ப்ருந்தாவனமே உன் மனமே - 47
கண்ணன் எங்கே?
பிறவிக் குருடனுக்கு பார்வையைக் கொடுத்துவிட்டு ஒரே நாளில் மீண்டும் பார்வை பறிபோனால் எப்படி இருக்கும்?
பஞ்சத்தில் வாடுபவனை இலை போட்டு அமரவைத்து, பெரிய விருந்தைப் பரிமாறிவிட்டு, உண்ணும் நேரம் எழுப்பிவிட்டால் எப்படி இருக்கும்?
கோபியரின் வேதனை இன்னும் கொடுமையானது.
கடவுளே கையில் கிடைத்த பிறகு, சட்டென விட்டுச் சென்றால் எப்படிப் பொறுப்பார்கள்?
கதறி அழுவதைத் தவிர வேறு வழி?
தானே மறைந்து விட்டவனைத் தேடுவதெப்படி?
கண்ணனோடு இருக்கும் வரையில் ரம்யமாக இருந்த வனம், கண்ணன் மறைந்ததும், பயங்கரமாய் இருந்தது.
கண்ணனைத் தேடும் எண்ணத்தால் அவர்களுக்கு பயம் தெரியவில்லை.
அங்குமிங்கும் தேடித் தேடி சலித்துப் போயினர்.
அங்கிருக்கும் மரம் செடி கொடிகளைப் பார்த்துப் பார்த்து கண்ணனைக் கண்டாயா? என்று கேட்டனர்.
சிறிது தூரம் சென்றதும் துளசிச் செடி கண்ணில்பட்டது.
நீ இருக்கும் இடத்தில் கண்ணன் இருப்பான் அன்றோ துளசி மாதாவே!
கண்ணன் சரணத்தில் விரும்பி வாசம் செய்யும் துளசிமாதாவே! கண்ணனைக் கண்டாயா? என்று அரற்றினர்.
அவள் தாயல்லவா? சேயின் அழுகை கேட்டதும் கண்ணன் சென்ற வழித்தடத்தைக் காட்டினாள்.
அங்கே, கண்ணனின் கால் தடயங்கள் தெளிவாய்த் தெரிந்தன. சங்கு சக்ர ரேகைகள் பதிந்த பகவானின் பாதத்தடயம்.
அதைக் கண்டதும் கண்ணனையே கண்டாற்போல் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இருப்பினும் கண்ணன் எங்கே?
காலடிகளைத் தொடர்ந்து செல்ல கூடவே இன்னொரு ஜோடி கால் தடயங்கள் தென்பட்டன.
அவை ஒரு பெண்ணினுடையவை.
வேறு யார்? நம் ராதையினுடையதுதான்.
கொஞ்சம் மகிழ்ச்சி ஏற்பட்டது. ராதையுடன் சென்றிருக்கிறான் என்றால், கண்ணன் நிச்சயம் திரும்பி வந்துவிடுவான்.
ஆமா, ராதைக்கு நம் தாபம் தெரியும். நிச்சயம் அழைத்து வந்து விடுவாள்.
மீண்டும் ஒரு ஜோடி காலடிகள் மட்டுமே தெரிந்தன.
இன்னும் இரண்டடி தூரம்கூட செல்லவில்லை, ராதையும் அழுதுகொண்டு எதிர்ப்பட்டாள்.
என்னாச்சு ராதா?
கண்ணன் எங்கே?
ஏன் அழற?
அவன் என்னையும் விட்டுட்டு காணாம போயிட்டான்.
இருந்த ஒரு நம்பிக்கையும் போய்விட்டது.
இனி கண்ணனைக் காண்பதெவ்வாறு?
ராதா சொன்னாள்
தானாகப் போன கண்ணன் தானாகத் திரும்பி வந்தாத்தான் உண்டு. தேடினா கிடைக்கற பொருளில்லையே. நாம எல்லாரும் யமுனைக்கரைக்கு போகலாம்.
கண்ணன் தரிசனத்துக்காக ஏங்கி அழறதைத் தவிர வேறெந்த வழியாலும் அவனை அடைய முடியாது.
யமுனைக் கரைக்குச் சென்று மணலில் வட்டமாக அமர்ந்து கண்ணனை நினைத்து அழுதுகொண்டே பாட ஆரம்பித்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment