ப்ருந்தாவனமே உன் மனமே - 35
அகங்காரத்தால் விளைந்த பிழை
மலை உம்மாச்சி எல்லாவற்றையும் விழுங்கியதும், மீதி ஆங்காங்கே விடப்பட்டிருந்ததை ப்ரசாதமாக எடுத்துக்கொண்டு, வந்ததைப் போலவே இன்னும் மகிழ்ச்சி பொங்க ஆடி ப் பாடிக் கொண்டு அவரவர் வீட்டை அடைந்தனர்.
அன்று முழுவதும் மலையப்பனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.
இந்திரலோகத்தில் தேவேந்திரன் கோகுலத்திலிருந்து இன்று தனக்கு வரப்போகும் உணவுகளை நினைத்துப் பெரும் கற்பனையிலிருந்தான். பூமியில் எவ்வளவோ யாகங்களிலிருந்து அவனுக்கு ஏராளமான உணவுகள் கிடைத்துக் கொண்டிருந்த போதும், கோகுலத்திலிருந்து வரும் உணவுகளின் தரத்திற்கும், ருசிக்கும் அவையெல்லாம் ஈடாகா.
மேலும் தேவலோகத்தில் ஒருவருக்கும் பசி, தாகம், தூக்கம் எதுவும் கிடையாது. உள்ளே நுழையும்போது அவரவர் புண்யபலனுக்கேற்ப சிறிதளவு அம்ருதம் கொடுக்கப்படும். அவ்வளவுதான்.
பசியில்லை என்பதால் அங்கு எவ்வித உணவுகளுக்கும் வழியில்லை.
பசியுமில்லை, தூக்கமுமில்லை என்றால் அதற்கு ஸ்வர்கம் என்று பெயரோ? என்னதான் செய்வார்கள் தேவலோகவாசிகள்? எப்போதும் ஏதாவது நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு பொழுதைக் கழிக்க வேண்டியது தான் போலும்.
எனவே, கோகுலத்திலிருந்து உணவு வரும் தேதியை இந்திரன் நன்கு நினைவில் வைத்துக்கொண்டு ருசியான உணவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.. ஒன்றும் வருவதற்கான அறிகுறியே இல்லை.
ஏன் கோகுலத்திலிருந்து உணவு வரவில்லை?
வரும் மஹராஜ். சற்று காத்திருக்கலாம்.
ஏதாவது அசந்தர்ப்பம் என்று யாகத்தை வேறு நாளைக்கு ஒத்திப்போட்டிருப்பார்களோ?
காத்துக் காத்துப் பார்த்து ஒரு தேவனை என்ன நடக்கிறதென்று பார்த்து வரும்படி அனுப்பினான்.
அவன் போன வேகத்தில் திரும்பி வந்தான்.
மஹராஜ், இன்று கோகுலத்தில் ஒன்றும் நடக்கவில்லை. ஒரு சிறுவனாம். அவனை பகவான் என்கிறார்கள். அவன் யாகத்தை நிறுத்திவிட்டு, மலைக்குப் பூஜை என்று ஆரம்பித்திருக்கிறான். அந்த மலையே ஸ்வாமியாய் வந்து எல்லா உணவுகளையும் உண்டுவிட்டது. இனி நமக்கு அங்கிருந்து ஒன்றும் வரப்போவதில்லை..
தேவேந்திரனின் முகம் கோபத்தால் சிவந்தது.
இடிபோல் முழங்கினான்
சீ, மனிதர்கள்!
அவர்களது புத்தியைக் காட்டி விட்டார்கள். தேவேந்திரனிடமே விளையாடுகிறார்களா?
பகவானாய் இருந்தால் என்ன? கேவலம் மனிதப்பிறவிதானே எடுத்திருக்கிறான்? என்னை மதியாமல் யாகத்தை நிறுத்துவானா?
நான் யாரென்று காட்டுகிறேன்.
தேவலோகமே அவனது கோபத்தைப் பார்த்து நடுநடுங்கியது..
ஹே! வருணதேவா!
நீர் ப்ரளயகால மேகங்களைத் திரட்டி அந்த கோகுலத்தின் மீது கல்மழையாய்ப் பொழிந்து, ஒருவர்கூட மிச்சமின்றி அழித்துவிடும்
என்று உத்தரவிட்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment