ப்ருந்தாவனமே உன் மனமே - 40
நந்தன் எங்கே?
அம்மாவோடு கதை பேசிக்கொண்டே சாப்பிட்டு, ராமனின் பாலலீலைகளைக் கேட்டுக்கொண்டே ஊம் கொட்டிக்கொண்டு உறங்கிப் போனான் கண்ணன்.
காலையில் எழுந்ததிலிருந்து யசோதா கவலையுடனுடனும் படபடப்புடனும் காணப்பட்டாள்.
கவனித்துக்கொண்டேயிருந்த கண்ணன், மெதுவாகத் தாயின் பின்னாலேயே சென்றான்.
வாசலுக்கும் உள்ளுக்குமாகப் பத்து முறை நடந்தாள்.
அம்மா என்னாச்சும்மா?
திரும்பிக் கண்ணனைப் பார்த்தாள்.
ஒன்னுமில்ல கண்ணா, அப்பா எங்க போனார்னு தெரியல..
உங்ககிட்ட சொல்லிட்டு போகலியா?
எங்க போனாலும் சொல்லிட்டுத்தான் போவார். இன்னிக்கு அதிகாலைலயே வெண்ணெய் கடையறப்பவே காணோம்.
இப்ப வந்துடுவார் வந்துடுவார்னு பாத்தா இன்னும் காணோம்.
வேலைக்காரங்ககூட யாருமே பாக்கலையாம்.
சற்று வித்தியாசமாகப் படவே, கோபாலன் தன் ஞான த்ருஷ்டியால் தேடினான்.
அதிகாலை இரண்டு மணிக்கே சேவல் போல் கூவி நந்தனை எழுப்பிவிட்டு, அவர் அன்றைக்குப் பார்த்து நதி ஸ்நானம் செய்யப்போக வருணன் அவரைப் பிடித்துக்கொண்டு போய் விட்டிருந்தான்.
கடும் கோபம் வந்தது கண்ணனுக்கு..
அம்மா அப்பா எங்க இருக்கார்னு எனக்குத் தெரியும். நான் போய் கூட்டிட்டு வரேன். நீங்க கவலைப்படாதீங்க..
சொல்லிவிட்டு வேகமாய்ப் புறப்பட்டான்.
நேராக யமுனைக்குச் சென்று கடம்ப மரத்தின் மீதேறி துள்ளிக் குதித்தான். யமுனையின் வழியாகவே வருண லோகம் சென்றால்,
அங்கே, வருணன் கண்ணனை வரவேற்க மேள தாளங்களுடனும், பூரண கும்பத்துடனும், மாலைகளுடனும் வாசலிலேயே காத்திருந்தான்.
அவனது உபசரிப்பினால் சற்று கோபம் தணிந்தான் கண்ணன்.
என் தந்தை எங்கே?
இங்குதான் இருக்கிறார் ஸ்வாமி!
அவரைக் கவர்ந்து வரும் அளவுக்குத் துணிந்துவிட்டீரா? இந்திரனுடன் சேர்ந்து உமக்கும் கர்வம் தலைக்கேறிவிட்டதா?
இல்லை ஸ்வாமி..
ஏற்கனவே தேவேந்திரனின் ஆணையினால் உம்மிடத்தில் பெரிய அபசாரப்பட்டுவிட்டேன். நீங்கள் பாற்கடலில் இருந்தால் வருணலோகம் வரமாட்டீர்கள். விபவாவதாரத்தில் என் இடத்திற்கு வந்தால்தான் உண்டு. தங்களை இங்கு வரவழைக்கவே இவ்வாறு செய்தேன்.
மேலும் தங்கள் தந்தையும் ராக்ஷஸ வேளையில் நதியில் ஸ்நானம் செய்ய வந்தார். எனவே சுலபமாக அழைத்து வந்து விட்டேன். நீங்கள் வருண லோகம் வந்தது எனக்கு பெரும் பாக்யம்..
நீங்களும் தந்தையும் இருந்து என் உபசரிப்பை ஏற்க வேண்டும்.
நந்தனுக்கு ஒன்றுமேபுரியவில்லை. கண்ணனைக் கண்டதும் அவருக்கு ஆறுதல் உண்டாயிற்று.
தந்தையும் பிள்ளையும் வருணனின் உபசரிப்பை ஏற்றுப் பின் கிளம்பினர்.
வழியெல்லாம் அதைப் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்த நந்த பாபா, வீடு வந்ததும் கண்ணனின் சிரிப்பினால் வழக்கம்போல் அனைத்தையும் மறந்தார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment