ப்ருந்தாவனமே உன் மனமே - 49

எங்கும் கண்ணன்

பிரிந்தவர் கூடினால் பேச இயலுமா?
கண்ணன் ஆவிர்பவித்ததும், கோபிகளுக்கு இறந்த உடலில் உயிர் மீண்டும் புகுந்தாற்போலாயிற்று..
சட்டென்று அனைவரும் எழுந்தனர். அப்படியே ஸ்தம்பித்துப்போய் எவ்வளவு நேரம் கண்ணனைப் பார்த்துக் கொண்டே நின்றார்களோ தெரியாது.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வு வந்ததும் ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டப்படி கண்ணனோடு விளையாட விரும்பினர்.
கண்ணன் அனைவரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய விரும்பி, எத்தனை கோபிகைகள் இருந்தார்களோ அத்தனை வடிவங்கள் எடுத்துக் கொண்டான்.

அவர்கள் பார்க்குமிடமெல்லாம் கண்ணனின் அழகுருவமே தெரியும்படியான லீலை செய்தான்.
கோபி இடது, வலது, முன், பின் என எந்தப் பக்கம் திரும்பினாலும் அவளுக்காக அங்கொரு கண்ணன் இருந்தான் என்றால், அக்காட்சியை சற்று நினைத்துப் பாருங்கள்.

கிட்டத்தட்ட மூவாயிரம் கோபிகளுக்கு மேல் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு கோபிகளுமே கோகுலத்தைச் சேர்ந்தவரா, அல்லது ராஸத்திற்கு ஆசைப்பட்டு கோபி உருவில் வந்த தேவரோ, ரிஷியோ, எவரோ தெரியாது.
அந்த இரவுப் பொழுது கால வரையறையற்றது.

அதன் பின்னர் ஒவ்வொரு இரவிலும் ராஸம் நடப்பதாக ப்ருந்தாவன மாஹாத்மியம் சொல்கிறது.

இன்றும் ப்ருந்தாவன யாத்திரை சென்றால் அங்கு நித்ய ராஸம் நடைபெறும் இடமாக நிதுவனம் என்ற ஸ்தலம் உள்ளது. 

மாலை 6 மணிக்குமேல் யாரும் உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. தினமும் சுத்தம் செய்யப்பட்டு மாலை பூட்டப்படும். இருப்பினும் காலை திறக்கும்போது அவ்விடத்தில் நிறைய பூக்கள் இரைந்திருப்பதைக் காணலாம். அதைச் சுத்தம் செய்ய பெரிய இடத்து மனிதர்களெல்லாரும் போட்டி போடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அப்பூக்கள் ப்ரஸாதமாகவும் வழங்கப்படுகின்றன.

இந்த விஷயத்தை உண்மையா என்று சோதிக்கும் மனநிலையுடன் நிதுவனத்தில் இரவு தங்குபவர்களுக்குப் பார்வை பறிபோய்விடுவது நிதர்சனமான உண்மை. திவ்யமான ராஸத்தைக் கண்டபின்னர், பொய்யான இந்த உலகின் தரிசனம் எதற்கு என்று கண்ணன் பார்வையைப் பறித்துவிடுகிறான் போலும்.

இந்த நிதுவனத்தினுள்ளே ஸ்வாமி ஹரிதாஸ் என்ற மஹாத்மாவின் ஸமாதியும் இருக்கிறது.

பரமேஸ்வரனும் கண்ணனின் இந்த லீலையைக் கண்டு பரவசமடைகிறார்.

குஜராத் மாநிலத்தில் ஒரு ஓரத்திலிருந்து, தன்னிடம் அடைக்கலமாக வந்த சிறுவனான நரஸி மேத்தாவை, தன் யோக சக்தியினால் ராஸத்தைக் காண அழைத்து வந்து அவனைக் க்ருஷ்ணபக்தனாக்கினார் நமது சிவனார்.


https://googleweblight.com/i?u=https://www.tourmyindia.com/blog/the-mysterious-nidhivan-in-vrindavan-and-its-popular-tales/&grqid=6BeSnv7q&hl=en-IN

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுரகீதம்..

ராகம் : ஸாமா
தாளம் : ஆதி

1) அங்கொரு கண்ணன் இங்கொரு கண்ணன்
எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன்
அங்கொரு கோபீ இங்கொரு கோபீ
எங்கும் கோபீ எதிலும் கோபீ

2) சல சல யமுனை பள பள பட்டாடை
குளு குளு சந்திரன் கல கல நூபுரம்
கள்ளமில்லா ராஸ நடனமும் நடந்தது
கண்டனர் களித்தனர் கண் கொண்டவரே

3) கண்ணனின் மடியில் கோபீ தானே
கோபியின் மடியில் கண்ணன் தானே
கண்ணனின் கழுத்தில் கோபியின் கைகள்
கோபியின் கழுத்தில் கண்ணனின் கைகள்

4) கண்ணனின் கன்னத்தில் கண்களில் கருத்தினில்
கோபியே கோபியே
கோபியின் கன்னத்தில் கண்களில் கருத்தினில்
கண்ணனே அந்தக் கண்ணனே

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37