ப்ருந்தாவனமே உன் மனமே - 43
அழைக்கின்றான் கண்ணன் ஸ்ரீவனமே...
கேட்பவர்களுக்கெல்லாம் ஒருவர் வாரி வழங்குகிறார் என்றால் அவரது சொந்த சொத்தைத்தானே கொடுக்கமுடியும்?
அதுபோல் கண்ணன் தன் ஸ்வதாமமான வைகுண்டத்திற்கு விரும்பியவரையெல்லாம் தகுதி பாராது அழைத்துச் சென்று காட்டுகிறான், அல்லது நிரந்தரமாய் அனுப்பி வைக்கிறான்.
எனில் வைகுண்டத்தின் தலைவன் தான்தான் என்று நிரூபிக்கின்றான்.
எவ்வளவோ அற்புதங்களை கண்ணன் நிகழ்த்தியிருக்கிறான்.
தீயைக் குடித்ததென்ன?
அசுரர்களை மாய்த்ததென்ன?
நச்சுப்பாம்பின் மீதில் நடனமாடியதென்ன?
மலையைக் குடையாய்ப் பிடித்ததென்ன?
அப்போதெல்லாமும் பகவான் என்று நிரூபித்தானே..
இவ்வளவு லீலைகளையும் வரிசையாகச் சொல்லிக்கொண்டு வந்த ஸ்ரீசுகர்,
இப்போது நந்தனுக்கும் கோபர்களுக்கும் வருண லோகத்தையும் வைகுண்டத்தையும் காட்டி மறுபடி அதெல்லாம் தனக்குக் கீழ்ப்பட்டதென்று நிரூபித்தான் என்கிறார்.
எதற்காக இவ்வளவு அழுத்திச் சொல்கிறார் என்று பார்த்தால்,
இப்போது ப்ருந்தாவனத்தில் வஸந்தகாலம் வந்துவிட்டது...
மலையைத் தூக்கியபோது பகவான் என்று உணர்ந்தால் போதாது..
வைகுண்ட தரிசனம் செய்துவைத்தபோது அவன் பகவான் என்றுணர்ந்தால் போதாது.
இப்போது ராஸம் நடக்கப்போகிறது...
இப்போதும் பகவான் ஒருவனாலேயே ராஸத்தில் ஈடுபடமுடியும் என்று உணரவேண்டும்..
கண்ணன் யாரையும் எதிர்ப்பதேயில்லை.
எதிரியை அவர் போக்கில் ஆடும்வரை அவர் ஆடட்டும் என்று விட்டுவிட்டு அதற்குமேல், தன் லீலையை நிகழ்த்தி எதிராளியை தோல்வியுறச் செய்பவன்.
பரமேஸ்வரன் மன்மதனை எரித்து வெற்றி கொண்டார் என்றால், கண்ணன் மன்மதனே வெட்கிப்போகும் அளவிற்கு அழகுடன் விளங்கி, அதே நேரம் மன்மதனை வெற்றி கொள்கிறான்...
கண்ணனுக்கு இப்போது ஏழு வயது...
கண்ணனை நினைந்துருகி அவனைக் கணவனாய் அடைய நோன்பிருந்து ஏங்கிக் கொண்டிருக்கும் கோபிகளுக்கு இது பொற்காலம்...
சுருள் சுருளான கேசங்களுடன், தலையில் மயில்பீலியுடனும், குண்டலங்கள் அசைய, கழுத்தில் ஒரு அழகிய வனமாலை, தோளில் சிவப்பு உத்தரீயம், இடுப்பில் பீதாம்பரம், மேகலை,
காலில் நூபுரம், இடுப்பு, கழுத்து, கால் ஆகியவற்றை வளைத்து மாற்றி வைத்த பாதங்களுடன்
குழலோசை செய்கிறான் முரளீதரன்....
அவனது குழலிலிருந்து ஒரே ஒரு த்வனி தான் வருகிறது...
எந்த ராகம் வாசித்தாலும் ராதே ராதே என்றே கேட்கிறது...
அழைக்காமலே கண்ணனை நோக்கி ஓடும் கால்கள், இப்போது விரும்பி அழைத்தால் என்ன செய்யும்?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment