ப்ருந்தாவனமே உன் மனமே - 44
சல் சல் சல்
ராஸத்திற்கு முதலில் தயாரானது யார்?
கண்ணனா?, கோபியரா? இல்லையில்லை.
நமது ஸ்ரீவனம்தான்..
இலைகளே தெரியாத அளவிற்கு ஒவ்வொரு செடியும் மரமும் புஷ்பித்திருக்கின்றன.
எத்தனை எத்தனை வண்ண மலர்கள்..
எத்தனை எத்தனை நறுமணங்கள்..
ஸ்ரீவனத்திலிருந்து வரும் சுகந்தம் வெகு தூரம்தாண்டி வீடுகள் இருக்கும் பகுதி வரை வருகிறது.
அந்த சுகந்தமே அனைவரையும் சுண்டியிழுக்கிறது..
சலசல வென்று அமைதியாடும் ஓடும் யமுனை..
ராஸத்தை எதிர்பார்த்து கண்ணன் வருகிறானா என்று துள்ளித் துள்ளி எட்டிப் பார்க்கும் கயலினம்..
கண்ணன் வரும் திசையை அடிக்கடி உற்று நோக்கும் புள்ளினம்..
பசுந்தோகை விரித்தாடி கண்ணனை வரவேற்கத் தயாராகக் காத்திருக்கும் மயிலினம்..
இரு விழிகளாலேயே பூஜை செய்யக் காத்திருக்கும் மானினம்..
ராஸகானத்திற்காக ரீரீ என்று ஸ்ருதி சேர்க்கும் வண்டினம்..
வாத்தியங்களுடன் வானில் காத்திருக்கும் தேவர்கள்..
எவ்வளவு உயிரினங்கள் ராஸத்தை எதிர்பார்க்கின்றன..
இடுப்பில் குழலுடன் கார்வண்ணன் ஒயிலாக நடை பயின்று வருகிறான்..
ஸ்ரீ ஸ்வாமிஜியின் மதுரகீதம்..
ராகம் வலஜி
சல் சல் சல் கண்ணன் சலங்கை ஒலிக்குது
செல் செல் செல் என்று மனமும் சொல்லுது
கலீர் கலீர் கலீர் என்று காதில் கேட்குது
சிலீர் சிலீர் சிலீர் என்று மேனி சிலிர்க்குது
தவிர் தவிர் தவிர் தவிர் அச்சம் தவிர்த்திடு
பளீர் பளீர் பளீர் என்று நிலவும் வீசுது
சல சல சல என யமுனை ஓடுது
கல கல கல என குயிலும் கூவுது
ஓடு ஓடு ஓடு என மனமும் ஓடுது
ஆடு ஆடு ஆடு என ஆனந்தம் கொள்ளுது
வா வா வா என்று குழலும் அழைக்குது
ரீ ரீ ரீ என்று வண்டும் பாடுது
குபீர் குபீர் குபீர் என ஆனந்தம் பொங்குது
நேதி நேதி என்று இதையே வேதம் சொல்லுது
Comments
Post a Comment