ப்ருந்தாவனமே உன் மனமே - 34
மலை உம்மாச்சி
வண்டிகளில் அத்தனை உணவுகளையும் எடுத்துக்கொண்டு குஷியாக நாமகீர்த்தனம் செய்துகொண்டு, கோவர்தன மலையடிவாரத்திற்கு அனைவரும் கிளம்பினர் . நந்தன் கையைப் பிடித்துக்கொண்டு ஜோராய் நடந்தான் கண்ணன்.
அடிவாரத்தை அடைந்ததும், எல்லாரும் கண்ணன் முகத்தைப் பார்க்க,
மலையை ப்ரதக்ஷிணம் செய்வோம். வயசானவங்க நடக்க முடியாத வங்கல்லாம் வண்டில வரட்டும்
என்றான்.
ஆடிப் பாடிக் கொண்டு மலையைச் சுற்றி வந்தனர். பின்னர் கண்ணன்
எல்லா சாப்பாட்டையும் இப்படி மலைக்கு முன்னாடி பரவலா கொட்டி வைங்க
என்றான்.
ஒரு அந்தணரைக்கொண்டு மலைக்கு அர்ச்சனை புஷ்பங்களால் செய்யப்பட்டது.
எல்லோர் மனதிலும் ஒரு சந்தேகம் ஓடிக் கொண்டிருந்தது. யாகாமாயிருந்தால் அவ்வளவு உணவையும் அக்னியில் இடுவோம். அவற்றை அக்னி பகவான் இந்திரனிடம் சேர்த்துவிடுவார்.
மலைக்கு பூஜை என்றால் உணவுகள் என்னவாகும்?
கண்ணன் அந்தர்யாமியாயிற்றே. அவனுக்கு அனைவரின் எண்ணமும் தெரியாதா?
தானே ஒரு பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு மலை மீது நின்றான். ஆவென்று வாயைத் திறக்க, அத்தனை உணவுகளும் நேராக அவன் வாய்க்குள் பறந்து சென்றன.
இதை வாய்க்குள் விரலைப் போட்டுக்கொண்டு, ஒரு கையால் நந்தனின் கையைப் பிடித்துகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் குட்டிக் கண்ணன்.
அப்பா, அதோ பாருங்க மலை உம்மாச்சி, எல்லாத்தையும் சாப்பிடுதுப்பா..
என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
இவ்வளவு உணவை என்ன செய்வதென்ற கவலை போய், இப்போது சுவைத்துப் பார்க்கக்கூட ஒன்றும் மிஞ்சவில்லை.
மலை உம்மாச்சி நேரே வந்து உண்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment