ப்ருந்தாவனமே உன் மனமே - 33
லஞ்சம் எதற்கு?
திடீரென்று முன்னறிவிப்பின்றி அண்டா அண்டாவாக உணவுகள் தயாராகிக் கொண்டிருப்பதைக் கண்டதும், கோபாலன் நேராகத் தந்தையிடம் போனான். நந்தனுக்கு இவன் வரும் தோரணையைப் பார்த்ததும் வந்த என்னவோ குழப்பம் செய்யப்போகிறான் என்று தோன்றியது.
அப்பா, அப்பா..
சொல் கண்ணா
இங்க என்ன நடக்குது? திடீர்னு எதுக்கு இவ்ளோ சாப்பாடு? என்ன விஷயம்னு சொல்லுங்க?
கண்ணா, நாமெல்லாரும், விவசாயத்தையும், மாட்டையும் நம்பித் தான் இருக்கோம்.
அதுக்கு?
அதுக்கு ஆதாரம் நீர்வளம்.
அதான் யமுனை இருக்கேப்பா... வத்தவே வத்தாதே...
இருக்குப்பா... இருந்தாலும் காலாகாலத்தில் மழை பெஞ்சாத்தானே பயிர் நல்லா விளையும்? மாட்டுக்கும் வேண்டிய புல் கிடைக்கும்? பயிர் நல்லா விளைஞ்சு மாடெல்லாம் நல்லா இருந்தாத்தான் நாமளும் நல்லா இருக்கமுடியும் கண்ணா?
சரி, அதுக்கும் இந்த சாப்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்?
வருணன்தான் மழைக்கு தெய்வம். வருணன், அக்னி, வாயு எல்லாருக்கும் தலைவன் தேவேந்திரன்.
எதுக்கு இவ்ளோ சாப்பாடுன்னு கேட்டா கதை சொல்றீங்களேப்பா...
கதையில்லடா. தேவேந்திரனை சந்தோஷப்படுத்தறதுக்காக வருஷா வருஷம் ஒரு யாகம் பண்ணுவோம் கண்ணா. அந்த யாகத்தில் இந்த சாப்பாட்டையெல்லாம் ஆஹூதியா கொடுக்கணும். இதை ஏத்துக்கிட்டு இந்திரன் சந்தோஷப்பட்டு, நமக்கு காலாகாலத்தில் மழையை கொடுப்பார்.
அப்பா...
என்ன கண்ணா..
நான் ஒன்னு சொல்லவா?
நந்தனுக்குத் தெரிந்துவிட்டது.
கண்ணா ! எதையாவது சொல்லி யாகத்தை நிறுத்திடாத. அப்றம் இந்திரனுக்கு கோபம் வரும்.
அப்பா.. நாம் தர்மத்தை ஒழுங்கா செய்தா தெய்வம் சந்தோஷப்படுமா?
ஆமா சந்தோஷப்படும்.
நம்ம தர்மம் என்ன? பசுமாடுகளை நல்லா பாத்துக்கறது.. அதை நாம சரியாத்தானே செய்யறோம்
ஆமா...
அதுக்கு தெய்வம் சந்தோஷப்படுமா இல்லையா?
படும்..
பின்ன எதுக்கு லஞ்சம் கொடுக்கறா மாதிரி இந்த யாகம்?
அதுக்கு பேசாம தர்மத்தை விட்டுட்டு யாகமே செய்துட்டிருக்கலாமே...
அதற்குள் பெரிய கூட்டம் கூடிவிட்டிருந்தது.
நந்தன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான்..
இப்ப என்னதான் சொல்ற கண்ணா?
யாகமெல்லாம் வேணாம்பா..
நந்தனுக்கு சற்று பயமாக இருந்தது. தலைவனாக இருந்தாலும் தன்னிச்சையாகப் பொது முடிவுகளை எடுப்பதில்லை அவன்.
நிமிர்ந்து கூட்டத்தைப் பார்த்தான். நந்தனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஒருவன் சட்டென்று குரல் கொடுத்தான்..
கண்ணன் சொல்றதுதான் சரி. கண்ணன் சொன்னபடி செய்யலாம்..
உடனே அனைவரும் அதையே சொன்னார்கள்.
அவ்வளவுதான் நந்தனுக்கு நிம்மதி. எல்லோரும் சேர்ந்து கண்ணன் சொன்னபடி யாகத்தை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தனர்.
ஆனால் எல்லார் மனதிலும் ஒரு சந்தேகம். யாகம் செய்வதானால், செய்யப்பட்ட அவ்வளவு உணவையும், அக்னியில் கொடுத்துவிடலாம். இப்போது இந்த உணவுகளை என்ன செய்வது?
நந்தன் கேட்டே விட்டான்.
அப்பா, நம்மைக் காப்பது இந்த கோவர்தன மலை. அதுக்குகீழ உள்ள புல்வெளியில் பசுவெல்லாம் மேயறது. அதில இருக்கற சுனைகள்ளேர்ந்து தீர்த்தம் கிடைக்குது. நிறைய மூலிகைகள் கிடைக்குது. எதிரிகள் கிட்டேர்ந்து அரண் மாதிரி காப்பாத்துது..
இந்த மலைக்கே பூஜை பண்ணலாம்பா..
செய்த எல்லா பதார்த்தங்களையும் வண்டில எடுத்துக்கிட்டு மலையடிவாரத்துக்கு போவோம்..
அவ்வளவு பேருக்கும் ஒரே குஷி.
எல்லாரும் கிளம்பிவிட்டனர். நாமும் அந்த கோஷ்டியில் இணைந்துகொள்வோம்
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment