ப்ருந்தாவனமே உன் மனமே - 32
ஸ்மரணே ஸுகம்
காட்டுமன்னாரான ராஜகோபாலன் இன்று விசேஷ அழகுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறான். கண்ணனிடமும் ஒரு பரபரப்பு தெரிகிறது. எப்போதும் உடனிருக்கும் ஸ்ரீதாமாவுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. கோபிகளை எதிர்நோக்கும்போது உள்ள பரபரப்பைக் காட்டிலும் இது இன்னும் விசித்ரமாக இருந்தது.
கண்ணன் ஏதோ பேசிக்கொண்டிருந்தானே தவிர, அவன் எண்ணம் யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்திருக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். உண்மையான பக்தர்களைக் காண பகவானும் தவிக்கிறான்.
இடைச்சிறுவர்கள் கண்ணன் சொன்னதற்காக மறுபடி அந்தணர் குடிலுக்குச் சென்றனர். யாகசாலையைச் சுற்றிக்கொண்டு பின்புறம் சென்றால், ஆங்கே தனித்தனியாக சில குடில்கள் காணப்பட்டன. ஏழெட்டு பெண்மணிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த பால்காரி நாளைக்கு வந்தா கேக்கணும்..
அதுக்குள்ள கண்ணன் என்ன லீலை பண்ணினான்னு..
இடைச் சிறுவர்களுக்கு, கண்ணன் எதற்காகத் தங்களை அனுப்பினான் என்று புரிந்துவிட்டது.
அம்மா, அம்மா...
தலையில் முண்டாசும், கையில் கோல்களும், கச்சமாய்க் கட்டிய அழுக்குத் துண்டும், கண்களில் ப்ரகாசமும், பார்த்ததுமே இடைச் சிறுவர்களென்று தெரிந்தது.
என்னப்பா, என்ன வேணும?
அம்மா, நாங்க கோகுலத்திலிருந்து வர்ரோம். மாடு மேய்ச்சிட்டு ரொம்ப தூரம் வந்துட்டோம். எங்ககூட நந்தராஜா பிள்ளையான கண்ணனும் வந்திருக்கார். அவருக்கு சாப்பிட ஏதாவது..
பஞ்சத்திலடிபட்டவன் விருந்தைக் கண்டதுபோல் மகிழ்ந்து சட்டென அனைவரும் துள்ளியெழுந்தனர். கண்ணனா? எங்க? எங்க? வந்திருக்கானா?
அவன் பகவானாமே?
நீங்க அவன் தோழர்களா?
கொஞ்சம் இருங்க..
என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடிலுக்குள் சென்று நிறைய பதார்த்தங்களைக் கொண்டுவந்தனர்.
எங்கே கண்ணன்?
அவர் கொஞ்ச தூரத்தில் இருக்காரும்மா. எங்களை வாங்கிட்டு வரச்சொன்னாரு.
நாங்க அவரை பாக்கணுமே..
எங்ககூட வந்தா பாக்கலாம்.
அவசியம் வர்ரோம்.. அழைச்சிட்டுப்போங்கப்பா..
அதற்குள் ஒரு அந்தணர் அங்கே வந்தார். எல்லாரும் கண்ணனைப் பார்க்கக் கிளம்புவதையறிந்து தன் மனைவியை தரதரவென்று இழுத்துச் சென்று வீட்டினுள் வைத்துப் பூட்டிவிட்டார்.
கண்ணன் இவ்வளவு பக்கத்தில் வந்தும் தன்னால் காண முடியவில்லையே என்று கரையிலிட்ட மீனாய்த் துடித்து துடித்து ப்ராணனை விட்டுவிட்டாள் அந்த பாக்யவதி..
மற்ற அனைவரும் செய்த அத்தனை பதார்த்தங்களையும் எடுத்துக்கொண்டு கண்ணனைக் காண ஓடினர்.
தூரத்திலிருந்து அந்தணபத்னிகள் வருவதையும், அவர்களது துடிப்பையும் பார்த்த தோழனுக்கு,
ஆனாலும் இப்படித் துடிக்கும்படி விடுவானா? கண்ணனுக்குக் கல்நெஞ்சமா என்றே சந்தேகம்வந்துவிட்டது.
வாங்க வாங்க எல்லாருக்கும் நமஸ்காரம்...
கண்ணன் சொல்லிமுடிப்பதற்குள் அவர்கள்
கண்ணா இன்றாவது உன் தரிசனம் கிடைத்ததே. நீ பகவான் என்று எங்களுக்குத் தெரியும். ஏமாற்றலாம் என்று நினைக்காதே என்றனர்.
கண்ணன் அவர்களைக் கண்டு மிக்க மகிழ்ந்தான். அவர்கள் செய்த அத்தனை உபசாரங்களையும் ஏற்றுக்கொண்டான்.
என்னை நினைத்துக் கொண்டிருப்பதாலேயே ஒருவன் என்னை அடைகிறான். ஸ்மரணத்தினால் ஏற்படும் சுகத்தை என் பக்கத்தில் எப்போதும் இருப்பவர் கூட அனுபவிப்பதில்லை.
எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருங்கள் என்றான்.
அந்தப் பெண்களோ,
கண்ணா நாங்கள் ஏற்கனவே எங்கள் கணவரை எதிர்த்துக் கொண்டுதான் வந்திருக்கிறோம்.உன்னை விட்டுச் செல்ல நாங்கள் விரும்பவில்லை. திரும்பிச் சென்றால் எங்களை ஏற்பாரும் இல்லை என்றனர்.
அதற்கு பகவான்
எப்பொழுதுமே, என்னை தரிசனம் செய்துவிட்டுச் செல்பவர்களுக்கு எதிர்ப்பு என்பதே இல்லை. உங்கள் கணவர்களும் மனம் மாறி உங்களை வரவேற்பார்கள். குடும்பத்திலிருக்கும் நீங்கள் இவ்வாறு சொல்வது அழகல்ல. எப்போதும் என்னை நினைத்துக் கொண்டு உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். நானும் உங்களை நினைத்துக்கொண்டே இருப்பேன்
என்று சொல்லி அவர்களுக்குப் பிரியாவிடை கொடுத்தான்.
தாங்கள் கொண்டுவந்த உணவுகளை கண்ணனுக்கும் அவனது தோழர்களுக்கும் கொடுத்துவிட்டு திரும்பி் திரும்பிப் பார்த்துக் கொண்டு தயங்கித் தயங்கிச் சென்றனர் அந்தண பத்னிகள்.
அவர்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அந்தணர்கள் யாகசாலை வாசலிலேயே காத்திருந்தனர்.
மனைவிகளைப் பார்த்ததும், அழாத குறையாக பகவானைப் பாத்தேளா?
எங்களுக்கும் சேத்து வேண்டினேளா?
பகவான் எங்களைத் தப்பா நினைக்கலியே. எங்களுக்கும் வரணும்னு ஆசைதான். ஆனா, கம்சனுக்குத் தான் பயமா இருக்கு. நீங்களாவது பாத்தேளே அதுவே போதும். நாங்க உங்களைப் பாத்துக்கறோம். யாகமெல்லாம் பண்றோங்கற கர்வத்தில் இப்படி நடந்துண்டோம். எங்களை நினைச்சா எங்களுக்கே அசிங்கமா இருக்கு.
பகவானே வந்தும்கூட தரிசனம் பண்ற பாக்யம்இல்லையே.. என்று அவர்களிடம் புலம்பத் துவங்கினர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment