ப்ருந்தாவனமே உன் மனமே - 45

குழலும் ஊதி வந்தனனே கண்ணன்

காற்றினிலே மிதந்து வரும் கீதம்.
கல்லும் கரையும் கீதம்..
உயிரை உருக்கும் கீதம்..
சுண்டியிழுக்கும் கீதம்..
முரளீதரனின் மோஹன கீதம்

மாற்றி வைத்த பாதங்களோடு உயிரோவியமாய் நின்று கோவிந்தன் குழலூத, செவி‌மடுத்த அனைத்து ஜீவராசிகளும் எழுது சித்திரங்களாகின..
அசைந்தது கண்ணனின் கார்குழலும், உத்தரீயமும், அவனது பட்டு விரல்களும் மட்டுமே...

பகவத் ஸந்நிதானத்திற்கோ, குருவின் ஸந்நிதானதிற்கோ செல்வது நமது எண்ணத்தினால் ஒருபோதும் நிகழ்வதல்ல..

நமக்கு தரிசனம் கொடுக்க அவர்கள் ஸங்கல்பம் செய்துவிட்டால், நம்மை நாமேகூடத் தடுக்க இயலாது..

இப்போது அழைப்பது கண்ணன்..
கோபியரின் பாவை நோன்பிற்குப் பலன் கிட்டும் நேரம் வந்துவிட்டது.

பகவானே கூப்பிடும்போது போகாமல் நிற்கும் கால்கள் உண்டா என்ன?

அத்தனை கோபிகளும்‌ செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு நிலை‌மறந்து சென்றனர்.

அவர்களது ஸ்தூல சரீரத்தை விட்டு விட்டு தெய்வீக உருவில் சென்றனர் என்றும் சொல்லப்படுகிறது. 
ஒரு காதில் குழையணிந்தவள் அப்படியே சென்றாள். ஒருத்தி கழுத்தில் போடுவதை இடுப்பிலும், இடுப்பில் போடும் நகையை கழுத்திலுமாய் அணிந்துகொண்டு ஓடினாள்.
வீட்டு வேலை செய்துகொண்டிருந்தவள் அப்படியே விட்டோடினாள்..

அத்தனை கோபியரும் கண்ணன் சரணத்தில் கூடினர்..

அனைவரும் வந்திருப்பதைப் பார்த்துவிட்டு, நமுட்டுச் சிரிப்போடு வாசிப்பை நிறுத்தினான் கண்ணன்...

வாங்க வாங்க..
என்ன எல்லாரும் இந்த ராத்திரி வேளைல வந்திருக்கீங்க...

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

நீங்க எல்லாரும் வந்தது ரொம்ப சந்தோஷம். ஆனா இப்படி வீட்டையெல்லாம் போட்டது போட்டபடி விட்டுட்டு கிளம்பி வரலாமா?

கண்ணா, நீ தான் கூப்பிட்டங்கறதை உன்னால் மறுக்க முடியாது.
எப்பவும் நீ எங்களை வா வா ன்னு சொல்வியே தவிர இன்னிக்கு என்ன மாத்திப் பேசற?

அதில்ல. இது காடு. இரவு வேளைல காடு எப்படியிருக்கும் தெரியுமா? இங்க கொடிய மிருகங்கள்ளாம் நடமாடும். வீட்டுல எல்லாரும் என்ன நினைப்பாங்க?
எல்லாரும் திரும்பிப் போங்க..

கண்ணா, நீ பகவான்னு எங்களுக்குத் தெரியும். நீதான் எங்களோட எல்லா உறவும். இதை நீயே எத்தனை தரம் சொல்லியிருக்க? 
எங்களை மக்குன்னு நினைச்சியா?
இல்ல. வெறும் முக்திக்கு ஆசைப்பட்டு வந்தோம்னு நினைச்சியா?
எங்களைப் போ ன்னு சொல்ற அளவுக்கு உன் மனசு கல்லாயிட்டதா?
எங்களுக்கு தர்மோபதேசமெல்லாம் வேணாம். ப்ரேமோபதேசம் தான் வேணும்.
என்று அழ ஆரம்பிக்க, 

கண்ணன் மோஹன முறுவல் பூத்தான்.

இனிதே ராஸம் துவங்கியது..
இந்த லீலையை மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுர கீதம் கொண்டு அனுபவிப்போம்..

ராகம் : ஆனந்தபைரவீ
தாளம் : ஆதி

1) அந்தி நேரம் நதி தீரம் மதி நிறைந்திடும் வேளை
வீடு துறந்து தன்னை மறந்து வந்து நின்றனர் கோபியர்
மாடு மேய்க்கும் கண்ணனையே காட்டின் நடுவில் கண்டனர்
குழலூதி தம்மை அழைத்த காரணத்தையே கேட்டனர்

2) யாரழைத்தது இங்கு உங்களை பாரில் உள்ளோர் நாளை பழிப்பர்
மர்மமாகவே தர்மம் சொல்லி வீடு திரும்பவே வேண்டினன்
ஒன்றுமறியா உத்தமிகளே கன்றுமேய்த்திடும் சிறுவன் நான்
தொன்று தொட்டு வரும் தர்மத்தை மீறி நடப்பதும் அழகாமோ

3) வஞ்சனையாய் அழைத்தெங்களை நீதி போதனை செய்வதேன்
அஞ்சலி செய்து தொழுகின்றோம் போக்கிடுவாய் எங்கள் தாபத்தை
கொஞ்சிக் கொஞ்சி பேசிடும் நீ மாற்றி இன்று பேசுவதேன்
அஞ்சி அஞ்சி வந்து நின்றோம் ப்ராண த்யாகமும் பெரிதல்ல

4) சொந்தமும் பந்தமும் நீயே என்று சொல்லிக் கொடுத்ததும் நீதானே
மந்த மதியினர் என்று எண்ணியே ஏய்த்திட நீ எண்ணாதே
ஆதியும் அந்தமும் இல்லாத நீ சிந்தனைக்கெட்டாத சித்தனன்றோ
வந்து நின்றிடும் எங்களிடம் நீ சற்றே கருணை புரிந்திடுவாய்

5) எல்லாம் அறிந்தவன் ஆயினும் நீ ஒன்று மட்டும் அறியவில்லை
நம்பி வந்தோரைக் கைவிடுதல் பொல்லாத பாபமென்றறியாயோ
அல்லல் அடைந்திடும் எங்களை நீ ஆரத் தழுவி அணைத்திடுவாய்
சொல்லாமலே என்றும் உணர்ந்திடும் நீ சொல்லியும் வேடிக்கை பார்ப்பதேனோ

6) மும்மாயம் கடந்த முகுந்தனும் அங்கு ராஸ நடனம் ஆடினானே
முப்பத்து மூவரும் சூழ்ந்து நின்று மலர்களைச் சொரிந்து மகிழ்ந்தனரே
முக்கண்ணனும் அங்குவந்து ராஸ த்யானத்தில் ஆழ்ந்து விட்டார்
முரளீதரனின் மோஹன நடனத்தில் சொக்காதவரைக் கண்டால் சொல்லு

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37