ப்ருந்தாவனமே உன் மனமே - 46
தோன்றி மறைகின்றான்
கண்ணனோடு இருக்கும் பொழுதுகள் எவ்வளவு இனிமையானவை!
சரத்காலப் பௌர்ணமி நிலவு கண்ணனின் அழகைப் பருகிக்கொண்டு மேலும் ப்ரகாசித்தது.
ஒவ்வொரு கோபியும் கண்ணனோடு தன் இஷ்டம்போல் விளையாடினாள்.
ஒருத்தி கண்ணனோடு தட்டாமாலை சுற்றினாள்.
ஒருத்தி கண்ணனைக் கட்டிக்கொண்டாள். ஒருத்தி அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
ஒருத்தி அவனது வனமாலையைத் தன் கழுத்தில் போட்டுக்கொண்டாள். இன்னொருத்தி ஒரு புதிய வனமாலையைக் கண்ணனுக்கு சூட்டினாள்.
மன்மத மன்மதனாய் விளங்கிய கண்ணன் அந்த கோபிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோதும், ஆத்மாராமனாக தன்னுளே திகழும் ஆனந்தத்திலேயே மகிழ்ந்திருந்தான்.
அவனுக்கு மற்றவர்களால் ஆகவேண்டியது எதுவுமே இல்லை.
இப்படியாக எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியாது. காலதேவனும் மயங்கிப்போய் நின்று விட்டிருந்தான்.
ஒவ்வொரு கோபியும், பகவான் தன்மேலேயே அதிக அன்பு கொண்டிருப்பதாய் எண்ணினாள். பகவானே தங்களுடன் விரும்பி ரமிப்பதால், தங்களைப் போல் சிறந்த பாக்யவதிகள் இல்லை என்று எண்ணினார்கள்.
இதைச் சௌபகமதம் என்று கூறுவர்.
அந்தர்யாமியான கண்ணனுக்கு அவர்கள் எண்ணம் தெரியாதா?
உண்மையில் கோபிகளுக்கு அவ்வெண்ணம் வர வாய்ப்பே இல்லை..
கண்ணன் சற்று நேரம் பிரிந்த பின் மறுபடி கூடினால், ஆனந்தம் பன்மடங்காகும் என்று நினைத்து கோபிகளின் மனத்தில் சௌபகமதத்தைத் தூண்டிவிட்டான் போலும்.
இந்த எண்ணம் வந்ததோ இல்லையோ, சட்டென்று மறைந்துவிட்டான் கண்ணன்.
தங்களோடு மகிழ்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்த கண்ணன், திடீரென்று காணவில்லையென்றதும், திகைத்துப் போயினர் கோபியர். உணர்வுகளற்றுப் போயினர்.
சிறிது நேரத்தில் உணர்வு திரும்பியதும், ஒருவரை ஒருவர் கண்ணன் எங்கே எங்கே என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் அந்த அடர்ந்த ப்ருந்தாவனத்தில் கண்ணனை எங்கே தேடுவது என்று புரியவில்லை.
இருப்பினும் கண்ணனைத் தேடி அலையத் துவங்கினர்.
தேடிக் கிடைக்கும் பொருளா அந்த மாயக் கண்ணன்?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment