ப்ருந்தாவனமே உன் மனமே - 39
கோவிந்த பட்டாபிஷேகம்
துணிந்து தவறு செய்துவிட்டுப் பிறகு உணர்ந்தால், அவர்களது மனமே அவர்களைக் கொன்று விடும். ப்ரும்மா அப்படித்தான் துடித்துப்போனார்.
ஆனால் தேவேந்திரனுக்கோ இது பழக்கமான ஒன்று.
இருந்தாலும் இப்போது நேரடியாக பகவானிடமே அபசாரப் பட்டுவிட்டதால், தனியாகச் செல்ல பயந்துகொண்டு காமதேனுவை அழைத்துச் சென்றான்.
தனியாக கோவர்தன மலைமீது ஒயிலாக அமர்ந்திருந்த கோபாலனை நோக்கி காமதேனு ஓடினாள். அவள் பின்னாலேயே தயங்கித் தயங்கிச் சென்ற இந்திரன் பகவானின் சரணங்களில் விழுந்தான். ஐராவதத்தை சற்று தொலைவில் நிறுத்திவைத்திருந்தான்.
கண்ணன் முறுவலோடு பேசாமல் இருக்க மன்னித்து விடும்படி ப்ரார்த்தனை செய்தான்.
கண்ணனோ, நீ செய்வது மகத்தான பணி. என் நியமனத்தில் இருந்துகொண்டு நீ சேவை செய்கிறாய் என்று எப்போதும் நினைவில் கொள் என்றான்.
காமதேனு அழ ஆரம்பித்தாள்.
கோலோக நாதனாக இனி இந்திரனை ஏற்க முடியாது. என் குழந்தைகளான பசுக்களையும் பச்சிளம் கன்றுகளை கொல்லத் துணிந்தான் இந்த இந்திரன்.
இனி நீரே எமது தலைவர். கோலோக நாதனாக உமக்கே பட்டாபிஷேகம் செய்கிறோம் என்றாள்.
பகவான் இந்திரனைப் பார்க்க, அவன் தலையைக் கவிழ்ந்துகொண்டு
அப்படியே செய்யலாம் ஸ்வாமி என்றான்.
உடனே ஐராவதத்தை திரும்பிப் பார்க்க அது ஆகாச கங்கை தீர்த்தத்தை கண்ணன் மீது வர்ஷித்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆகாயத்தில் சூழ்ந்து நின்று
கோவிந்த கோவிந்த
என்ற நாமத்தை இசைக்க, காமதேனுவும் தன் க்ஷீரத்தால் பகவானுக்கு அபிஷேகம் செய்தது.
பகவான் கோவிந்தன் என்ற திருநாமத்தோடு கோலோக நாதனாக விளங்கினான்.
கோலோகத்தில் பகவான் ராதையுடன் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறான்.
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுரகீதம்
ராகம் : குறிஞ்ஜி
தாளம் : ஆதி
பல்லவி
அபிஷேகம் அபிஷேகம் - இன்று நம்
ப்ரேமிக வரதனுக்கு பட்டாபிஷேகம் || அ ||
சரணம்
1) இந்திரன் வந்து தலை வணங்க
காமதேனு பால் பொழிய
ஆகாச கங்கையுடன் ஐராவதமும் வர
தேவர்கள் பாட்டுப் பாடி பூமாரி பொழிய
- கோவிந்த பட்டாபிஷேகம் || அ ||
2) மூன்றெழுத்து ப்ரணவம் போல் நாமமிது
மூன்று மாயையையும் போக்கி
மூன்றுலகத்தையும் காக்கும்
- கோவிந்த பட்டாபிஷேகம் || அ ||
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
#BUM
Comments
Post a Comment