ப்ருந்தாவனமே உன் மனமே - 50
கால் வண்ணம்
பதினான்கு வருடங்களே கோபர்களோடு வசித்தான் கண்ணன். ராமாவதாரத்தின்போது பதினான்கு வருடங்கள் காட்டில் அலைந்து துன்புற்றதால், இப்போது அடுத்த அவதாரத்தில் காட்டில் இன்பம் காண்கின்றான் போலும்.
ஒருநாள் சற்று தொலைவிலிருந்த அம்பிகா வனம் என்ற இடத்திற்கு நந்தன் பரிவாரங்களோடு மாட்டு வண்டிகளில் சென்றான். அங்கு பரமேஸ்வரனுக்கும், அன்னைக்கும் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. தானங்களும் சிறப்பாகக் கொடுக்கப்பட்டன.
எல்லா வைபவங்களும் முடிந்து மிகுந்த நேரமாகிவிட்டபடியால், வீடு திரும்ப இயலவில்லை.
வனத்தில் இரவு தங்குவது பாதுகாப்பில்லை என்பதால், அனைவரையும் அழைத்துக்கொண்டு வழியிலிருந்த ஸரஸ்வதி நதி தீரத்திற்கு வந்தான் நந்தன்.
அன்று பூஜை முடிந்து விரதமாகையால், அனைவரும் அம்ருதம் போன்ற ஸரஸ்வதி நீரை உட்கொண்டு, ஆற்று மணலிலேயே படுத்துறங்கலாயினர்.
அப்போது திடீரென்று நந்தனை ஒரு மலைப்பாம்பு விழுங்க ஆரம்பித்தது.
வலி தாங்காமல் நந்தன் அலறியதில், அனைவரும் விழித்துகொண்டனர்.
எல்லோரும் கொள்ளிக்கட்டைகளால் பாம்பை அடித்தும் அது நந்தனை விடுவதாயில்லை.
நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டு உறங்கிய கண்ணனைத் தேடி எழுப்பினார்கள்.
வழக்கமாகத் துன்பம் என்று அலறினால், பதறியடித்துக்கொண்டு ஓடிவரும் கண்ணன் நிதானமாக வந்து, ஒரு முறை பாம்பைப் பார்த்தான்.
நந்தனோ கண்ணா காப்பாற்று என்று அரற்றிக் கொண்டேயிருந்தான்.
கண்ணன் நந்தனின் அருகில் சென்று அவனை விழுங்கிக் கொண்டிருந்த பாம்பைத் தன் பட்டுப் பாதத்தினால் ஒரு முறை தீண்ட, அந்தப் பாம்பு சட்டென ஒரு வித்யாதரனாக உருக்கொண்டது.
ராமாவதாரத்தில் நிகழ்ந்ததுபோல் இந்த அவதாரத்திலும்
சாபம் பெற்றவனைத் தன் சரணதூளியால், உய்விக்கிறான் கண்ணன்.
நந்தனின் உடல் ஒரு கணத்தில் முன்போலானது.
மிக அழகாயிருந்த அந்த வித்யாதரன் தான் பாம்புருக்கொண்ட கதையைச் சொன்னான். ஆங்கிரஸ் என்ற விகாரமாய் இருந்த முனிவரைக் கேலி செய்ததால் அவர் பாம்பாகச் சபித்துவிட்டாரெனவும், பகவானின் பாதம் பட்டு விமோசனம் ஏற்படும் என்று கூறியதாகவும் கூறினான்.
அதனாலேயே தான் நந்தனைப் பீடித்ததாகக் கூறி மன்னிப்பும் வேண்டினான்.
பகவான் அவனுக்கு அபயம் அளித்து, அனுப்பி வைத்தான். அனைவரும் காணும் வண்ணம் இறக்கைகளுடன் மிக அழகான ஒரு விமானம் வந்து அந்த வித்யாதரனை அழைத்துச் சென்றது..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment