ப்ருந்தாவனமே உன் மனமே - 48
கோபிகா கீதம்
கண்ணனின் தரிசனத்திற்காக ஏங்கி அழுவதே அவனைக் காணும் வழி. அந்த ஏக்கம் உண்மையானதாக இருக்கவேண்டும்.
அத்தகைய பக்தி உள்ளவர்கள் கோடியில் ஒருவரே.
பலருக்கு நொடியில் மோட்சம் தந்துவிடுகின்ற கண்ணன், தன்மீது ப்ரேமபக்தியை அவ்வளவு எளிதாகத் தந்துவிடுவதில்லை..
கண்ணனுக்காக ஏங்கி அழுதுகொண்டே பாடத்துவங்கினர் கோபியர்..
ஜெயதி தேஅதிகம் என்று துவங்கும் இந்த கீதம் 18 ஸ்லோகங்களைக் கொண்டது.
18 என்ற எண் வெற்றியைக் குறிப்பது..
பகவானைக் காண்பதற்காகப் பாடப்படும் இந்தப் பாடல் முயற்சியில் வெற்றியைத்தரும். அதாவது இந்த கீதத்தை ஜபமாகச் செய்துவந்தால் வெகு விரைவில் க்ருஷ்ண தரிசனம் ஏற்படும்..
கண்ணா உனது திருவடி பட்ட இந்த ப்ருந்தாவனம் இந்திரலோகத்தை விட உயர்ந்து நிற்கிறது.
விஷ ஜலம், ராக்ஷஸர்கள், காற்றுடன் கூடிய மழை, காட்டுத்தீ போன்ற துன்பங்களிலிருந்தும் மற்றும் இந்த ஸம்ஸார பயத்திலிருந்தும் எங்களை அடிக்கடி காப்பவன் நீயே..
உன்னை யசோதையின் பிள்ளையென்று மட்டும் நினைக்கவில்லை. எல்லா உயிர்களிலும் உள்ளுறையும் ஆத்மஸ்வரூபம் நீயே..
உனது தாமரைக் கரத்தை எடுத்து எங்கள் சிரசில் வைப்பாய்
உன்னை வணங்குபவர்களின் பாவங்களை அழித்துவிடுகிறாய்.
உந்தன் மதுரமான கதைகளை வாழ்வாதாரத்திற்காகச் சொல்பவர்களின் மன அழுக்கையும்கூட நீக்கிவிடுகிறாய்.
உனது மங்களமான கதைகள் ஞானிகளாலும் புகழப்படுபவை..
உனது புன்சிரிப்பு, அன்பு ததும்பும் பார்வை, உனது ஸஞ்சாரம் ஆகியவற்றை நினைத்தாலே மங்களம் ஏற்படுகின்றது.
கல்லும் முள்ளும் நிறைந்த இந்தக் காட்டில் நீ அலைந்தால் உன் பாதங்கள் நோகுமே என்று வருந்துகிறோம்.
நீ வனம் செல்லும் சமயங்களில் உன்னைக் காணாமல் எங்களுக்கு ஒரு நொடிகூட யுகம் போல் கழிகின்றது.
கணத்துக் கணம் புதுப்புது லீலைகள் செய்பவன் நீ. ஒரு கணம் இமையைக் கொட்டினாலும் அதற்குள் புதிதாக ஒரு லீலை நிகழ்த்தி விடுகிறாய். எனவே இமைகளைப் படைத்த ப்ரும்ம தேவன்மேல் எங்களுக்குக் கோபம் வருகிறது.
வீட்டிலிருக்கும் உறவுகளையெல்லாம் மறந்துவிட்டு உன்னையே சரணடடைந்த எங்களை நீ வஞ்சிக்கலாகாது.
உனது கேலிப் பேச்சுக்களையும், கண் ஜாடைகளையும் நினைத்து ஏங்குகிறோம்.
எங்களுக்கு கர்வம் வந்துவிட்டதால் நீ எங்களை விட்டுப் பிரிந்தாய் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எங்களுக்கு அப்படி ஒன்றும் கர்வம் ஏற்படவில்லை. ஒருக்கால் நாங்கள் கர்வமடைந்ததாக நீ நினைத்தால் எங்கள் மத்தியில் வந்து ஒரே ஒரு மந்தஹாசம் செய்தால் போதுமே. எங்களது அத்தனை கர்வமும் தவிடு பொடியாகிவிடும். அதை விட்டு நீ ஓடி ஒளியலாகுமா?
என்று பலவாறு கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டு அழுது புலம்பினர் கோபியர்.
அவர்களது அழுகையைக் காண அதற்கு மேல் சகியாமல் அவர்கள் மத்தியில் மன்மதனைப் போன்ற அழகுடன் தோன்றினான் கண்ணன்...
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment