம். நந்தனை இடித்துப் பேசினாள். ஊரைக் காப்பாத்தும் பொறுப்பு உமதாயிருக்க, என் பிள்ளை இளிச்சவாயனா? அவன்தான் மலைய தூக்கணுமா? அதான் தடி தடியா இத்தனை பேர் வேலைக்கு வெச்சிருக்கீங்களே. அவங்கள யாரையாவது தூக்கச் சொல்லுங்க. என் பிள்ளை சின்னக் குழந்தை.. பாவம்.  என்றாள். கோபச்சிறுவர்கள் எல்லாருக்கும் குஷி.  கண்ணா, நாங்க நல்லா ‌கெட்டியா மரம் குச்சியெல்லாம் கொண்டு வரோம். அங்கங்க முட்டுக் குடுத்து இந்த மலையை‌ நிக்க வெச்சுட்டு‌ வா, கொஞ்ச நேரம் கோலியடிச்சு விளையாடலாம் என்று கூப்பிட்டனர். வயதான பாட்டிகள் அங்கேயே ஓரமாய் அமர்ந்து பாக்கு இடிக்கத் துவங்கினர். கோபிகளின் ஆனந்தத்தை சொல்ல இயலுமா? இரண்டு வருடங்களாக தினமும் காலை மாடு மேய்க்கச் செல்லுமுன் ஒரு தரிசனம், திரும்பி வரும்போது ஒரு தரிசனம், இவர்கள் காட்டு வழி சென்றால், எப்போ...

ப்ருந்தாவனமே உன் மனமே - 36

Image
பொங்கு கருணை ஆடிப்பாடிக் கொண்டு வீடு வந்து சேர்ந்த கோபர்கள், மகிழ்ச்சியோடு தத்தம் வேலைகளை கவனிக்கத் துவங்கினர். உச்சி வேளை தாண்டி சற்று நேரம்தான் ஆகியிருந்தது. திடீரென, சூரியன் அஸ்தமனமாகிவிட்டானோ‌ என்றெண்ணும்படி‌ எங்கும்‌ இருள்‌ சூழ்ந்தது. இத்தகைய கருமேகங்களை‌க் கண்டதேயில்லை.  ப்ரளயகால மழையோ என்னும்படி, பெரிய பெரிய கற்களாக‌ பனிமழை‌ பெய்யத் துவங்கியது. நீர்த்தாரை ஒவ்வொன்றும் இரணியன்‌ வீட்டுத் தூணைப்போல்‌ இருந்தது. மேலே‌ ஒரு தாரை விழுந்தாலும், எலும்பு முறிந்து விடும் போல் வலித்தது. ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை‌. கண்ணன் ஊர்க்கடைசியில் உள்ள ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மாடுகளும் கன்றுகளும்‌ மிரண்டுபோய் அலறின. கிடுகிடுவென்று வீடுகளுக்குள் அழையா விருந்தாளியாய் நீர் புகுந்து ஆக்கிரமித்தது.  என்னவென்று பார்ப்பதற்குள், தெருக்கள் முழுவதும் இடுப்பளவு மழைவெள்ளம்.  சந்தோஷமோ, துக்கமோ, ஸாதாரண நாளோ, கோகுலவாசிகளின் வாயில் ஒரே ஒரு நாமம்தான் வருகிறது..  கண்ணுக்குள் வைத்துக் காக்கும்  கண்ணா.. என்னும் திருநாமம்.. அனைவரும் குழந்தைகளையும் கன்றுகளையு...

ப்ருந்தாவனமே உன் மனமே - 35

Image
அகங்காரத்தால் விளைந்த பிழை மலை உம்மாச்சி எல்லாவற்றையும் விழுங்கியதும், மீதி ஆங்காங்கே விடப்பட்டிருந்ததை ப்ரசாதமாக எடுத்துக்கொண்டு, வந்ததைப் போலவே இன்னும் மகிழ்ச்சி பொங்க ஆடி ப் பாடிக் கொண்டு அவரவர் வீட்டை அடைந்தனர்.  அன்று முழுவதும் மலையப்பனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. இந்திரலோகத்தில் தேவேந்திரன் கோகுலத்திலிருந்து இன்று தனக்கு வரப்போகும் உணவுகளை நினைத்துப் பெரும் கற்பனையிலிருந்தான். பூமியில் எவ்வளவோ யாகங்களிலிருந்து அவனுக்கு ஏராளமான உணவுகள் கிடைத்துக் கொண்டிருந்த போதும், கோகுலத்திலிருந்து வரும் உணவுகளின் தரத்திற்கும், ருசிக்கும் அவையெல்லாம் ஈடாகா. மேலும் தேவலோகத்தில் ஒருவருக்கும் பசி, தாகம், தூக்கம் எதுவும் கிடையாது. உள்ளே நுழையும்போது அவரவர் புண்யபலனுக்கேற்ப சிறிதளவு அம்ருதம் கொடுக்கப்படும். அவ்வளவுதான். பசியில்லை என்பதால் அங்கு எவ்வித உணவுகளுக்கும் வழியில்லை. பசியுமில்லை, தூக்கமுமில்லை என்றால் அதற்கு ஸ்வர்கம் என்று பெயரோ? என்னதான் செய்வார்கள் தேவலோகவாசிகள்? எப்போதும் ஏதாவது நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு பொழுதைக் கழிக்க வேண்டியது தான் போலும். எனவே, கோகுலத்திலிருந்து உணவு வரும...

ப்ருந்தாவனமே உன் மனமே - 34

Image
மலை உம்மாச்சி வண்டிகளில் அத்தனை உணவுகளையும் எடுத்துக்கொண்டு குஷியாக நாமகீர்த்தனம் செய்துகொண்டு, கோவர்தன மலையடிவாரத்திற்கு அனைவரும் கிளம்பினர் . நந்தன் கையைப் பிடித்துக்கொண்டு ஜோராய் நடந்தான் கண்ணன். அடிவாரத்தை அடைந்ததும், எல்லாரும் கண்ணன் முகத்தைப் பார்க்க,  மலையை ப்ரதக்ஷிணம் செய்வோம். வயசானவங்க நடக்க முடியாத வங்கல்லாம் வண்டில வரட்டும் என்றான்.  ஆடிப் பாடிக் கொண்டு மலையைச் சுற்றி வந்தனர். பின்னர் கண்ணன்  எல்லா சாப்பாட்டையும் இப்படி மலைக்கு முன்னாடி பரவலா கொட்டி வைங்க  என்றான். ஒரு அந்தணரைக்கொண்டு மலைக்கு அர்ச்சனை புஷ்பங்களால் செய்யப்பட்டது.  எல்லோர் மனதிலும் ஒரு சந்தேகம் ஓடிக் கொண்டிருந்தது. யாகாமாயிருந்தால் அவ்வளவு உணவையும் அக்னியில் இடுவோம். அவற்றை அக்னி பகவான் இந்திரனிடம் சேர்த்துவிடுவார்.  மலைக்கு பூஜை என்றால் உணவுகள் என்னவாகும்? கண்ணன் அந்தர்யாமியாயிற்றே. அவனுக்கு அனைவரின் எண்ணமும் தெரியாதா? தானே ஒரு பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு மலை மீது நின்றான். ஆவென்று வாயைத் திறக்க, அத்தனை உணவுகளும் நேராக அவன் வாய்க்குள் பறந்து சென்றன.  இதை வாய...

ப்ருந்தாவனமே உன் மனமே - 33

Image
லஞ்சம் எதற்கு? திடீரென்று முன்னறிவிப்பின்றி அண்டா அண்டாவாக உணவுகள் தயாராகிக் கொண்டிருப்பதைக் கண்டதும், கோபாலன் நேராகத் தந்தையிடம் போனான். நந்தனுக்கு இவன் வரும் தோரணையைப் பார்த்ததும் வந்த என்னவோ குழப்பம் செய்யப்போகிறான் என்று தோன்றியது. அப்பா, அப்பா.. சொல் கண்ணா இங்க என்ன நடக்குது? திடீர்னு எதுக்கு இவ்ளோ சாப்பாடு? என்ன விஷயம்னு சொல்லுங்க?  கண்ணா, நாமெல்லாரும், விவசாயத்தையும், மாட்டையும் நம்பித் தான் இருக்கோம். அதுக்கு? அதுக்கு ஆதாரம் நீர்வளம்.  அதான்  யமுனை இருக்கேப்பா... வத்தவே வத்தாதே... இருக்குப்பா... இருந்தாலும் காலாகாலத்தில் மழை பெஞ்சாத்தானே பயிர் நல்லா விளையும்? மாட்டுக்கும் வேண்டிய புல் கிடைக்கும்? பயிர் நல்லா விளைஞ்சு மாடெல்லாம்‌ நல்லா இருந்தாத்தான் நாமளும் நல்லா இருக்கமுடியும் கண்ணா? சரி, அதுக்கும் இந்த சாப்பாட்டுக்கும்  என்ன சம்மந்தம்?  வருணன்தான் மழைக்கு தெய்வம். வருணன், அக்னி, வாயு எல்லாருக்கும் தலைவன் தேவேந்திரன். எதுக்கு இவ்ளோ சாப்பாடுன்னு கேட்டா கதை சொல்றீங்களேப்பா... கதையில்லடா. தேவேந்திரனை சந்தோஷப்படுத்தறதுக்காக வருஷா வருஷம்  ஒரு யாகம் பண்ணு...

ப்ருந்தாவனமே உன் மனமே - 32

Image
ஸ்மரணே ஸுகம் காட்டுமன்னாரான ராஜகோபாலன் இன்று விசேஷ அழகுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறான். கண்ணனிடமும் ஒரு பரபரப்பு தெரிகிறது. எப்போதும் உடனிருக்கும் ஸ்ரீதாமாவுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. கோபிகளை எதிர்நோக்கும்போது உள்ள பரபரப்பைக் காட்டிலும் இது இன்னும் விசித்ரமாக இருந்தது. கண்ணன் ஏதோ பேசிக்கொண்டிருந்தானே தவிர, அவன் எண்ணம் யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்திருக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். உண்மையான பக்தர்களைக் காண பகவானும் தவிக்கிறான். இடைச்சிறுவர்கள் கண்ணன் சொன்னதற்காக மறுபடி அந்தணர் குடிலுக்குச் சென்றனர். யாகசாலையைச் சுற்றிக்கொண்டு பின்புறம் சென்றால், ஆங்கே தனித்தனியாக சில குடில்கள் காணப்பட்டன. ஏழெட்டு பெண்மணிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த பால்காரி நாளைக்கு வந்தா கேக்கணும்.. அதுக்குள்ள கண்ணன் என்ன லீலை பண்ணினான்னு.. இடைச் சிறுவர்களுக்கு, கண்ணன் எதற்காகத் தங்களை அனுப்பினான் என்று புரிந்துவிட்டது. அம்மா, அம்மா... தலையில் முண்டாசும், கையில் கோல்களும், கச்சமாய்க் கட்டிய அழுக்குத் துண்டும், கண்களில் ப்ரகாசமும், பார்த்ததுமே இடைச் சிறுவர்களென்று தெரிந்தது. என்னப்பா, என்ன வ...