ப்ருந்தாவனமே உன் மனமே - 38
கருணை மழை
ஏழு நாட்களாக, இரவு பகலாகக் கண்ணனோடு...
நினைத்துப் பார்க்கப் பார்க்க ஆனந்தம்.. இந்திரன் கொட்டும் மழையை விட அதிகமாய்க் கரை புரண்டோடுகிறது.
என்ன நடக்கிறது? கோகுலம் முழுதுமாய் அழிந்துவிட்டதா? கண்ணன் தன்னிடம் மன்னிப்பு வேண்டத் தயாரா? என்பதையெல்லாம் அறிந்துவர ஒரு தேவனை அனுப்பினான் இந்திரன். போன வேகத்தில் தலை தெறிக்க ஓடிவந்தான் அந்த தேவன்..
அவன் பின்னாலேயே பஞ்சத்தில் அடிபட்டவன் போல் வந்த வருணனை இந்திரனுக்கு அடையாளம் கூடத்தெரியவில்லை.
யார் இவன்? நீ ஏன் இப்படி ஓடி வருகிறாய்? கண்ணன் எப்போது மன்னிப்பு கேட்பான்? என்று அந்த தேவனைப் பார்த்துக் கேட்டான் இந்திரன்.
ப்ரபோ என்று ஓடிவந்து காலில் விழுந்த வருணனை யாரென்று உணர்ந்த இந்திரன் அதிர்ந்து போனான்.
என்னவாயிற்று?
சொல்லுங்கள். என்னதான் நடந்தது? கண்ணனின் ஆணவம் அடங்கிற்றா இல்லையா?
தேவன் தயங்கி தயங்கிச் சொன்னான்.
அவர் பகவானேதான் ப்ரபோ. கோவர்தன மலையைத் தூக்கிக் குடைபோல் பிடித்துக் கொண்டார். அதனடியில் அனைவரும் சௌக்கியமாய் இருக்கின்றனர்.
ஏழு நாட்களாகவா?
ஆம் ப்ரபோ. ஏழென்ன? இன்னும் எத்தனை நாள்களுக்கு வேண்டுமானாலும் பகவான் மலையைப் பிடித்துக் கொண்டிருப்பார் போலும்.
வருணன் தொடர்ந்தான்.
எவ்வளவு இடி இடித்தபோதும், கல்மழையாய்க் கொட்டியபோதும் ஒரு சிறிய கன்றுக்குட்டியின் வால் நுனியில் உள்ள முடிக்குக்கூட ஒரு சேதமும் ஏற்படுத்த முடியவில்லை.
என்னிடம் மேகங்களின் இருப்பு தீர்ந்துவிட்டது. இப்போது உண்மையாக ப்ரளயத்திற்கல்ல பருவ மழைக்கு ஆணையிட்டால்கூட என்னிடம் மேகங்களின் கையிருப்பு இல்லை. என் சக்தியனைத்தும் இழந்துவிட்டேன்.
பகவானின் கருணை மழைக்கு முன்னால் நான் கொட்டிய ப்ரளய மழை தோற்றுவிட்டது..
தலைமீது கையை வைத்துக்கொண்டு என்ன செய்கிறோம் என்று கூடத் தெரியாமல் தரையிலேயே அமர்ந்துவிட்டன் இந்திரன்.
பெரிய தவறு நேர்ந்துவிட்டது.
பேசாமல் பகவானிடம் சரணடைந்து விடுங்கள் ப்ரபோ.
என்றார் அக்னி.
அவ்வப்போது அக்னியை பகவான் குடித்துவிடுவதால் அவருக்கு நல்ல அனுபவம்போலும்.
ஏதாவது மஹரிஷியிடம் அபசாரப்பட்டால் அவர் சபித்துவிடுவார். ஆனால்,
பகவான் கருணை உள்ளம் கொண்டவர். மன்னிப்பு வேண்டினால் போதும். இரங்கி அருள் செய்வார் என்றார் வாயு.
இதனால் தன் இந்திர பதவிக்கு ஆபத்து நேரலாம் என்பதை நினைத்தாலே இந்திரனுக்கு கதி கலங்கிற்று.
ஐராவதத்தை அழைத்து, ஆகாச கங்கையை எடுத்துவரப் பணித்தான்.
காமதேனுவை அழைக்க, அவளோ தன் செல்வங்களான பசுக்களையும் கன்றுகளையும் அழிக்கத் துணிந்தான் இந்திரன் என்று கடும் கோபத்திலிருந்தாள்.
இருந்தாலும் பகவானைப் பார்க்க என்றதும் ஒன்றும் சொல்லாமல் சட்டெனக் கிளம்பினாள்.
இதற்குள் மழை விட்டுவிட, கண்ணன் அனைவரையும் தத்தம் வீடுகளுக்குச் செல்லும்படி பணித்தான். அவர்கள் வீடு போய்ச் சேர்வதற்குள்,
தன் அம்ருத கடாக்ஷத்தினாலேயே மழையினால் ஏற்பட்ட சேதங்களைச் சரி செய்து முன்போலாக்கி விட்டிருந்தான். கோபர்கள் வீடு திரும்பினால், அங்கு மழை பெய்த சுவடே இல்லை.
எல்லாரும் போய்விட்டதை உறுதி செய்துகொண்டு, மலையை மறுபடி மேல் நோக்கி வீசிவிட்டு வெளியில் ஓடிவந்து நின்றுகொண்டான்.
மேலே சென்ற மலை, கண்ணன் வெளியேறியதும், முன்பு எப்படி இருந்ததோ அதேபோல் பூமியில் அமர்ந்தது.
கண்ணனுக்கு கைங்கர்யம் செய்துவிட்டுத் திரும்பிய தன் மலைக் குழந்தையை பூமிதேவி ஆசையுடன் பூப்போல் ஏந்திக்கொண்டாள்.
இந்திரன் மன்னிப்பு கேட்க வருவான் என்பது கண்ணனுக்கு நன்றாகத் தெரியும்.
பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறிழைத்தால் அவர்கள் திருந்தும்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச் செய்தால், அவர்களது மரியாதை குறைந்துவிடும்.
ப்ரும்மா தன் தவற்றை உணர்ந்த போதும் கூட அவரைத் தனியாகத் தான் சந்தித்தான் பகவான். இப்போதும் தனியாக கோவர்தன மலைமீதேறி, உச்சியிலிருந்த ஒரு கல்லின்மீது ஒரு காலைமடித்து தக்ஷிணாமூர்த்தி போல் அமர்ந்துகொண்டு தேவேந்திரனுக்காகக் காத்திருக்கிறான் கோபாலன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment