ப்ருந்தாவனமே உன் மனமே - 41
வைகுண்ட தரிசனம்
வேண்டும்போதெல்லாம் மாயையை ஏவி, தன் நெருங்கிய வட்டத்திலுள்ளோரைத் தன்னை உணராமல் செய்வதால்தான் அவதார புருஷர்களுக்கு அவர்களது லீலை தடையின்றி நிறைவேறுகிறது. அவர்களை முழுதுமாய் உணர்ந்தவர் எவரேனும் இருப்பின், அவரும் அந்த அவதார புருஷருக்குத் துல்யமானவராகவே இருந்து விடுவதால், லீலா ரஹஸ்யம் வெளியில் வருவதே இல்லை.
இப்போது நந்தனுக்கு வருணலோகம் போய்வந்தது கனவுபோல் இருந்தது.
மற்ற கோபர்கள் நந்தனைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க ஆரம்பித்தார்கள்..
எங்க போயிருந்தீங்க?
வருணலோகம்னு நினைக்கிறேன் என்றான் ப்ரமிப்பிலிருந்து விடுபடாதவனாய்..
அங்க என்ன பாத்தீங்க?
விட்டு விட்டு நடந்தவற்றை ஒருவாறு சொல்லி முடித்தான் நந்தன்.
அப்ப கண்ணன் பகவானா?
அப்படித்தான் போல.. நாமதான் ஸாதாரணமா பழகறோம்..
அப்படின்னா நமக்கும் வைகுண்டத்தை காட்டுவானா?
அவன் கிட்ட கேட்டு பாக்கலாம்.
பகவானைத் தோழராக அடைந்தவர்க்கு வைகுண்டம் சுற்றுலாத்தலம் போலாகிவிட்டது..
கண்ணன் காதில் என்னதான் விழாது?
கேட்டுக்கொண்டே வந்துவிட்டான்..
என்ன?
கண்ணா இவங்களுக்கெல்லாம் வைகுண்டத்தைப் பாக்கணுமாம்.
கண்ணன் அழகாக முறுவலித்தான்.
அவனது முறுவலைக் கண்டு, யோகிகளுக்கும் கிட்டாத ஸமாதி நிலைக்குச் சென்றனர் கோபர்கள்.
ஸமாதி நிலையிலிருந்த படியே அவர்களுக்கு வைகுண்ட தரிசனம் செய்வித்தான் கண்ணான்.
அங்கே ஸ்வர்ணமயமான பீடத்தில் கருநீலமணியாய் வீற்றிருக்கும் க்ருஷ்ணனையும் கண்டனர்.
நான்கு வேதங்களும் துதிக்க பரமாத்மாவாய் விளங்கும் கண்ணனைப் பார்த்து மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.
பின்னர் அவர்களது ஸமாதி நிலையைக் கலைத்து இயல்புக்குக் கொண்டு வந்தான் க்ருஷ்ணன்...
ஒவ்வொரு நாளும் பல அற்புதமான லீலைகளை நிகழ்த்தும் பகவான், தன் இயல்பை எப்போதாவதுதான் அதுவும் சிலருக்கு மட்டுமே புரிய வைக்கிறான்.
அதுவும் அவனாகப் புரியவைத்தால் மட்டும்தான் அவர்களுக்கும் புரிகிறது.
இத்தனையும் பார்த்த பிறகு கண்ணனைப் பற்றி வியந்து பேசிக்கொண்டே கோபர்கள் அவரவர் அலுவலைப் பார்க்கச் சென்றதுதான் கண்ணனது மாயையின் ஸாமர்த்தியம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment