ப்ருந்தாவனமே உன் மனமே - 36

பொங்கு கருணை

ஆடிப்பாடிக் கொண்டு வீடு வந்து சேர்ந்த கோபர்கள், மகிழ்ச்சியோடு தத்தம் வேலைகளை கவனிக்கத் துவங்கினர்.

உச்சி வேளை தாண்டி சற்று நேரம்தான் ஆகியிருந்தது.
திடீரென, சூரியன் அஸ்தமனமாகிவிட்டானோ‌ என்றெண்ணும்படி‌ எங்கும்‌ இருள்‌ சூழ்ந்தது. இத்தகைய கருமேகங்களை‌க் கண்டதேயில்லை. 
ப்ரளயகால மழையோ என்னும்படி, பெரிய பெரிய கற்களாக‌ பனிமழை‌ பெய்யத் துவங்கியது. நீர்த்தாரை ஒவ்வொன்றும் இரணியன்‌ வீட்டுத் தூணைப்போல்‌ இருந்தது. மேலே‌ ஒரு தாரை விழுந்தாலும், எலும்பு முறிந்து விடும் போல் வலித்தது.

ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை‌. கண்ணன் ஊர்க்கடைசியில் உள்ள ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

மாடுகளும் கன்றுகளும்‌ மிரண்டுபோய் அலறின.

கிடுகிடுவென்று வீடுகளுக்குள் அழையா விருந்தாளியாய் நீர் புகுந்து ஆக்கிரமித்தது. 

என்னவென்று பார்ப்பதற்குள், தெருக்கள் முழுவதும் இடுப்பளவு மழைவெள்ளம். 

சந்தோஷமோ, துக்கமோ, ஸாதாரண நாளோ, கோகுலவாசிகளின் வாயில் ஒரே ஒரு நாமம்தான் வருகிறது.. 
கண்ணுக்குள் வைத்துக் காக்கும் 
கண்ணா.. என்னும் திருநாமம்..

அனைவரும் குழந்தைகளையும் கன்றுகளையும் தோளின் மீது சுமந்து கொண்டு, கண்ணன் எங்கிருக்கிறான் என்று தேடினர்.

ஒருவாறாக கண்ணனைக் கண்டதும் ஏதாவது சொல்லவேண்டுமே..

கண்ணா மழை வந்து விட்டது..

எங்களைக் காப்பாற்று.

யாகத்தை நிறுத்தியதால் தான் வந்தது...

நீதான் இந்தத் துன்பத்திற்கு காரணம்..

சொல்வதா, அவர்கள் யாரும் அப்படியேல்லாம் நினைக்கக்கூட இல்லை.

அந்தர்யாமியான கண்ணன், இச்சமயத்தில், ஒவ்வொருவர் மனதிலும் நுழைந்து நுழைந்து பார்க்கிறான்..
யாரேனும் ஒருவராவது தன்னைக் குற்றம் சொல்ல‌மாட்டார்களா என்று..

இந்த விஷயத்தில் கண்ணன் தோற்றுத்தான் போனான். 

இப்படி அன்பு செலுத்த ஒரு கூட்டம் கிடைத்தால், இறைவன் அவர்களுக்காக என்னதான் செய்யமாட்டான்?

எல்லோரும் கண்ணனைப் பார்த்ததே போதும் என்று பேசாமல் நிற்க,

அவர்களது எண்ண ஓட்டம் 
அப்பாடா, இந்த மழையினால் கண்ணனுக்கு ஒன்றும் துன்பம் நேரவில்லை. அவன் பத்திரமாக இருக்கிறான் என்பதே...

இதை கவனித்த கண்ணன்,

இவர்கள் என் மக்கள், என்னை நாதனாய் உடையவர்கள், நான் காப்பாற்றாமல் யார் காப்பாற்றுவார் என்று மார்தட்டிக் கொள்கிறான்.

எல்லோரையும் பார்த்து, 

எல்லாரும் என்கூட வாங்க...
நாம கோவர்தன மலைக்கு போவோம். நம்மை அந்த மலை காப்பாத்தும்.

சொல்லிவிட்டு விடுவிடென்று நடந்தான்.
அவன் பின்னால், கோகுல வாசிகள் அனைவரும் நடந்தனர்.

மாடுகள் மகிழ்ச்சியோடு குதித்துக் கொண்டு பின் தொடர்ந்தன.

மலையடிவாரத்தை அடைந்ததும், கண்ணன் எல்லாரையும் பார்த்து,

எல்லாரும் கண்ணை மூடி ஒரு நிமிஷம் மலை உம்மாச்சியை வேண்டிக்கோங்க

என்றான்்.

அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு கரம் குவிப்பதற்குள், இடிபோல் 
பெரும் சத்தமொன்று கேட்டது‌. குரல் கொடுத்தான்..

எல்லாரும் இங்க வாங்க..

கண் திறந்து பார்த்தால் அங்கே, குட்டிக் கண்ணன் பட்டு விரலால், அதுவும் சுண்டு விரலால் மலையைத் தூக்கிக் கொண்டிருந்தான்.

மலையை எப்படித் தூக்கினான்?
யோகப் ப்ரபாவமா? 
இல்லையில்லை..
த்ருணாவர்த்தனை அழித்தது வேண்டுமானால் யோகப்ரபாவமாய் இருக்கலாம்.

தன்னை அண்டி ஒரு சிறு குற்றம் கூட காணாத இப்படி ஒரு கூட்டம் என்று மகிழ்ச்சியால், பொங்கி வந்த கருணையால், 
என் மக்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற பேரன்பினால், சிறுவர்கள் நாய்க்குடையைப் பிடுங்குவது போல், மலையைத் தூக்கினான்.
கோவர்தனத்தின் அடிவாரத்தில் சென்று ஒரு உதை விட்டான். பகவானின் பாதம் பட்டதும், மலைக்கு யோகப்ரபாவம் வந்துவிட்டது. அது அழகாக குடைபோல் மேலே கிளம்ப ஓடிச்சென்று அடியில் ஒரு உயரமான கல்லின் மீது நின்றுகொண்டு சுண்டு விரலால் ஏந்தினான்.

அறிவொன்றுமில்லாத ஆயர்கூட்டம், மலையை ஒருவரால் தூக்க முடியுமா என்ற எண்ணம் கூட எழாமல், 

குட்டிப்பையன் கீழே போட்டால் அனைவரும் சட்டினியாவோம் என்று பயப்படாமல்,

கண்ணன் அழைத்தால் எங்கு வேண்டுமானாலும் ஒரு கேள்வியின்றி பின்பற்றிக்கொண்டு மலையின் அடியில் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

இந்த கிரிதாரியை அனுபவித்து ஸ்ரீ ஸ்வாமிஜி
அவர்கள் அநேக கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்கள்.
அந்த கீர்த்தன‌ ரத்தினங்களுள் ஒன்று பின் வருமாறு

பாஸுரம்

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
என்தம்மோடு இன ஆநிரை தளராமல்
எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரியால் மழை தடுத்தானைத்
திருவல்லிக்கேணி கண்டேனே || (விற்பெருவிழவும்: 4)

ராகம் : பிலஹரி
தாளம் : ஆதி³

எல்லோரும் வாருங்கள் - மலையைத் தூக்கும்
மாயனிவனைக் காண || எ ||

பொல்லாத இந்திரனும் நல்ல ஆயர்குலத்தை
அல்லல் படுத்தியதைக் கண்டு ஸகியாத பகவான்
கைவிடேன் என்று வாயினால் சொல்லாமல்
கையினால் மலையைத் தூக்கிக் காட்டினானே || எ ||

ஆயனும் இவனே மாயனும் இவனே
நல்லோர்களின் தவப் பயனும் இவனே
பசுபதியும் இவனே வசுபதியும் இவனே
மாசில்லாத பக்தரிடம் உறைபவனும் இவனே || எ ||

இந்திரனின் கர்வத்தைக் குலைத்து பதவியை தந்தான்
பக்தனின் ஆர்வத்தை வளர்த்துக் காப்பான்
ஆயர்களின் இந்திர வ்ரதத்தை கை விடச் சொன்னான்
கைவிட்ட அவர்களைக் கைவிடாமல் காத்தான் || எ ||

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37