ப்ருந்தாவனமே உன் மனமே - 55
ஸாதுக்களின் கவலை
உலகில் மக்கள் இறைவனை மறந்து துன்பப்படுவதைக் கண்டு உண்மையில் வருந்துபவர்கள் ஸாதுக்களே.
இறைவனைப் பொறுத்தவரை அவனுக்குப் போற்றுபவருக்கும் தூற்றுபவருக்கும் வித்தியாசமே இல்லை.
கண்ணாடி ப்ரதிபலிப்பதைப்போல் யார் யார் எந்த உணர்வைக் கொண்டு அவனை அணுகுகிறார்களோ அதே உணர்வை அவர்களிடம் வெளிப்படுத்திவிடுகிறான்.
ஒவ்வொரு முறையும் யாராவது மஹான்களின் வேண்டுதலின்படித்தான் இறைவனோ அல்லது அவனுக்குத் துல்லியமான ஒரு மஹானின் அவதாரமோ பூமியில் நிகழ்கிறது.
இறைவன் பிறந்துவிட்டான். தினம் தினம் புதுப்புது லீலைகள் செய்கிறான். மூவுலகத்தாரும் கண்டு ரசிக்கின்றனர். எல்லாம் சரிதான்.
அவதார காரியங்கள் அப்படியே நிற்கின்றனவே..
அவ்வப்போது அசுரவதங்கள் நடைபெற்று வந்தபோதும், அசுரர் தலைவனான் கம்ஸன் இன்னும் ஸாதுக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறான்.
அவன் மனதில் கௌரி மரண பயத்தை விதைத்துவிட்டிருந்த போதும், அவனுக்குத் தன்னைக் கொல்ல வந்தவன் க்ருஷ்ணன்தானா என்பதில் சந்தேகம் இருந்தது போலும்..
எவ்வளவு நாள்களுக்கு ஸாதுக்கள் அவதிப்படுவார்கள்?
எவ்வளவு வருடங்களுக்கு தேவகியும் வசுதேவரும் சிறையில் வாடுவார்கள்?
இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு அவனை எவ்வளவு நாள்கள் பிரிந்திருப்பார்கள்?
இந்தக் கவலையெல்லாம் வேறு யாருக்கு வரும்?
நம் அனைவரையும் பக்தி மார்கத்தில் நிறுத்த ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பவர், ப்ரஹலாதன், த்ருவன், வ்யாஸர், வால்மீகி ஆகிய மஹோன்னதர்களின் குரு, தன்க்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லையென்று எதையாவது செய்து, உலகில் நன்மையை நிறுவுபவர், நமது நாரதருக்குத்தான் கவலை வந்தது.
அவருக்கு மட்டும் எந்த இடத்தில் நுழையவும் தடைகளே இல்லை.
வைகுண்டம், கைலாசம், இந்திர லோகம், ஸத்ய லோகம், ராவணன் சபை, ஹிரண்ய கசிபுவின் சபை, கம்சனின் சபை எங்கு சென்றாலும் வரவேற்பு கிட்டும்.
தேவர்கள் முதல் அசுரர்கள் வரை அவரை எல்லோரும் தங்களுக்கு நன்மை செய்பவராகவே காண்கின்றனர்.
அவரது நாவில் விளையாடும் நாமமும், அவரது தேஜஸும், சொல்வன்மையும் அப்படிப்பட்டவை.
கம்சனிடம் வந்து, அவனைக் கொல்ல வந்த குழந்தை, கண்ணன் என்ற பெயரில் நந்தன் வீட்டில் வளர்கிறான் என்று சொல்லிவிட்டுப் போனார்.
நாள் தவறாமல் கம்ஸன் அசுரர்களை அனுப்ப, ஒருநாளும் ஒருவனும் திரும்பி வரவில்லை.
தனியாக அனுப்பப்படும் அசுரர்கள் இறந்துபோகிறார்கள். அதனால் கண்ணனை இங்கு வரச் செய்துவிட்டால், இங்கிருக்கும் அசுரர்கள் அனைவரும் சேர்ந்தாவது கண்ணனைக் கொன்றுவிடலாம் என்று நினைத்தான்.
கண்ணனை அழைத்துவர யாரை அனுப்பலாம் என்று யோசிக்கும்போதே, அவனது நினனைவில் அக்ரூரர்தான் வந்தார்.
இதற்குள் நேற்று அரிஷ்டனுக்குப் பிறகு அனுப்பப்பட்ட கேசியையும் கண்ணன் வதம் செய்தான் என்று செய்தி வந்தது.
உடனே சபைக்கு வரச்சொல்லி அக்ரூரருக்கு செய்தி அனுப்பினான்.
என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு வந்த அக்ரூரரை, வழக்கத்திற்கு மாறாக மிக மரியாதையோடு வரவேற்றான் கம்சன்.
அக்ரூரரின் பயம் இன்னும் அதிகமாயிற்று.
அவரது கையைப் பிடித்துக்கொண்டு மிகவும் அன்பாகப் பேசினான் கம்சன்.
அக்ரூரரே உம்மால் மட்டும்தான் எனக்கு உதவி செய்யமுடியும். உம்மைப் போன்ற பொறுப்பான ஒருவரை எங்கு தேடினாலும் கிடைக்காது.
துஷ்டன் பாராட்டினால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அக்ரூரருக்கு கைகால்களெல்லாம் நடுங்கின.
மதுராவில் ஒரு தனுர் யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறேன்.
தினமும் நிறைய ஸாஹஸச் செயல்கள் செய்துவரும் கண்ணனை அழைத்து வாருங்கள். ஒரு மல்யுத்தப்போட்டி நடத்துவோம். எப்படியும் அவன் வெற்றி பெறுவான். அவனுக்குப் பரிசுகள் கொடுத்து கௌரவிக்கலாம்.
வேறு யாரை அனுப்பினாலும் சரியாக வராது. நீர் நந்தனின் நண்பராயிற்றே.
நந்தன், கோபர்கள் எல்லாரையும்கூட அழைத்து வாருங்கள் என்றான்.
என்ன செய்வதென்று தெரியவில்லை.
மறுத்தாலும் கம்சன் விடப்போவதில்லை. தனக்கு தண்டனை தருவதோடு, கண்ணனை அழைத்துவர வேறு யாரையாவது அனுப்புவான். சரியென்று தலையாட்டிவிட்டு வந்துவிட்டார் அக்ரூரர்.
அக்ரூரர் மனத்தில் நிகழ்ந்த போர்?
அப்பப்பா! ஸாதுக்களுக்குத்தான் எவ்வளவு சோதனை?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment