ப்ருந்தாவனமே உன் மனமே - 51
தேவர்க்கும் கிட்டாத பேறு
தேவேந்திரனின் கர்வத்தை அழித்ததிலிருந்து, தேவர்கள் அனைவருக்குமே பகவான் மீது ஒரு பயம் கலந்த மரியாதை ஏற்பட்டிருந்தது. ஆனால், கண்ணன் வனத்தில் அவ்வப்போது செய்யும் வனபோஜன லீலையை மேலிருந்து பார்த்தால், நாம் பூமியில் பிறக்காமல் போய்விட்டோமே, பிறந்திருந்தால் பகவானோடு இணைந்து விளையாடுவது, எச்சில் சோறு உண்பது போன்ற பாக்யங்கள் கிடைத்திருக்குமே என்ற ஏக்கமும் அவர்களை வாட்டியது.
இன்று கண்ணன் வனத்திற்கு வந்ததும் பச்சைக் குதிரை ஆட்டத்தைத் துவக்கினான்.
எல்லாச் சிறுவர்களும் வரிசையாக சீரான இடைவெளியில் குனிந்து நின்றனர்.
வரிசையின் கடைசியில் இருக்கும் சிறுவன் ஒவ்வொருவரின் முதுகிலும் கையை வைத்து எழும்பிக் குதித்துத் தாண்டிச் செல்லவேண்டும். கடைசிச் சிறுவனைத் தாண்டியதும் அவனும் அடுத்ததாகக் குனிந்து நிற்பான்.
ஒரு தேவன் பொறுத்து பொறுத்து பார்த்தான். இனி தாளாது. இன்றேனும் இறைவனோடு விளையாடியே தீருவது என்ற முடிவுடன் கீழிறங்கினான்.
தானும் ஒரு கோபச் சிறுவன் போல் உருமாறி குனிந்து நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள் வரிசையில் சென்று நின்றுகொண்டான்.
ஒவ்வொரு சிறுவராகத் தாண்டி தாண்டி விளையாட, நமது தேவனின் முறை வந்தது. ஏற்கனவே சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து வைத்துக் கொண்டிருந்ததால், எல்லாச் சிறுவர்களையும் முதுகில் கை வைத்துத் தாண்டி விட்டான். இப்போது வரிசையில் அடுத்ததாகக் குனிந்து நிற்பது யார்? நமது இறைவனாயிற்றே!
இறைவனைத் தொடுவதா? அவன் மீது கை வைப்பதா? அதுவும் தாண்டுவதா? திகைத்துப் போய்விட்டான் தேவன். பயம் வேறு பிடித்துக் கொண்டது.
தலையைக் குனிந்துகொண்டு கண்ணனின் முதுகைத் பட்டும் படாமலும் தொட்டு தொட்டு வணங்கிக்கொண்டு நின்றுகொண்டேயிருந்தான்.
யாரடா அது? எவ்ளோ நேரம் குனியறது. சீக்கிரம் தாண்டுடா என்று அதட்டினான் கண்ணன்.
பலராமன் நிமிர்ந்து பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான்.
அண்ணன் சிரிப்பதைப் பார்த்து நிமிர்ந்த கண்ணனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அவர்களுக்கா தெரியாது வந்தது யாரென்று.
இருப்பினும் சிரிப்பை அடக்கிக் கொண்டு, அதட்டினான் கண்ணன்,
உன்னை யார் இங்கே வரச்சொன்னா?
முதல்லயே பிறந்து வந்திருக்கலாம்ல.
இப்ப பாதில வந்து விளையாட்டைக் கெடுக்காதே, ஓடு, போய் ஓரமா நில்லு என்றான்.
ஏதோ இதுவரையிலாவது இறைவனின் அனுக்ரஹம் கிட்டியதே, பகவான் திட்டாமல் விட்டானே அதுவே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினான்.
சிரித்துக்கொண்டே விளையாட்டைத் தொடர்ந்தனர் கண்ணனும் பலராமனும்.
தேவர்களுக்கும் கிட்டாத பேறு அறிவொன்றுமில்லாத ஆயர் சிறுவர்களுக்குக் கிடைத்தது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment