ப்ருந்தாவனமே உன் மனமே - 42
வைகுண்ட தரிசனம்
பரசுராம க்ஷேத்ரமான கேரளத்தில் பகவான் குட்டி க்ருஷ்ணாக குருவாயூரப்பனாக சேவை சாதிக்கிறான்.
கண்டதும் கரங்களில் அள்ளியெடுத்துக் கொஞ்சி மகிழத் துடிக்கவைக்கும் அழகுடையோன் அந்த உன்னி க்ருஷ்ணன்.
பதுமையாய் நிற்கும் உயிரோவியம்.
அவனது முதன்மையான பக்தர்களுள் சிலர் ஸ்ரீ நாராயண பட்டத்ரியும், பூந்தாணம் என்ற பக்தரும் ஆவார்கள்.
பட்டத்ரி பெரும் பண்டிதர். ஸ்ரீமந் நாராயணீயம் இயற்றியவர்.
பூந்தாணத்திற்கு அவ்வளவாகப் படிப்பறிவில்லையெனினும் தினமும் ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்வார்.
பூந்தாணத்தின் குடும்ப சூழ்நிலை அவரது க்ருஷ்ண பக்திக்கு அனுகூலமாக இல்லை. வீட்டினுள் அமர்ந்து பாகவதம் படித்தால், குடும்பத்தினர் திட்டுகிறார்கள் என்று வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் அமர்ந்து படிப்பார்.
ஸ்ரீமத் பாகவதம் வைகுண்டம், கைலாசம் இரண்டையும் மிக அழகாக வர்ணிக்கிறது.
ஒரு நாள் பூந்தாணம் வைகுண்ட வர்ணனையைப் படித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று அவர் மனதில் ஓர் எண்ணம்..
குருவாயூரப்பா, நீ வசிக்கும் அந்த வைகுண்டம் இவ்வளவு அழகா? ரத்தினங்கள் பதித்த ஸ்வர்ணமயமான தூண்களில் உனது நீலநிறம் பட்டு இன்னும் ப்ரகாசிக்கின்றதாமே..
அதை எனக்கும் காட்டுவாயா?
என்றெல்லாம் நினைத்தவர் அப்படியே ஸமாதியில் ஆழ்ந்துவிட்டார்.
பகவான் கோபர்களுக்கு அருளியதைப் போலவே
அவருக்கும் வைகுண்ட தரிசனத்தை அனுக்ரஹம் செய்தான்.
வைகுண்டத்தின் வாயிலை அடைந்ததும், விஷ்ணு பார்ஷதர்கள்போல் ஜொலிக்கக்கூடிய இருவர் வந்து பூந்தாணத்தின் பாதங்களில் விழுந்தனர்.
ஸ்வாமீ, உங்கள் கருணையால்தான் எங்களுக்கு வைகுண்ட வாஸம் கிடைத்தது. என்று கூறி வணங்கினர்.
இவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
யார் நீங்கள்? உங்களை நான் பார்த்ததேயில்லையே. என்னால் எப்படி வைகுண்டம் கிடத்தது?
என்று கேட்க,
அவர்கள் சொன்ன பதில் நம் அனைவருக்கும் ஸ்ரீமத் பாகவதத்தின் பெருமையை உணர்த்துகிறது.
ஐயா, நீங்கள் தினமும் தோட்டத்தில் அமர்ந்து ஸ்ரீமத்பாகவத பாராயணம் செய்வீர்கள். நீங்கள் அமரும் இடத்தின் பின்புறம் நாங்கள் வாழைமரங்களாக நின்றுகொண்டு தினமும் நீங்கள் படிப்பதை ஶ்ரவணம் செய்துவந்தோம்.
பூமியில் எங்களது வாழ்வுக்காலம் முடிந்ததும், பாகவதம் கேட்ட பலனாக எங்களுக்கு வைகுண்டத்திலிருந்து திவ்யவிமானம் வந்தது. நாங்களும் சாரூப்ய முக்தியை அடைந்து, நித்ய சூரிகளுள் ஒன்றாகிவிட்டோம் என்றார்கள்.
மரங்களாக இருந்து கேட்டவர்களுக்கே வைகுண்டமா?
பூந்தாணம் பகவானின் கருணையை எண்ணி எண்ணி உருகினார்.
அவர் பூலோகம் திரும்பி, அவரது ஸமாதி கலைந்ததும் தோட்டத்திலிருந்த இரண்டு வாழை மரங்களும் கீழே சாய்ந்திருந்ததைக் கண்டார்.
பறவை விலங்கினம், புல் பூண்டு ஒன்றின்றியே
பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment