ப்ருந்தாவனமே உன் மனமே - 54
அஸுரனால் வந்த இரட்டை லாபம்
கருணையும் அன்பும் உருவானவள் ஸ்ரீராதா தேவி.
அனுதினமும் கண்ணன் செய்யும் லீலைகள் அனைத்தும் அவள் காதுகளை உடனுக்குடன் எட்டிவிடும்.
கண்ணனின் லீலைகளே அவளுக்கு உண்ணும் சோறு, பருகும் நீர்.
ஒரு காளையைக் கொன்றுவிட்டான் கண்ணன் என்று கேட்டுத் துடித்துப்போனாள்.
அசுரனாய் இருந்தால் என்ன, காளை உருவில் வந்துவிட்டான். கொல்லத்தான் வேண்டுமா என்ன? கண்ணனின் பார்வை பட்டால் மாறாத மனமும் உண்டா?
மறுநாள் கண்ணன் மாடுகளை மேய்க்க வனம் சென்றதும், அவனைத் தேடிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டாள்.
மேலும் ஒரு ரிஷபத்தைக் கொன்றால் கண்ணனுக்கு ப்ரும்மஹத்தி தோஷம் வந்துவிடுமோ என்ற பயம் வேறு.
வா ராதா! என்ன இவ்வளவு தூரம்?
பூப்பறிக்க வந்தியா?
இல்லை. உன்னைப் பாக்கத்தான்.
ஒய்யாரமாய் சாய்ந்து அமர்ந்திருந்த கண்ணன், சட்டென்று எழுந்தான்.
என்னைப் பாக்கவா? இதென்ன அதிசயம்?
ஏன்? உன்னைப் பாக்க நான் வரதில்லையோ?
இல்ல. பகல்ல வந்திருக்கியே..
கள்ளமாய்ச் சிரித்தான்.
போதும் உன் கேலிப் பேச்சு.
அங்குமிங்குமா யாரையாவது கொலை பண்ற. கேட்டா அசுரர்கள்னு சொல்ற. சரி, ஜனங்களைக் காப்பாத்தணும்னா துஷ்டர்களை அழிச்சுத்தான் ஆகணும்னு பொறுத்திட்டிருந்தேன். அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசியில் நேத்திக்கு ஒரு காளையை கொன்னுட்ட..
ராதா, எவ்ளோ கருணை உனக்கு?
அது காளையில்ல. அசுரன்தான். அவன் காளை மாதிரி வந்தா அவனை விடணுமா?
கோகுலத்தில் எத்தனை பேரை ஓட ஓட விரட்டினான்னு கேட்டுப்பாரு, தூணெல்லாம் உடைச்சுட்டான் அந்த அசுரன். ஒரே களேபரம்.
அதான் கொல்லும்படி ஆயிடுச்சு.
காளியனை மனசு மாத்தினா மாதிரி இவனையும் மனசு மாத்தறது? கொல்றதுதான் வழியா?
அவனைக் கொன்னேனே தவிர, அவன் வைகுண்டம்தான் போயிருக்கான் ராதா.. அவனுக்கும் நல்லதுதான் பண்ணியிருக்கேன்.
அதெல்லாம் தெரியும் எனக்கு. இருந்தாலும் தோஷம் வராதா?
வைகுண்டம் அனுப்பினா என்ன தோஷம் வரும்?
ராவணனும் வைகுண்டம்தான் போனான். ஆனா, ராமன் ப்ரும்மஹத்தி வந்ததுன்னு பரிஹாரம் பண்ணினாரே...
சரி, இப்ப என்னதான் சொல்ல வர?
காளைமாட்டைக் கொன்னதால உனக்கும் ஏதாவது தோஷமாயிருக்கும்.
அதுக்கென்ன பண்றது?
பாரத தேசத்தில் இருக்கற எல்லா புண்ய நதிலயும் போய் ஸ்நானம் செய்துட்டு வா
அது சரி..
கங்கையே என் பாதத்திலேர்ந்து வருதுன்னெல்லாம் கதை சொல்லாம தயவு செய்து ப்ராயசித்தம் செய்..
நீ எது சொன்னாலும் சரிதான் ராதா.. ஆனா, நான் போய் போய் ஒவ்வொரு நதியிலயும் ஸ்நானம் செய்யறதுன்னா ரொம்ப நாளாகும். அதனால...
பூமியை ஓங்கி உதைத்தான் கண்ணன். ஒரு உதைக்கு மலையைப் பெயர்த்துக் கொடுத்த பூமாதேவி, இப்போது பெரிய பள்ளம் ஏற்படுத்திக் கொடுத்தாள்.
ராதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஸப்த நதிகளையும் நினைவால் அழைத்தான் கண்ணன்.
அடுத்த கணம் கங்கை, யமுனை, காவிரி, நர்மதை, ஸிந்து, ஸரஸ்வதி, கோதாவரி ஆகிய புண்ய நதிகளின் தேவதைகள் கண்ணனின் முன் தோன்றி அவனை வணங்கவும் செய்தனர். கண்ணன் கண்ணைக்காட்ட, தங்கள் புனித நீரால் பள்ளத்தை நிரப்பிவிட்டனர்.
உடனே அதில் முழுகி எழுந்தான் கண்ணன்.
போதுமா ராதா? நீயும் இதில் ஸ்நானம் செய். வா
என்று அழைத்தான்.
அவளோ ப்ராயசித்தத்திற்காக நீ ஸ்நானம் செய்த அந்த தண்ணில நான் குளிக்க மாட்டேன்.
உன்னைப் பழிச்ச பாவத்துக்கு நானும் ஒரு குளம் வெட்டி அதிலயே ஸ்நானம் செய்துக்கறேன்..
என்று கண்ணன் ஏற்படுத்திய குளத்தின் அருகிலேயே தன் வளையலைக் கழற்றித் தோண்ட ஆரம்பித்தாள்.
பூமாதேவி, ராதைக்கு உதவி செய்ய எண்ணி, அவள் வளையலால் சிறிது தோண்டினாலும், பெரிய பள்ளமாக்கிக் கொடுத்தாள். ஒரு வாறாக, குளத்திற்கான பள்ளத்தை ஏற்படுத்தியாயிற்று. நீருக்கெங்கே போவது?
தோழிகளை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த மானஸ கங்கை என்ற அருவியிலிருந்து குடம் குடமாக நீர்கொண்டுவந்து நிரப்பத் துவங்கினாள். மிகுந்த சிரமப்பட்டு நீர் கொண்டு வந்த போதும், குடத்து நீரால் குளம் நிரம்புமா?
ராதையும் தோழிகளும் சோர்ந்துபோய் அமர்ந்துவிட, கண்ணன் மறுபடி ஸப்த புண்யநதிகளை அழைத்தான்.
கணத்தில் குளம் நிரம்பிவிட்டது.
கண்ணன் இறைவன் என்று தெரிந்தபோதும், அவன் அழைத்தால் கங்கை முதலான ஸப்த புண்ய நதிகளும் ஓடிவந்ததைப் பார்த்துக்கூட, தான் இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக அவனைக் குற்றம் சொன்னதை நினைத்து வருந்தினாள்.
அவளது வருத்தத்தைப் போக்க எண்ணிய கண்ணன்,
ராதே நீ வெட்டிய குளம் நான் ஏற்படுத்தியதை விட அழகா இருக்கு. எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு என்று சொல்லி அதில் குதித்தான்.
நான் தினமும் காட்டுக்கு வரும்போது, இந்தக் குளத்தில் தோழர்களோட குளிக்கறேன். சரியா? என்றான்.
மகிழ்ந்து போனாள் ராதா.
கண்ணா, எனக்கும் நீ உண்டாக்கிய குளம் ரொம்ப பிடிச்சிருக்கு. நானும் தினமும் தோழிகளைக் கூட்டிட்டு வந்து அதில குளிக்கப் போறேன்.
என்றபடி குளத்தினுள் குதித்தாள்.
ராதைக்காக கண்ணன் ஏற்படுத்திய குளம் ஷ்யாம் குண்டம் எனவும், கண்ணனுக்காக ராதை ஏற்படுத்திய குளம் ராதா குண்டம் எனவும் புகழ் பெற்று விளங்குகின்றன.
இன்றும் ஸ்ரீவன யாத்திரை செல்பவர்கள் இந்த இரட்டைக் குளங்களின் அழகில் மயங்கலாம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment