ப்ருந்தாவனமே உன் மனமே - 53
அரிஷ்டாஸுர வதம்
நேரடியாக சங்கசூடன் வதத்தைக் கண்டதும் கோபிகள் சற்று பயந்துபோயிருந்தனர். இருப்பினும் கண்ணனின் விளையாட்டுப் பேச்சால் அவர்களது பயம் மறக்கடிக்கப் பட்டிருந்தது.
கண்ணனின் லீலைகளை விதம் விதமாக, மதுரமான குரலில் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பகல் பொழுதுகளைக் கழித்தனர்.
திடீரென்று ஒருநாள் கம்ஸனால் அனுப்பப்பட்ட அரிஷ்டன் என்ற அசுரன் காளையின் உருவம் கொண்டு கோகுலத்தில் நுழைந்தான்.
மலைபோன்ற திமில்களையும், கூரான உலக்கை போன்ற கொம்புகளையும் கொண்டு பயங்கரமான உருவத்துடன் கர்ஜித்தான்.
புயல் கண்ட பதராய் அனைவரும் சிதறியோட, அவன் வீடுகளின் தூண்களையும், மரங்களையும் கொம்புகளால் முட்டிக் கீழே சாய்த்தான்..
விஷயமறிந்த கண்ணன், பலராமனோடு அவனெதிரில் வந்தான்.
என்னைத்தானே தேடி வந்தாய் என்பதுபோல் கைதட்டி அவனை அழைத்து, இதோ இங்கிருக்கிறேன் என்பதுபோல் ஒரு தோழனின் மேல் கையைப் போட்டுக்கொண்டு காலை மாற்றி வைத்துக்கொண்டு ஒய்யாரமாய் நின்றான்.
தேவர்களும் கண்டு மயங்கும் கோலத்தைக் கருணையால் அசுரனுக்குக் காட்டினான்.
ஆனால், அசுரனுக்கோ இந்தக் கோலத்தைக் கண்டு கோபம் வந்தது.
குளம்புகளால் பூமியைக் கிளறிக்கொண்டு, கொம்புகளை விறைத்துக்கொண்டு வஜ்ராயுதம்போல் கண்ணனை நோக்கிப் பாய்ந்தான்.
கண்ணன் ஸர்வ அலட்சியமாக அவனது கொம்புகளைப் பிடித்துப் பின்னே தள்ளிவிட்டான்.
கண்ணனால் பின்னுக்குத் தள்ளப்பட்ட அரிஷ்டாசுரன் மூச்சிரைத்துக் கொண்டு மிகுந்த கோபதுடன் அதிவேகமாய்த் திரும்பி கண்ணனை நோக்கி வர, அவன் கொம்புகளைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டான் கண்ணன்.
கீழே விழுந்தவனைக் காலால் மிதித்தான்.
பக்தர்களுக்குக் குளிர்நிழல் தருவதும், கோபியருக்குப் பட்டுப்போல் மென்மையானதும், மஹாலக்ஷ்மி வருடுவதுமான கண்ணனின் கமலப் பாதம், அந்த அசுரனுக்கு மலைபோல் கனத்தது.
அத்தனை கோகுலவாசிகளும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அசுரனின் கொம்பைப் பிடுங்கி, அதாலேயே அவனைக் குத்திக் கொன்றான் கண்ணன். அவனுக்கும் வைகுண்ட பதவி அளிக்கப்பட்டது...
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment