ப்ருந்தாவனமே உன் மனமே - 52
சங்கசூட வதம்
ஒருநாள் கார்வண்ணனும், பலராமனும் வனத்தில் சிறுவர்களோடு சிரித்துப் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
அவ்வமயம், வனத்தில் பூக்கும் சில விசேஷப் பூக்களைப் பறிப்பதற்காக குட்டி கோபிகள் சிலர் அந்தப் பக்கமாய் வந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் கண்ணன் கண்ணைக் காட்ட, ஆளுக்கொரு பக்கம் ஒளிந்துகொண்டனர். சிறுமிகள் அருகே வந்ததும், சுற்றி வளைத்துக் கொண்டனர்.
என்ன கண்ணா?
தனியா வரவங்ககிட்ட வம்பு செய்யலாமா?
தனியா? நான் இருக்கும்போது எப்படித் தனியாகும்? சும்மா ஏதாவது சொல்லாம வாங்கடி விளையாடலாம்
அதுசரி, விளையாட்டா? நாங்க கோபேஸ்வரர் பூஜைக்கு பூ கொண்டுபோக வந்தோம்.
நாம விளையாடறதைப் பாத்தா அவரே இங்க வந்துடுவார்.
பூவெல்லாம் நாங்க எல்லாரும் சேர்ந்து பறிச்சுத் தரோம்.
மரத்துமேல இருக்கற பூவெல்லாம்கூட பறிச்சுத் தரோம்
கண்ணனோடு விளையாடுவதா? உள்ளூர அத்தனை பேருக்கும் ஆசைதான். இருந்தாலும் கேட்டவுடன் ஒத்துக்கொள்வதா?
சரி, கண்ணா, என்ன விளையாடறது?
கண்ணாமூச்சி,
த்வாதச நாமம் சொல்லி மாற்றி மாற்றிக் கையைக்காட்டி ஒரு பெண் மாட்டிக்கொள்ள, அவள் கண்களைக் கட்டிவிட்டு அனைவரும் ஓடினர். அப்போது சங்கசூடன் என்ற ஒரு பயங்கரமான அசுரன் வந்தான். அவன் தலையில் கண்ணைப் பறிக்கும் ஒளிகொண்ட மணி ஒன்று இருந்தது.
அவன் ஓடிக் கொண்டிருந்த கோபிகள் அனைவரையும் குறுக்கே புகுந்து துரத்த ஆரம்பித்தான்.
பயந்த கோபச் சிறுவர்கள் ஓரமாக ஓடிவிட்டனர்.
கோபிகளோ கண்ணா கண்ணா என்று அலறினர்.
கண்ணன் ஓடிச்சென்று கோபிகளுக்கும் அசுரனுக்கும் குறுக்கே நின்றான்.
பலராமன் அத்தனை கோபிகளையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று சற்று தொலைவிலிருந்த மரத்தடியில் விட்டு காவலுக்கு நின்றான்.
அதற்குள் கண்ணன் சங்கசூடனைத் துரத்திக்கொண்டு ஓடினான்.
காற்றாய்ப் பறந்து அசுரனைக் கையில் பிடித்துச் சுழற்றியடிக்க, அவன் பம்பரம் போல் சுழன்று மேலே சென்று பின் வேகமாய்க் கீழே விழுந்து உயிர் நீத்தான். அவன் தலையிலிருந்த பளபளக்கும் மணியைக் கொண்டு வந்து அண்ணனுக்குப் பரிசளித்தான் கண்ணன்.
கோபிகள் அனைவரும் கண்ணனின் பராக்ரமத்தைக் கண்டு பேச்சற்று நின்றனர்.
பின்னர் கோபச்சிறுவர்களை மரத்திலேற்றிவிட்டு, கூடை நிறையப் பூக்களைப் பறித்துக் கொடுத்தனுப்பினார்கள் சகோதரர்கள் இருவரும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment